Politics
ரூ.3.28 கோடி லஞ்சம்... பினராயி விஜயன் குடும்பத்துக்குக் குறி?!
திருவனந்தபுரத்தில் பினராயி விஜயனின் வாடகை வீட்டில் சோதனை முடிந்து திரும்பிய அதிகாரிகளின் வாகனங்களை சி.பி.எம் தொண்டர்கள் அடித்து நொறுக்கிய சம்பவங்களும் அரங்கேறின.

டி.ஜி.பி-க்கு அமலாக்கத்துறை அனுப்பிய 25 பக்கக் கடிதம்
மகள் வீணா விஜயன் மூலம் தாதுமணல் நிறுவனத்திடமிருந்து ரூ.3.28 கோடி லஞ்சம் பெற்றதாக முன்னாள் கேரள முதல்வர் பினராயி விஜயன் மீது குற்றச்சாட்டு எழுந்திருக்கும் நிலையில், ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்யக் கோரி அமலாக்கத்துறை அனுப்பியிருக்கும் கடிதம் கேரள அரசியலில் புயலைக் கிளப்பியிருக்கிறது.
கேரளாவில் செயல்படும் கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூட்டைல் லிமிடெட் (சி.எம்.ஆர்.எல்) என்ற தனியார் தாது மணல் நிறுவனத்துக்கும், முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயனின் எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனத்துக்கும் இடையிலான பணப் பரிவர்த்தனைகள் குறித்து அமலாக்கத்துறை விசாரித்துவருகிறது. இதன் ஒரு பகுதியாக, மே 27-ம் தேதி பினராயி விஜயன், அவருடைய மருமகனும் முன்னாள் அமைச்சருமான முகமது ரியாஸ் உள்ளிட்டோரின் வீடுகள் உட்பட 12 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
ரூ.3.28 கோடி கைமாறியது எப்படி?
திருவனந்தபுரத்தில் பினராயி விஜயனின் வாடகை வீட்டில் சோதனை முடிந்து திரும்பிய அதிகாரிகளின் வாகனங்களை சி.பி.எம் தொண்டர்கள் அடித்து நொறுக்கிய சம்பவங்களும் அரங்கேறின. இந்த நிலையில் பண மோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் தங்களுக்குக் கிடைத்த நேரடி ஆதாரங்களை ஒருங்கிணைத்து 25 பக்கங்கள்கொண்ட கடிதத்தை கேரள போலீஸ் டி.ஜி.பி ரவாடா சந்திரசேகருக்கு அனுப்பியிருக்கிறது அமலாக்கத்துறை.
அந்தக் கடிதத்தில், `சி.எம்.ஆர்.எல் நிறுவனத்திடமிருந்து பினராயி விஜயன், தன் மகள் வீணா மூலமாக ரூ.3.28 கோடி லஞ்சம் பெற்றிருக்கிறார். அந்தப் பணத்தை அவருடைய மருமகன் முகமது ரியாஸ், தன் நண்பர்கள் மூலம் ‘எம்பவர் இந்தியா கேபிட்டல் இன்வெஸ்ட்மென்ட் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனம் வழியாக துபாய்க்கு அனுப்பியிருக்கிறார். அரசு ஊழியர்களாகப் பதவி வகித்தவர்கள் லஞ்சம் பெற்றது தொடர்பான முகாந்திரங்கள் வெளிவந்திருப்பதால், பினராயி விஜயன், அவருடைய மகள் வீணா, அவருடைய கணவர் முகமது ரியாஸ் உள்ளிட்டோர்மீது ஊழல் தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவுசெய்ய வேண்டும்’ என்று மாநில காவல்துறையை வலியுறுத்தியிருக்கிறது.
``என்னை வேட்டையாடத் தொடங்கி நீண்டகாலமாகிவிட்டது...’’
அமலாக்கத்துறையின் கடிதம் குறித்த தகவல் கடந்த 8-ம் தேதி வெளியானதும், ஆவேசமடைந்த DISCRETIONARY_LINE_BREAKபினராயி விஜயன், “அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை வெட்கக்கேடானது. இதைச் சட்டரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் எதிர்கொள்வோம். அமலாக்கத்துறை என்னை வேட்டையாடத் தொடங்கி நீண்டகாலமாகிவிட்டது” என்றார்.
