Arts, culture, entertainment and media
"என்னுடைய கதைகளிலேயே 'டோரதி'தான் நிஜ வாழ்க்கைக்கு மிகவும் நெருக்கமானது" - கார்த்திக் சுப்புராஜ்
டொரோண்டோ சர்வதேசத் திரைப்பட விழாவில் 'டோரதி' படத்திற்குக் கிடைத்த வரவேற்பு மற்றும் படத்தின் கதைக்களம் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். | Director Karthik Subbaraj opens up about 'Dorothy''s reception at TIFF, and why this Keerthy Suresh starrer is his most realistic film yet.

டொரோண்டோ திரைப்பட விழாவில் கிடைத்த வரவேற்பு குறித்தும், 'டோரதி' படம் குறித்தும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பகிர்ந்திருக்கிறார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் 'டோரதி' திரைப்படம் இம்மாதம் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார்.
டொரோண்டோ சர்வதேச திரைப்பட விழாவுக்கு இப்படம் தேர்வாகியிருந்தது. சமீபத்தில் அதன் திரையிடலும் நடைபெற்றிருந்தது.
டொரோண்டோ திரைப்பட விழாவில் கிடைத்த வரவேற்பு குறித்தும், 'டோரதி' படம் குறித்தும் திரைப்பட விமர்சகர் சுசரிதா தியாகிக்கு அளித்த பேட்டியில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பகிர்ந்திருக்கிறார்.
அந்தப் பேட்டியில் அவர், "டொரோண்டோ திரைப்பட விழாவில் கிடைத்த வரவேற்பு மிகவும் அற்புதமாக இருந்தது. நான் என்னுடைய முதல் படத்தை இயக்கத் தொடங்கிய காலத்திலிருந்தே, எனது திரைப்படத்தைப் பெரிய சர்வதேசத் திரைப்பட விழாக்களில் திரையிட வேண்டும் என்ற கனவு எனக்குள் இருந்தது.
ஆனால், எனது முந்தைய திரைப்படங்களின்போது, திரையரங்கு வெளியீட்டிற்கு முன் திரைப்பட விழாக்களுக்கு அனுப்புவதற்கு தயாரிப்பாளர்கள் ஒப்புக்கொள்ளாத சூழல் நிலவியது.
ஆனால், 'டோரதி' திரைப்படத்தின் கதையை எழுதத் தொடங்கியபோதே, இந்தப் படத்தை முதலில் சர்வதேச திரைப்பட விழாக்களுக்குக் கொண்டு சென்று, அதன் பிறகே திரையரங்குகளில் வெளியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.
தயாரிப்பாளர் குனீத் மோங்காவுடனான கூட்டணி அதைச் சாத்தியமாக்கியது. நான் இதுவரை எழுதிய கதைகளிலேயே 'டோரதி' தான் நிஜ வாழ்க்கைக்கு மிகவும் நெருக்கமான ஒன்று.
எனது முந்தைய திரைப்படங்களில் ஒரு 'கேங்க்ஸ்டர்' பின்னணி அல்லது நட்சத்திர நடிகர்களின் ரசிகர்களுக்கான சினிமாத்தனமான சில சுவாரஸ்யங்கள் இடம்பெற்றிருக்கும்.
ஆனால், 'டோரதி' படமாக்கப்பட்ட இடம், கதைக்களம் என அனைத்தும் நிஜ வாழ்வியல் சூழலுக்கு மிக அருகில் இருக்கும்.
அதனால்தான், இது சர்வதேசத் திரைப்பட விழாக்களுக்கு நிச்சயமாகத் தேர்வாகும் என்று நம்பினேன். படத்தின் கதையைப் பற்றி அதிகம் வெளிப்படுத்தாமல், எந்தவித எதிர்பார்ப்புமின்றி ரசிகர்கள் இப்படத்தைக் காண வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்.
ஏனெனில், ஒரு திரைப்படத்தை எப்படி ரசிகர்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது அதன் இயக்குநருக்கு நன்றாகத் தெரியும்.
டீசரில் காட்டியிருந்த விஷயங்களோடு, அடுத்த வாரம் வெளியாகவுள்ள டிரெய்லரும் வழங்கும் தகவல்களோடு ரசிகர்கள் இப்படத்தைத் திரையரங்கில் காணும்போது அது ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும்" எனப் பகிர்ந்திருக்கிறார்.
