நிலப்பட்டா மாற்ற ரூ.50 லட்சம் கேட்ட தாசில்தார் அதிரடி கைது!: பொறி வைத்து பிடித்தனர் 'லோக் ஆயுக்தா' போலீசார்

லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை கைது செய்வதற்காக, கர்நாடகாவில் லோக் ஆயுக்தா அமைப்பு அமைக்கப்பட்டது. இந்த அமைப்பின் தீவிர செயல்பாட்டால், பல்வேறு ஊழல் பெருச்சாளிகள் கைது செய்யப்படுகின்றனர்.
அவ்வப்போது மாநிலத்தின் பல்வேறு அரசு அதிகாரிகள், ஊழியர்களின் வீடுகள், அலுவலகங்கள், உறவினர்கள் வீடுகளில் அதிரடி ரெய்டு நடத்துவர்.
இந்த ரெய்டில் பல ஊழல் அதிகாரிகள் சிக்கி, சிறைக்கும் சென்றுள்ளனர். ஆனாலும், லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் எண்ணிக்கை குறையவில்லை.
இந்நிலையில், தார்வாட் மாவட்டத்தை சேர்ந்த மஞ்சுநாத் அரளிகட்டி என்பவர், தார்வாட் தாலுகாவின் யரிகொப்பா கிராமத்தில் 33 ஏக்கர் நிலத்தை வாங்கினார். இதில், 13 ஏக்கர் நிலத்தை, விவசாயம் செய்ய முடியாத நிலமாக மாற்ற, பட்டா மற்றும் வருவாய் ஆவணங்களில் திருத்தம் செய்ய முடிவு செய்தார்.
இதற்காக, தார்வாட் தாசில்தார் சச்சிதானந்த் குச்சனுாரை, நேற்று முன்தினம் காலை மஞ்சுநாத் அரளிகட்டி சந்தித்தார்.
அப்போது, தாசில்தார், 'நிலத்தை மாற்றித்தர ஒரு கோடி ரூபாயும், இரண்டு ஏக்கர் நிலமும் தர வேண்டும். முதல் தவணையாக 50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்' என, லஞ்சம் கேட்டார். இதை மஞ்சுநாத்தும் ஏற்றுக் கொண்டார்.
ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத மஞ்சுநாத், மாவட்ட லோக் ஆயுக்தா போலீசில், நேற்று முன்தினம் மதியம் புகார் அளித்தனர்.
லோக் ஆயுக்தாவின் ஆலோசனைபடி, நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு, கர்நாடகா கலை கல்லுாரி அருகில், சிவப்பு நிற பேக்கில் 50 லட்சம் ரூபாயை, சச்சிதானந்த் குச்சனுரிடம், மஞ்சுநாத் கொடுத்தார்.
அங்கு ஏற்கனவே மறைந்திருந்த, லோக் ஆயுக்தா போலீசார், தாசில்தாரை கையும் களவுமாக பிடித்தனர்.
லோக் ஆயுக்தா எஸ்.பி., சித்தலிங்கப்பா கூறுகையில், ''புகார்தாரரிடம் வாங்கிய பண பையை, தனது காரில் சச்சிதானந்த் குக்கனுார் வைத்தார். உடனடியாக லோக் ஆயுக்தா அதிகாரிகள், அவரை கைது செய்தனர். அவரின் காரில் இருந்து அந்த பணப்பை பறிமுதல் செய்தனர்.
''அப்போது தாசில்தார் சச்சிதானந்தா, என்னை விட்டு விடுங்கள் என்று கெஞ்சினார். உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன். வாழ்நாள் முழுதும் உங்களுக்கு கடன்பட்டிருப்பேன்,'' என்றார்.
நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட சச்சிதானந்த் குச்சனுாரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
ொம்ப 'பிஸி'
சம்பவ தினத்தன்று அலுவலக வளாகத்தில் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா, சத்ய நாராயணா பூஜை, விருந்துக்கு தாசில்தார் ஏற்பாடு செய்திருந்தார். நேற்று முன்தினம் மாலை வரை நிகழ்ச்சி ஏற்பாடுகளை நிர்வகிப்பதிலும், சமையல்காரர்கள், பணியாளர்களுக்கு முன்பணம் வழங்குவதிலும் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்.
அப்போது, புகார்தாரர் மஞ்சுநாத், தாசில்தாரை தொடர்பு கொண்டு, இவ்வளவு பணத்தை தான் கையில் வைத்திருப்பது ஆபத்து என்று மீண்டும் மீண்டும் கூறினார்.
இதையடுத்து, நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, லஞ்சம் வாங்கும் போது கைது செய்யப்பட்டு உள்ளார்.