வால்பாறைக்கு ரோப்கார்! அரசுக்கு எம்.எல்.ஏ., யோசனை
வால்பாறை: வால்பாறை – ஆழியாறு இடையே ரோப்கார் வசதி ஏற்படுத்த வேண்டும், என, பொள்ளாச்சி எம்.எல்.ஏ., வலியுறுத்தியுள்ளார்.
வால்பாறையிலிருந்து, 64 கி.மீ., தொலைவில் பொள்ளாச்சி உள்ளது. மொத்தம், 40 கொண்டை ஊசி வளைவுகளை கடந்த செல்ல மூன்று மணி நேரமாகிறது. சுற்றுலா பயணியர் அதிகளவில் வந்து செல்லும் வால்பாறையில், ரோப்கார் வசதி ஏற்படுத்த வேண்டும், என, பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், பொள்ளாச்சி எம்.எல்.ஏ., நித்யானந்தம் சட்டசபையில் பேசும் போது, ‘பொள்ளாச்சி சுற்றுலா மேம்பாட்டிற்கு பல சிறப்பு திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறை மலைப்பகுதியில், கடந்த 1920ம் ஆண்டுகளில் தேயிலை எஸ்டேட்களை உருவாக்க ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் ரோப்கார் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரோப்கார் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில், வால்பாறையில் இந்த திட்டம் மீண்டும் செயல்படுத்த வேண்டும். இதன் வாயிலாக, 40 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட வால்பாறைக்கு ஆழியாறிலிருந்து, 40 நிமிடத்தில் சென்று வர முடியும்.
சுற்றுலா பயணியர் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தினால், அரசுக்கு வருவாய் கிடைக்கும். சுற்றுலா பயணியரும் மகிழ்ச்சி அடைவர். புதிய போக்குவரத்து வசதியும் கிடைக்கும்’ என்றார்.
வால்பாறையின் சுற்றுலா வளர்ச்சிக்கு புத்துணர்ச்சியூட்டும் வகையில், எம்.எல்.ஏ., சட்டசபையில் குரல் கொடுத்துள்ளதை, பொள்ளாச்சி, வால்பாறை மக்கள் வரவேற்றுள்ளனர்.