குமாரக்குடி வீராணம் ஏரி வடிகால் வாய்க்கால் அருகே புதிய பாலம் கட்டும் பணி விரைந்து முடிக்கப்படுமா?
சேத்தியாத்தோப்பு, செப்.15– சேத்தியாத்தோப்பு அடுத்த குமாரக்குடியில் வீராணம் ஏரி வாய்க்கால் குறுகிய வளைவு
சேத்தியாத்தோப்பு அடுத்த குமாரக்குடியில் வீராணம் ஏரி வாய்க்கால் குறுகிய வளைவு பாலம் அருகே புதிய பாலம் கட்டுமானப்பணியை விரைந்து முடித்து போக்குவரத்திற்கு திறந்துவிட வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னை–கும்பகோணம் சாலை சேத்தியாத்தோப்பு அருகே குமாரக்குடியில் வீராணம் ஏரி வடிகால் வாய்க்கால் குறுக்கே 80 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளது.பாலத்தில் சென்னை, கும்பகோணம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, அரியலுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள், லாரிகள், டாரஸ், டிப்பர் லாரிகள், டூரிஸ்ட் பஸ்கள் என 24 மணிநேரமும் சென்று வருகின்றனர்.
இந்த குறுகிய பாலத்தில் வாகன ஓட்டிகள் அதிகளவில் விபத்தில் சிக்கி உயிரிழந்து வந்தனர். விபத்து அபாயம் குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இதன் தொடர்ச்சியாக கடலுார் கலக்டர் சிபிஆதித்யாசெந்தில்குமார் பரிந்துறையின் பேரில் தமிழக அரசு கடந்த ஜனவரி மாதம் ரூபாய் 3 கோடியே 72 லட்சம் கனிம வளநிதியிலிருந்து ஒதுக்கியது.காட்டுமன்னார்கோவில் கோட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கடந்த பிப்ரவரி மாதம் முதல்வாரத்தில் புதிய பாலம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினர்.
அதனை தொடர்ந்து புதிய பாலம் கட்டுமானப்பணிகள் கடந்த எட்டுமாதங்களாக நடந்து வந்த நிலையில் முழுவதும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது பாலத்துடன் இணைப்பதற்கான சாலை அமைப்பதற்கு வருவாய்த்துறை அனுமதியுடன் சாலையோர மரங்களை அகற்றி மண் கொட்டி சமன் செய்து வருகின்றனர்.
95 சதவீத கட்டுமானப்பணிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் மீதமுள்ள சாலை அமைக்கும் 5 சதவீத பணியை விரைந்து முடித்து போக்குவரத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென வாகன ஓட்டிகள், பொது மக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கின்றனர்.