கேங் வார்! மலேசியா Vs காரைக்குடி!

வெவ்வேறு வாகனங்களில் வந்து பெட்ரோல் பல்க்கில் எரிபொருள் நிரப்பும்போது, இரு தரப்பிற்கிடையே நடந்த எதேச்சையான சண்டையாகத் தான் முதலில் அந்த சண்டையைக் கருதியிருக்கிறது கோவை மாவட்ட போலீஸ். ஆனால் தொடர் விசாரணையில், சிங்கப்பூர் தங்கத்திற்காக இரு குழுக்களிடையே நடந்த பிரச்சனை என்பதும், இதில் ஒரு குழுவிற்கு தலைமையே காரைக்குடியை சேர்ந்த போலீஸ் என்பதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. தற்பொழுது இந்த விவகாரம் மலேசிய துணைத்தூதரகம் வரை செல்ல, தலையை தொங்க விட்டுள்ளது தமிழ்நாடு காவல்துறை.
மலேசியாவின் லிட்டில் இந்தியாவை சேர்ந்த லோகேஸ்வரன், யுகேந்திரன் உள்ளிட்ட சுமார் 10 நபர்கள் சுற்றுலாவிற்காக கடந்த மாதம் 25ஆம் தேதி இந்தியா வந்துள்ளனர். அதே தினத்தில், தமிழ்நாட்டிலிருந்து TN11BY1771 என்ற பதிவெண் கொண்ட Force Urbania வாகனத்தின் மூலம் கேரளா வந்திருக்கின்றனர். சுமார் நான்கைந்து நாட்களாக கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்றவர்கள், கடந்த 2ஆம் தேதியன்று கோவை மாவட்டத்திற்கு திரும்பி யிருக்கின்றனர். "பாலக்காடு சாலையிலுள்ள நவக்கரை கே.ஜி.சாவடிக்கு அருகிலுள்ள பெட்ரோல் பல்க்கில் சுற்றுலாப்பயணிகள் வந்த வாகனத்திற்கு எரிபொருள் நிரப்பினர். அப்போது அந்த வாகனத்தில் வந்தவர்கள் அங்குள்ள கழிவறைக்கு சென்றபோது, ஏற்கனவே அங்கிருந்த இருவருக்குமிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அவர்களும் இங்கு எரிபொருள் நிரப்ப வந்தவர்கள் தான் என்று நினைத்துக்கொண்டிருந்தோம். ஒருகட்டத்தில் அவர்கள் Force Urbania வாகனத்திற்குள் ஏறி, வாளால் தாக்கினர். இரு தரப்பும் மோதிக்கொண்டதில் மலேசியாவை சேர்ந்த இருவருக்கு கையி லும் வயிற்றிலும் வெட்டுக் காயம் ஏற்பட்டது. கூட்டமும் பல்க்கில் அதிகமாக இருக்க, மலேசிய சுற்றுலாப்பயணிகள் அணிந்திருந்த ஒரு சில நகைகளை மட்டும் (ஏறக் குறைய 90 பவுன்) பறித்துக்கொண்டு அந்த மர்ம கும்பல் எஸ்கேப் பானது.'' என்கிறார் பல்க்கில் பணியாற்றும் ஊழியர் ஒருவர்.
சாவகாசமாகவே சம்பவ இடத்திற்கு வந்து தாக்குதல் நடத்திய மர்ம கும்பல் குறித்தும், சுற்றுலாப்பயணிகள் குறித்தும் விசாரணையை தொடங்கினர் கே.ஜி.சாவடி போலீஸார். "காயம்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்ப்பிக்க வாகனம் புறப்பட்டது. ஆனால் அந்த வாகனத்தை இரு சக்கர வாகனம் மற்றும் ஒரு கார் மூலம் பின் தொடர்ந்து மீண்டும் விரட்டி வந்துள்ளது மர்ம கும்பல். வாகன ஓட்டுநரும் சளைக்காமல் வேகமாக வாகனத்தை ஓட்டி தப்பித்த நிலையில், மதுக்கரை மார்க்கெட் அருகில் துப்பாக்கி முனையில் அந்த வாகனத்தை நிறுத்தியிருக்கிறது அந்த கும்பல். இதில் பதட்டமடைந்த டிரைவர் வேகமாக சாலை யோரத்தில் வாகனத்தை நிறுத்தியிருக்கின்றார். அந்த சத்தம் கேட்டு அங்கு பொதுமக்கள் கூடவும், சுதாரித்துக்கொண்டு ஓடியுள்ளது அந்த மர்ம கும்பல். தொடர்ந்து ரத்தக்காயத்துடன் இருந்த இருவரையும் அப்பகுதி பொதுமக்கள் மீட்டு மதுக்கரை மார்க்கெட் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்ததுடன் சம்பவம் தொடர்பாக மதுக்கரை காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்தனர்.'' என்கின்றது மதுக்கரை காவல் நிலையம்.
