Crime, law and justice
தமிழில் பெயர் பலகை நவ., 1 வரை ஐகோர்ட் கெடு
சென்னை: 'கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்ற உத்தரவின் அடிப்படையில், நவ., 1ம் தேதிக்குள் பெயர் பலகைகளை மாற்ற வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி உள்ளிட்ட, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கடைகளுக்கு, தமிழில் பெயர் பலகைகள் வைக்க வேண்டும் என, 2025ம் ஆண்டு ஜூனில், தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
அந்த உத்தரவில், 'பெயர் பலகைகளில், தமிழ் பெயருக்கு கீழ், ஆங்கிலத்தில் பெயர் எழுதிக் கொள்ளலாம்; தவறினால் 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, மும்பையில் உள்ள இந்திய சில்லறை வர்த்தகர்கள் சங்கத்தின் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு, நீதிபதி கே.சுரேந்தர் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சங்கம் தரப்பில், வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி, ''தமிழக அரசின் உத்தரவை அமல்படுத்த தயாராக இருக்கிறோம். அதற்கு மூன்று மாத கால அவகாசம் வேண்டும்,'' என்றார்.
இதை ஏற்ற நீதிபதி, 'கடைசி வாய்ப்பாக, நவ., 1ம் தேதிக்குள், கடைகளின் பெயர் பலகைகளை தமிழில் மாற்ற வேண்டும்; தவறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாம்' என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.