கூட்டுறவு சங்கங்களின் இருப்பு சேலைகளை தமிழக அரசு உடனடி கொள்முதல் செய்ய வேண்டும் திண்டுக்கல் எம்.பி., சச்சிதானந்தம் பேட்டி
விருதுநகர்: கூட்டுறவு சங்கங்களின் இருப்பில் உள்ள சேலைகளை அரசு கொள்முதல் செய்யவில்லை, தேக்கமடைந்த சேலைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும், என விருதுநகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் எம்.பி., சச்சிதானந்தம் தெரிவித்தார்.
விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு புதிய ரக சேலைகளை உற்பத்தி செய்ய அறிவுறுத்தியுள்ளது. ஆனால், புதிய ரக சேலைகளை நெய்வதற்கு தறிகளை புதுப்பிக்க வேண்டியுள்ளது.
ஒவ்வொரு தறியை புதுப்பிக்க ரூ.10 ஆயிரம் செலவாகும் இதனை நெசவாளர்கள் சொந்தமாக செய்ய வேண்டியுள்ளது.
மேலும் ஏற்கனவே நெய்யப்பட்டு கூட்டுறவு சங்கங்களின் இருப்பில் உள்ள சேலைகளை அரசு கொள்முதல் செய்யவில்லை, தேக்கமடைந்த சேலைகளை அரசு உடனடி கொள்முதல் செய்ய வேண்டும்.
புதிய ரக சேலைகளை ஒரு நெசவாளரால் தினமும் 2 சேலைகள் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும். ஆனால் தற்போதைய கூலி பல ஆண்டுகளுக்கு முன் நிர்ணயிக்கப்பட்டதால் விலைவாசி உயர்வுக்கு போதுமானதாக இல்லை.
புதிய ரக சேலை ஒன்றுக்கு கூலியாக ரூ.250 நிர்ணயம் செய்ய வேண்டும். ரகம் மாற்றம், பணி இழப்பால் பாதிக்கப்படும் நெசவாளர்களுக்கு தமிழக அரசு ரூ.10ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.
அரசு அமைத்த நெசவுக்கூலி நிர்ணயக்குழு மாநிலம் முழுவதும் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்தியது. ஆனால் அக்குழவின் முடிவு, கூலி உயர்வு குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை, என்றார்.