Lifestyle and human interest
பஸ்கள் நிறுத்தாததால் மறியல் போக்குவரத்து பாதிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் அருகே வி.அகரத்தில் பஸ்கள் நிறுத்தாததால், அப்பகுதி மக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், கோலியனுார் அருகே சென்னை–கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் வி.அகரம் கிராமம் உள்ளது.
நான்கு வழிச்சாலை திட்டப்பணிகளும், அதில், வி.அகரத்தில் மேம்பாலம் அமைக்கும் பணிகளும், நீண்ட காலம் நடந்து வந்தது.
இதனால் விழுப்புரத்திலிருந்து கடலுார், பண்ருட்டி மார்க்கமாக செல்லும் புறநகர் பஸ்கள் சர்வீஸ் சாலை வழியாக வந்து, பஸ் நிறுத்தத்தில் நின்று சென்றன.
இந்நிலையில், அங்கு நான்கு வழிச்சாலை மற்றும் மேம்பால பணிகள் முடிந்ததால், பஸ்கள், கனரக வாகனங்கள் என அனைத்தும் மேம்பாலத்தின் மீது நேரடியாக செல்கின்றன. வி.அகரம் சர்வீஸ் சாலையில் புறநகர் பஸ்களும் வராததால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று காலை பஸ்சுக்காக காத்திருந்த பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், நீண்டநேரமாக வராததால், காலை 8:45 மணிக்கு மேம்பாலம் அருகே சென்னை-கும்பகோணம் நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த வாகனங்களையும் தடுத்து நிறுத்தினர்.
தகவலறிந்து வந்த வளவனுார் சப் இன்ஸபெக்டர் பாலசிங்கம் மற்றும் போலீசார், பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக அதிகாரியிடம் பேசி, பஸ்கள் நின்று செல்லும் என உறுதியளித்தனர். இதனையடுத்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கபட்டது.