Politics
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்திற்கு காவல், வருவாய் துறை அதிகாரிகளே காரணம்: நீதிபதி கோகுல்தாஸ் கமிஷன் குற்றச்சாட்டு

சென்னை: 'கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து, 70 பேர் உயிரிழந்ததற்கு, காவல் துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளின் அலட்சியமே காரணம்' என, ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் கமிஷன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த தி.மு.க., ஆட்சியில், 2024 ஜூன் 19, 20ம் தேதிகளில், கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம், மாதவச்சேரி, சேஷசமுத்திரம் பகுதிகளில், மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்த 70 பேர் உயிரிழந்தனர்; 161 பேர் பார்வை இழப்பு, நிரந்த ஊனம் அடைந்தனர்.
இது தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் கமிஷன் அறிக்கை, நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது: கள்ளச்சாராயம் குடித்து, 70 பேர் உயிரிழந்தது தொடர்பாக, 433 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்களில், 157 பேர், எத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து, பகுதி மற்றும் நிரந்தர ஊனம் ஏற்பட்டவர்கள்; 69 பேர், சட்ட விரோதமாக விற்கப்பட்ட கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் உறவினர்கள்.
சட்டம் - ஒழுங்கு, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார், வனம், வருவாய், சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. மெத்தனால் சேமித்து வைத்தல், எடுத்துச் செல்லுதல், விற்பனையை கண்காணித்து ஆய்வு செய்யும் அதிகாரிகள் கடமை தவறாமல் இருந்திருந்தால், சென்னையில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு மெத்தனால் வந்திருக்க முடியாது; இந்த கொடூர சம்பவமும் நடந்திருக்காது.
கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், கச்சிராப்பாளையம் சட்டம் - ஒழுங்கு காவல் நிலைய போலீசார், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலுார் மது விலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்.ஐ.,க்கள், இன்ஸ்பெக்டர்கள், டி.எஸ்.பி.,க்கள், வேண்டுமென்றே அலட்சியம் செய்து, கடமையில் இருந்து முற்றிலும் தவறியுள்ளனர். வியாபாரிகள் உடனான இவர்களது தொடர்பு வாயிலாக, கள்ளச்சாராய வியாபாரம் தடையின்றி செழிக்க அனுமதித்துள்ளனர்.
இதனால், 70 பேர் உயிரிழந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. இதற்கு, இந்த அதிகாரிகளே பொறுப்பு. கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், கச்சிராப்பாளையம் தாலுகாக்களின் கிராம உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், தாசில்தார்கள் தங்கள் கடமையை செய்யத் தவறியுள்ளனர். எனவே, நடந்த துயரத்திற்கு இவர்களும் பொறுப்பேற்க வேண்டும்.
கடந்த 2023ல், கள்ளக்குறிச்சியின் அண்டை மாவட்டமான விழுப்புரம் மாவட்டத்தில், மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து, உயிரிழப்பு சம்பவங்கள் நிகந்த போதே, இவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தீவிர நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
தமிழகத்தில் 1991 முதல், 50 வகை மதுபான துயர சம்பவங்கள் நடந்துள்ளன. இவற்றில், 345 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில், 275 பேரின் உயிரிழப்புகள், 79.7 சதவீதம் மெத்தனால் என்ற வேதிப்பொருள் குடித்ததால் ஏற்பட்டவை.
இச்சம்பவங்களின் அடிப்படையில், மெத்தனால் கண்காணிப்பில் காவல் துறை அதிகாரிகள், வருவாய் துறையினர் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து இருக்க வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 30 ஆண்டுகளுக்கு மேல், கன்னுக்குட்டி என்பவர் கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். அதுவும் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்திற்கு, 250 மீட்டர் தொலைவிலும், நீதிமன்ற கட்டடம் உள்ள, 200 மீட்டர் தொலைவிலும் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை விற்றுள்ளார்.
கள்ளச்சாராய தொழிலை கன்னுக்குட்டி, தன் சகோதரர்கள் தாமோதரன், அவரது மனைவி விஜயா ஆகியோருடன் செய்து வந்துள்ளார். இவர்களிடம் கள்ளச்சாராயம் வாங்கி குடித்தவர்கள் தான் அதிக எண்ணிக்கையில் உயிரிழந்துள்ளனர். இவர்களை, சட்ட ரீதியாக மாவட்டத்தை விட்டு வெளியேற்றி இருந்தாலே, உயிரிழப்புகளை தடுத்து இருக்கலாம்.
அதிகபட்சம், 2 ஆண்டுகள் மாவட்டத்திற்குள் நுழைய தடை விதிக்கலாம். அதை போலீஸ் அதிகாரிகள் செயல்படுத்தவில்லை. அதேபோல, மாதவச்சேரி பூசாரி என்கிற ராமர், சின்னதுரை, சேஷசமுத்திரத்தைச் சேர்ந்த செந்தில், சடையன் ஆகிய கள்ளச்சாராய வியாபாரிகளையும் வெளியேற்றி இருக்கலாம். போலீஸ் அதிகாரிகள் மிகுந்த அலட்சியமாக இருந்துள்ளனர்.
அரசு மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து துறை தலைவர்களும் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டு முறைகளை வழங்கி இருக்க வேண்டும். இதுவரை நிகழ்ந்திராத, இதுபோன்ற கொடூரமான, பரிதாபகரமான துயரம் மீண்டும் நிகழக்கூடாது என்பதை, கனத்த இயத்துடன் தெரிவிக்கிறோம்.
மேலும், கடமையில் தவறிய, அலட்சியமாக இருந்து, துயர சம்பவத்திற்கு காரணமாக இருந்த பொறுப்பான பல்வேறு பதவிகளை வகித்து வரும் காவல் துறை, வருவாய் துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.