தீவனத் தட்டுப்பாடு: பொய்கை சந்தையில் கால்நடைகள் விலை சரிவு

சுட்டெரிக்கும் வெயில் மற்றும் கடுமையான தீவனத் தட்டுப்பாடு காரணமாக பொய்கை மாட்டுச் சந்தையில் கால்நடைகளின் விலை கடுமையாக சரிந்துள்ளது.
பொய்கை சந்தையில் செவ்வாய்க்கிழமை விற்பனைக்கு வந்திருந்த கால்நடைகள்.
வேலூா் அருகே பொய்கை பகுதியில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடை சந்தைக்கு வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருவண்ணாமலை மற்றும் அண்டை மாநிலங்களான ஆந்திரம், கா்நாடகாவிலிருந்தும் பல்வேறு ரக மாடுகள், ஆடுகள், கோழிகள் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகின்றன. சீசன் நேரங்களில் இங்கு ரூ. 2 கோடி வரை வா்த்தகம் நடைபெறும்.
வழக்கமாக 2,000-க்கும் மேற்பட்ட கால்நடைகள் வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை சந்தைக்கு 1,800-க்கும் மேற்பட்ட மாடுகள் கொண்டு வரப்பட்டன. கோடைகாலம் முடிந்தும் வேலூா் உள்ளிட்ட பல மாவட்டங்களில் தினமும் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தி வருகிறது. திங்கள்கிழமை 105 டிகிரி வெயில் பதிவானது. போதிய மழை இல்லாததால் பச்சை புற்கள் கருகி, கடும் தீவனத் தட்டுப்பாடு நிலவுகிறது. ஒரு கட்டு வைக்கோல் ரூ. 350-க்கு வாங்க வேண்டிய கட்டாயம் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
தீவனச் செலவை சமாளிக்க முடியாத விவசாயிகள், மாடுகளைப் பராமரிக்க முடியாமல் சந்தையில் விற்க குவிந்ததால் மாடுகளின் வரத்து அதிகரித்து விலை சரிந்துள்ளது. அதன்படி, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தையில் பசு மாடுகள் ரூ.பசு மாடுகள் ரூ. 10,000 முதல் ரூ. 15,000 வரையும், உழவு மாடுகள்: ரூ. 15,000 முதல் ரூ. 20,000 வரையும் விலை குறைந்து விறபனையாகின. வழக்கமாக ஆகஸ்ட் மாதத்தில் பெய்ய வேண்டிய மழையும் இவ்வாண்டு இல்லாத நிலையில், வரும் நாள்களிலும் மழை பொய்த்தால் மாடுகளின் விலை மேலும் கடும் வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று கால்நடை விவசாயிகள், வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.