இந்த சம்பவம் தொடர்பாக, பேரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் மற்றும் மதுக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத் ஆகியோர் விசாரணை நடத்திவந்த நிலையில், முதலில் தகராறு நடைபெற்ற இடம் கே.ஜி.சாவடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியாகவும், வாகனத்தை தடுத்து நிறுத்தி துப்பாக்கியை காட்டி மிரட்டிய இடம் மதுக்கரை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியாகவும் இருப்பதால், எந்த காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்வது என்ற குழப்பம் நிலவியது. இதையடுத்து காயமடைந்து தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைபெற்றுவந்த லோகேஸ்வரன், கே.ஜி.சாவடி காவல் நிலையத்தில் புகாரளித்து, காவல் நிலைய எல்லைக் குழப்பத்திற்கு விடையளித்தார். தொடர்ந்து மர்ம கும்பலால் தாக்குதலுக்குள்ளான மலேசிய நாட்டு சுற்றுலாப் பயணிகளை சென்னை விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்று மலேசியா விமானத்தில் அனுப்பிவைத்தது கோவை மாவட்ட போலீஸ்.
மலேசியா சுற்றுலாப் பயணிகளின் நகைகளை பறிமுதல் செய்து கொலை செய்ய முற்பட்ட மர்ம கும்பலைத் தேடி இரண்டு தனிப்படைகளை அமைத்தது கோவை மாவட்ட காவல்துறை. இதில், மலேசிய பயணிகளுடன் பயணியாக வந்தவர் லிட்டில் இந்தியாவான கிள்ளான் பகுதியை சேர்ந்த கேங்ஸ்டர் அமரன் என்பதும், அவர் மீது மலேசியாவில் பல்வேறு கொலை வழக்குகள் இருப்பதும், தங்கக்கடத்தலில் சர்வதேச குற்றவாளி என்பதும் தெரியவந்துள்ளது. இந்த அமரனை சம்பவத்தின் பொழுது போலீஸார் விசாரிக்க, அவரும், "சார், நான் மலேசியாவில் பள்ளிக்கூடங்களுக்கு சப்ளை செய்யும் ஸ்டேஷனரி பொருட்கள் கடை வைத்திருக் கின்றேன்.'' என்று பகிர்ந் திருக்கிறார். தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளின் அலைபேசி விவரங்களை தரவாக பரிசோதிக்க, தங்கம் விற்பனை விவகாரத்தில் மலேசிய கேங்ஸ்டர் அமரனை போட்டுத்தள்ள கூலிப்படையை அமர்த்தியிருக்கின்றது அமரனின் எதிர் டீம். இதற்காக சிவகங்கை மாவட்டத்தினை சார்ந்தவர்களை கூலிப்படையாக அமர்த்தியதும் தெரியவர, கூலிப்படையினரை கைது செய்ய இன்ஸ்பெக்டர் வெங்கடேச பெருமாளிடம் அசைன்மெண்டை கொடுத்துள்ளார் கோவை மாவட்ட எஸ்.பி. பவன்குமார்.
