Lifestyle and human interest
பொது கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர மக்கள் வலியுறுத்தல்
உத்திரமேரூர், செப். 7– அம்மையப்பநல்லுார் இருளர் குடியிருப்பு பகுதியில், அமைக்கப்பட்டுள்ள பொது
அம்மையப்பநல்லுார் இருளர் குடியிருப்பு பகுதியில், அமைக்கப்பட்டுள்ள பொது கழிப்பறையை, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். உத்திரமேரூர் ஒன்றியம், அம்மையப்பநல்லூரில், இருளர் குடியிருப்பு அமைந்துள்ளது. அப்பகுதியில், 20க்கு மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், 2024 – 25ம் ஆண்டு, 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பொது கழிப்பறை கட்டப்பட்டது.
இந்நிலையில், கழிப்பறை கட்டி முடிக்கப்பட்டு மூன்று மாதங்களாகியும், கழிப்பறைக்கு தண்ணீர் வசதி மற்றும் கதவு அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், அப்பகுதியில் உள்ள இருளர் மக்கள் இயற்கை உபாதை கழிக்க முள் புதர்களுக்குள் செல்லும் சூழல் உள்ளது.
எனவே, அம்மையப்பநல்லூர் இருளர் பகுதியில் கட்டப்பட்டுள்ள பொதுக் கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, அம்மையப்பநல்லூர் ஊராட்சி தலைவர் ஜேம்ஸ் கூறியதாவது:
பல்வேறு இடங்களில் நீர்நிலைகள் வறண்டு இருப்பதால், கழிப்பறைக்கு ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் வசதி ஏற்பாடு செய்ய முடியவில்லை, மேலும், கழிப்பறைக்கு கதவுகள் அமைத்திருந்தால், கழிப்பறையில் தண்ணீர் இல்லை என்று கூட மக்கள் பார்க்க மாட்டார்கள் கழிப்பறையை அசுத்தம் செய்து விடுவார்கள்.
ஆகையால், தான் கதவுகளும் அமைக்கப்படாமல் உள்ளது. எனவே, கழிப்பறைக்கு தண்ணீர் வசதி மற்றும் கதவுகள் உடனடியாக அமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.