அமலாக்கத்துறை அனுப்பிய கடிதம், உள்துறைச் செயலாளரின் பரிசீலனையில் இருப்பதாக மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா கூறியிருந்தார். இந்த விவகாரம் குறித்து மீடியாக்களிடம் பேசிய கேரள முதல்வர் DISCRETIONARY_LINE_BREAK
வி.டி.சதீசன், “மத்திய ஏஜென்சி ஆதாரங்களுடன் கடிதம் அளித்திருப்பதால், அதைச் சட்டப்படி பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதில் அரசியல் ஏதுமில்லை. இந்த விவகாரத்தில் சி.பி.எம் தன்னைத் தானே நியாயப்படுத்த மட்டுமே முயல்கிறது.
அரசியல் கட்சிகள் தனிநபர்களிடமிருந்தோ அல்லது நிறுவனங்களிடமிருந்தோ நன்கொடை பெறுவது வழக்கம். ஆனால், இந்த வழக்கு அப்படிப்பட்டது அல்ல. அதைத் தாண்டிய தீவிரமான அம்சங்கள் அமலாக்கத்துறை கடிதத்தில் இருக்கின்றன. சட்ட ஆய்வு நடக்கின்றன. புலனாய்வின் ஒரு பகுதியாக மத்திய ஏஜென்சிகள், மாநில ஏஜென்சிகளுக்குத் தகவல்களையும் ஆதாரங்களையும் அளிப்பது வழக்கமானதுதான்” என்றார்.
“இது மத்திய ஏஜென்சிகளின் அரசியல் முயற்சி”
இது குறித்து சி.பி.எம் மாநிலக்குழு உறுப்பினர் அனில்குமாரிடம் பேசினோம். “DISCRETIONARY_LINE_BREAKபினராயி விஜயனின் ஆட்சியில் தங்கம் கடத்தல் வழக்கு உட்பட பல விவகாரங்களில் மத்திய ஏஜென்சிகள் விசாரணை நடத்தினாலும், இறுதியில் அவையனைத்தும் கட்டுக்கதைகள் என்பது வெளிச்சத்துக்கு வந்தன. பினராயி விஜயனுடைய மகளின் நிறுவனம், சி.எம்.ஆர்.எல் நிறுவனத்துக்கு ஐடி சேவைகளை வழங்கியதற்காக வங்கிக் கணக்கு மூலமாகப் பணம் பெறப்பட்டது. DISCRETIONARY_LINE_BREAKசட்டபூர்வமாகப் பெறப்பட்ட இந்தத் தொகையை, கள்ளப்பணம் என்று சித்திரித்து குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன. DISCRETIONARY_LINE_BREAKDISCRETIONARY_LINE_BREAKஇதற்கு ஆதாரங்கள் இல்லாததால், பினராயி விஜயனிடம் மத்திய ஏஜென்சிகள் விசாரணை நடத்தவோ, அவர்மீது வழக்கு பதியவோ இல்லை.
அதேசமயம், ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்யுமாறு மாநில காங்கிரஸ் அரசிடம் மத்திய அரசு வலியுறுத்துகிறது. அதன் மூலம் தங்களுக்கு விசாரணை நடத்த மறைமுகமான வாய்ப்பை உருவாக்க முயல்கின்றன மத்திய அரசு ஏஜென்சிகள். இடதுசாரிகளுக்கு எதிராக காங்கிரஸும் பா.ஜ.க-வும் ஒன்று சேர்ந்து நிற்கின்றன. சட்டரீதியான அதிகாரம் இல்லாத விஷயங்களை அமலாக்கத்துறை கூறினால், அதன்மீது அரசு நடவடிக்கை எடுக்கவேண்டிய எந்தவோர் அவசியமும் மாநில காவல்துறைக்கு இல்லை” என்றார்.
இந்தப் பிரச்னைக்குப் பின்னால், `இந்தியா’ கூட்டணியை உடைக்கும் முயற்சியில் பா.ஜ.க களமிறங்கியிருக்கிறதோ என்ற சந்தேகத்தையும் சிலர் கிளப்புகின்றனர்.
