தனியார் பள்ளி அங்கீகார விவகாரத்தில் 177 புகார்கள் ஐகோர்ட்டில் போலீஸ் தகவல்
சென்னை: தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்று தருவதாக, பணம் வசூலித்து மோசடி செய்த விவகாரத்தில், இதுவரை, 177 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், போலீசார் தெரிவித்தனர்.
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், கட்டுமான அனுமதிகள் மற்றும் சட்டப்பூர்வ அனுமதிகள் பெறுவதில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
வழக்கு பதிவு குறிப்பாக, தனியார் பள்ளி நிர்வாகிகளிடம், 100 கோடி ரூபாய் மேல் வசூலிக்கப்பட்டதாக, தனியார் பள்ளிகள் சங்க தலைவர் அரசகுமார் உள்ளிட்டோர் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், அரசகுமாரை கைது செய்து, குண்டர் சட்டத்தில், சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில், தனியார் பள்ளிகள் சங்க பொருளாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான முத்துகுமார் முன்ஜாமின் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு, நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தது.
பணம் வசூல் அப்போது, போலீசார் தரப்பில், 'தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கூறி, பணம் வசூலித்து மோசடி நடந்துள்ளது.
'இந்த வழக்கில் இதுவரை, 177 புகார்கள் பெறப்பட்டுள்ளன. விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. எனவே, மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும்' என, கேட்கப்பட்டது.
இதையேற்ற நீதிபதி, போலீசார் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்தார்.