மருத்துவமனை சி.சி.டி.வி., பெட்ரோல் பல்க் சி.சி.டி.வி., போக்குவரத்து காவல்துறையினரின் சி.சி.டி.வி.களில் உள்ள வீடியோ பதிவுகளை முழுமையாக ஆய்வு செய்ய, சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகிலுள்ள கீழ பசலையை சேர்ந்த அஜித்குமார், முத்துராமலிங்கம் மற்றும் கனீஸ்வரன் ஆகியோரே என்று தெரியவர, சிவகங்கை மாவட்டத்தில் இறங்கியிருக்கிறது கோவை மாவட்ட தனிப்படை. ஆனால் அவர்களுக்கு கிடைத்தது மேலும் ஓர் அதிர்ச்சியான தகவலே!
"இதில் என்ன டுவிஸ்ட் என்றால், மலேசிய கேங்ஸ்டர் அமரனை கொலை செய்ய முயற்சிக்கையில் லோகேஸ்வரன் அதனை தடுக்கும் முயற்சியில் வெட்டுப்பட்டார். வாகனத்தில் இருந்த மலேசிய நபர்களும் பதில் தாக்குதலில் ஈடுபட, கனீஸ்வரன் காயமடைந்திருக்கின்றான். அவனை அங்கிருந்து காரைக்குடிக்கு கொண்டு வந்து செக்காலை பகுதியிலுள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்திருக்கின்றார் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீஸான கருணாகரன். கூலிப்படையை தேடிவந்த போலீஸிற்கு கூலிப்படையை இயக்கியது போலீஸ் கருணாகரன் மற்றும் காரைக்குடியிலுள்ள நகை வியாபாரி ஒருவரே என்கிற தகவல் தெரியவரவும் அதிர்ச்சியில் மயக்க நிலைக்கே வந்தது கோவை மாவட்ட காவல்துறை! இந்த சம்பவத்திற்கு பயன்படுத்திய வாகனம் காரைக்குடியை சேர்ந்த நகை வியாபாரி சேட் சுரேஷ் என்பவருக்கு சொந்தமானது என்பதும், இந்த சம்பவத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டரும், மேலும் சில போலீஸாரும் சம்பந்தப்பட்டிருப்பது விசாரணை யில் தெரியவந்தது.
நகை வியாபாரியும், போலீஸ் கருணாகரனும், கூலிப் படையினரும் தங்களுக்குள் தகவல் பரிமாறிக்கொண்ட விபரங்களை சேகரித்து அதனை உறுதி செய்திருக்கின்றது. அதுபோல், போலீஸ் கருணாகரன், காவல் துறைக்கே தெரியாமல் மலேசியப் பயணம் மேற்கொண்டது, மானாமதுரையில் நடந்த ஆள்மாறாட்டக் கொலையில் கருணாகரன் சம்பந்தப்பட்டது உள்ளிட்ட விபரங்களும் வெளியாகியுள்ளது. இது இப்படியிருக்க, போலீஸ் கருணாகரன், நகை வியாபாரி மற்றும் கூலிப்படையை சேர்ந்த மூவர் என மொத்தம் ஐவரும் தற்போது எஸ்கேப்!
இத்தகைய வியத்தகு(!) ரெக்கார்டுகளை வைத்திருக்கும் குற்றவாளியான போலீஸை அறியாமல் இருக்குமா சிவகங்கை மாவட்ட காவல்துறையும், காரைக்குடி துணைச் சரகமும்?
பக்கம் 44 ராங்கால் பகுதியில் வெளியிடப்பட்ட செய்தியானது தமிழ்நாடு அரசின் மீன் வளத்துறை மாண்புமிகு அமைச்சர் திரு. ஏ.ஸ்ரீநாத் அவர்களை எந்த வகையிலும் குறிப்பிடவோ பெயரிட்டு சுட்டிக்காட்டவோ அடையாளப்படுத்தவோ அல்லது அவரை பற்றியதாகவோ இல்லை என்பதும் மேற்படி செய்தியில் இடம்பெற்றுள்ள எந்த ஒரு குற்றச்சாட்டோ அல்லது மறைமுக குறிப்போ அல்லது எதிர்மறையான கருத்தோ அவரின் நோக்கமாக கொண்டு குறிப்பிட்டு வெளியிடப்படவில்லை என்பதும் இதன் முலம் தெளிவுபடுத்தப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)