குன்னூர் கோடேரி சாலையில் இரவு நேரத்தில் சிறுத்தை நடமாட்டம்... பீதியில் உறைந்த பொதுமக்கள்..!

குன்னூர் - மஞ்சூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கோடேரி கிராமத்தில் இரவு ஒரு சிறுத்தை சாலையில் நடந்து சென்ற காட்சிகள் வாகன ஓட்டிகளால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வருவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், குன்னூர்-மஞ்சூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கோடேரி கிராமத்தில் நேற்று இரவு நேரத்தில் ஒரு சிறுத்தை சாலையில் நடந்து சென்ற காட்சிகள் வாகன ஓட்டிகளால் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டம் சுமார் 60% வனப்பகுதிகளைக் கொண்டிருப்பதால், புலி, சிறுத்தை, கரடி, யானை, காட்டு மாடு போன்ற பல்வேறு வனவிலங்குகள் இங்கு வாழ்கின்றன. சமீபகாலமாக, இந்த வனவிலங்குகள் மனிதர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகாமையில் உலா வருவது வழக்கமாகிவிட்டது. பல பகுதிகளில் சிறுத்தை, கரடி மற்றும் காட்டு மாடுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
குன்னூரில் இருந்து மஞ்சூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கோடேரி கிராமத்தில், இரவு நேரங்களில் சிறுத்தை மற்றும் கரடி போன்ற வனவிலங்குகள் நடமாடுகின்றன. சில சமயங்களில் கிராமத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளும் உலா வருகின்றன.
நேற்று இரவு நேரத்தில், கோடேரி கிராமத்திற்கு மேல்புறம் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஒரு சிறுத்தை சாலையில் நடந்து சென்றது. அவ்வழியாகப் பயணம் செய்த வாகன ஓட்டிகள் இந்த காட்சிகளை வீடியோ பதிவு செய்துள்ளனர். சிறுத்தை சிறிது தூரம் நடந்து சென்று, பின்னர் சாலையின் இடதுபுறத்தில் இறங்கி கிராமத்திற்குள் நுழைந்தது.
சிறுத்தை கிராமத்திற்குள் நுழைந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கிராமப் பகுதிகளில் உலா வரும் சிறுத்தை மற்றும் கரடிகளிடமிருந்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வனத்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
