Politics
பிரதமர் மோடிக்கு குவிந்த 1,498 பரிசுப் பொருட்கள்: இ-ஏலம் இன்று துவக்கம்!

புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் வழங்கப்பட்ட 1,498 நினைவுப் பரிசுகளின் 8-வது கட்ட 'இ-ஏலம்' இன்று (செப்.,17) துவங்குகிறது. வரும் அக்டோபர் 31ம் தேதி வரை இந்த ஆன்லைன் ஏலம் நடைபெற உள்ளது.
பல்வேறு மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது, பிரதமருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். இந்த அரிய கலைப் பொக்கிஷங்களை பொதுமக்கள், கலை ஆர்வலர்கள் மற்றும் நிறுவனங்கள் ஏலம் எடுக்கும் வகையில், மத்திய அரசு ஆன்லைன் ஏலத்தை நடத்தி வருகிறது.
டில்லியில் உள்ள தேசிய நவீன கலைக்கூடத்தில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை ஆய்வு செய்த மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், நிருபர்களிடம் கூறியதாவது: இதுவரை நடைபெற்ற 7 கட்ட ஏலங்கள் வாயிலாக மொத்தம் ரூ.52 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது. இந்த தொகை முழுவதும் மத்திய அரசின் புனித நதியான கங்கையை தூய்மைப்படுத்தும் 'நமாமி கங்கை' திட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் சேகரிப்பாளர்களிடையே இந்த ஏலத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த 8வது கட்ட ஏலத்தில் இடம்பெற்றுள்ள 1,498 பொருட்களில், மிகச் சிறந்த மற்றும் கலாசார முக்கியத்துவம் வாய்ந்த 50 பொருட்கள் முதன்மைப் பொருட்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.முக்கியப் பொருட்களின் ஆரம்ப விலை விவரம்:
கர்நாடக வெள்ளி ராமர் சிலை: ரூ.13.5 லட்சம் (இந்த ஏலத்தின் அதிகபட்ச ஆரம்ப விலை)
கோண்ட் கலை 'ட்ரீ ஆப் லைப்' ஓவியம்: ரூ.7.5 லட்சம்
தேரில் அமர்ந்த ஜெகந்நாதர் பரிவாரம்: ரூ.6 லட்சம்
99.99 காரட் தங்க முலாம் பூசப்பட்ட ராதா-கிருஷ்ணர் ஓவியம்: ரூ.5.40 லட்சம்
அசாம், மேற்கு வங்கம், குஜராத், மகாராஷ்டிரா, உ.பி., பீகார், ஒடிசா மற்றும் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் பாரம்பரிய கைவினைப் பொருட்கள், ஆன்மிகச் சின்னங்கள் மற்றும் விளையாட்டு சாதனைகள் இந்த ஏலத்தில் அணிவகுத்து நிற்கின்றன. இந்தியாவின் பன்முகத்தன்மையை பறைசாற்றும் வகையில் இந்த தொகுப்பு அமைந்துள்ளது.
ஏலத்தில் பங்கேற்பது எப்படி?
பொதுமக்கள் மற்றும் ஆர்வலர்கள் www.pmmementos.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக ஏலத்தில் கலந்துகொண்டு தங்களுக்குப் பிடித்த பொருட்களை ஏலம் எடுக்கலாம். மேலும், டில்லியில் உள்ள தேசிய நவீன கலைக்கூடத்தில் நேரடியாகச் சென்றும் இந்த அரிய பொருட்களை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.