Politics
"முதல்வர் வெளிநாட்டுப் பயணம் குறித்து வெள்ளையறிக்கை வெளியிடுக.." - ஜெயக்குமார் வலியுறுத்தல்

தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளது. ஆனால் மின்வெட்டு இல்லை என அமைச்சர் பொய் சொல்கிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் குறித்தான வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கிண்டியில் ராமசாமி படையாட்சியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசும்போது, "அனைத்திற்கும் வெள்ளை அறிக்கை வெளியிட்டு வருகிறார்கள். அதேபோல், முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் குறித்தான வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும். எவ்வளவு முதலீடுகள், எவ்வளவு வேலைவாய்ப்புகள் என்பது குறித்தும், புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் செயலாக்கம் குறித்து வெளிப்படைத்தன்மையுடன் கூற வேண்டும்" என்றார்.
முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் பல்வேறு சர்ச்சைகளுக்குள்ளாகி உள்ளது. அதுகுறித்து பேசினால் என்மீதே வழக்குப்பதிவு செய்வார்கள் எனக் குறிப்பிட்ட ஜெயக்குமார், "முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணத்தின் நோக்கம் நிறைவேறியதா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
"தமிழ்நாட்டில் வேலைவாய்ப்புக்காக ஏராளமானோர் காத்திருக்கின்றனர். துக்ளக் தர்பார் போன்றுதான் தவெக அரசின் செயல்பாடுகள் உள்ளது. தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்பது போல தவெக அமைச்சர்கள் செயல்படுகின்றனர். கண்ணுக்குத் தெரிந்து தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளது. தொலைநோக்கு பார்வையுடன் அதிகபட்ச தேவையை உணர்ந்து செயல்பட வேண்டும். ஆனால் மின்வெட்டு இல்லை என அமைச்சர் பொய் சொல்கிறார்” என குற்றம்சாட்டினார்.
லூப் சாலை மற்றும் சாந்தோம் சாலை பகுதிகளில் ஏற்கனவே கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருவதாகவும், அந்தப் பகுதியில் வசிக்கும் மீனவ மக்களுக்கு குடியிருப்பு வசதிகள் தேவைப்படும் நிலையில், அந்த இடத்தை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், மீனவ மக்களின் வாழ்வாதாரத்தையும், அப்பகுதி மக்களின் அன்றாட போக்குவரத்தையும் பாதிக்கும் வகையில் தலைமைச் செயலகம் அமைக்க அரசு முயற்சித்தால், அதற்கு மீனவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கத் தயங்கமாட்டார்கள். பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.
கள அளவில் முழுமையான ஆய்வு மேற்கொள்ளாமல் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், திட்டத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அரசு தனது நிலைப்பாட்டை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், சென்னை ராஜ்பவன் பகுதியில் உள்ள நிலப்பரப்பைப் பயன்படுத்துவது உள்ளிட்ட மாற்று வாய்ப்புகளை அரசு பரிசீலிக்கலாம் என்றும், சென்னைக்கு வெளிப்புறப் பகுதியில் அனைத்து வசதிகளுடன் புதிய வளாகத்தை அமைப்பது குறித்து அரசு சிந்திக்க வேண்டும் என்றும், ஏற்கனவே அரசின் கடன் சுமை அதிகமாக உள்ள நிலையில், புதிய கட்டுமானத்திற்காக பெருமளவு நிதி செலவிடுவது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இருப்பதை வைத்து சிறப்பாக நிர்வகிப்பதுதான் நல்ல நிர்வாகம்; தேவையற்ற செலவுகளைத் தவிர்க்க வேண்டும். இந்த விவகாரத்தில் அரசு தொடர்ந்து மௌனம் காக்காமல், தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டம் தொடர்பான முழுமையான விவரங்களை மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: எ.வ.வேலுவுக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
அத்துடன், அரசுத் துறைகளில் லஞ்சத்தை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தற்போது நேரடியாக இல்லாமல் மறைமுகமாக லஞ்சம் பெறப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
