Arts, culture, entertainment and media
காசோலை மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனை ரத்து - ஐகோர்ட்

காசோலை மோசடி வழக்கில் 10 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும் என்று நடிகர் விமலுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மன்னர் வகையறா படத்தின் தயாரிப்புக்காக நடிகர் விமல், பைனான்சியர் கோபி என்பவரிடமிருந்து பெற்ற 4 கோடியே 50 லட்சம் ரூபாய் கடனை திருப்பிக் கொடுக்கும் வகையில் விமல் காசோலை வழங்கியுள்ளார். விமல் வங்கி கணக்கில் போதுமான பணம் இல்லாததால் காசோலை திரும்பி வந்ததையடுத்து, விமலுக்கு எதிராக பைனான்சியர் கோபி, சென்னை 11 வது சிறு வழக்குகளையும் விசாரிக்கும் நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தாக்கல் செய்தார்.
அந்த வழக்கில் ஜூலை 23ல் தீர்ப்பளித்த நீதிமன்றம், விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்தும், காசோலை தொகையை கோபி-க்கு திருப்பிக் கொடுக்கவும் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை 15வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விமல் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மேல்முறையீட்டு மனுவில், ஓராண்டு தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரிய மனுவை விசாரித்த கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி, 10 லட்சம் ரூபாயை 60 நாட்களில் விசாரணை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் தண்டனையை நிறுத்திவைத்து ஆகஸ்ட் 4ஆம் தேதி உத்தரவிட்டார்.
10 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்யக் கோரி விமல் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, நடிகர் விமல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 10 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என நிபந்தனையை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, 10 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என நிபந்தனையை ரத்து செய்து உத்தரவிட்டார்.
