Sport
அர்ஜென்டினா அணியில் மெஸ்ஸி: சொந்த மண்ணில் கடைசி போட்டி

பியுனஸ் ஏர்ஸ்: சர்வதேச நட்பு கால்பந்து போட்டியில் பங்கேற்கும் அர்ஜென்டினா அணியில், மெஸ்ஸி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அர்ஜென்டினா அணி, சொந்த மண்ணில் மூன்று சர்வதேச நட்பு கால்பந்து போட்டிகளில் விளையாடுகிறது. வரும் செப். 30ல் கோர்டோபாவில் நடக்கவுள்ள முதல் போட்டியில் பொலிவியாவை சந்திக்கவுள்ள அர்ஜென்டினா, அக். 3, 6ல் பியுனஸ் ஏர்சில் நடக்கவுள்ள போட்டிகளில் முறையே பர்கினா பாசோ, பெனின் அணிகளை எதிர்கொள்கிறது.
இப்போட்டிகளுக்கான அர்ஜென்டினா அணி அறிவிக்கப்பட்டது. இதில் பெனின் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட, நட்சத்திர வீரர் மெஸ்ஸி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த மெஸ்ஸி, சொந்த மண்ணில் உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் விடை பெறுவதற்காக இப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அர்ஜென்டினா கால்பந்து சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மெஸ்ஸி தரப்பில் இருந்து இப்போட்டியில் பங்கேற்பது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
சமீபத்தில் தடை விதிக்கப்பட்ட அர்ஜென்டினாவின் லியான்டிரோ பரதேஸ், மோலினா, தியாகோ அல்மடா, இப்போட்டிகளில் விளையாட மாட்டார்கள்.
அர்ஜென்டினா கால்பந்து சங்க தலைவர் கிளாடியோ டாபியா கூறுகையில், ''எங்களின் அடையாளமான மெஸ்ஸிக்கு சொந்த மண்ணில் பிரியாவிடை கொடுப்பதற்காக இப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, உலகின் தலைசிறந்த வீரர்களை அழைக்க திட்டமிட்டுள்ளோம். தவிர, மெஸ்ஸியின் குடும்பத்தினரும் இப்போட்டியை நேரில் பார்க்க உள்ளனர்,'' என்றார்.