Politics
இந்திய பாதுகாப்புக்கு எதிரான செயல்களை அனுமதிக்க மாட்டோம்: இலங்கை அதிபர் உறுதி
கொழும்பு: இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகேவை, நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கொழும்புவில் நேற்று சந்தித்து இரு நாட்டு உறவு குறித்து பேசினார்.
நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் பயணமாக செப். 8 அன்று நம் அண்டை நாடான இலங்கைக்கு சென்றார். 38 ஆண்டுகளுக்கு பின், இந்திய ராணுவ அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது.
கொழும்பில் அதிபர் அனுர குமார திசநாயகேவை சந்தித்த ராஜ்நாத் சிங், அவரது அரசு இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்ததற்கு பிரதமர் மோடியின் வாழ்த்து செய்தியை தெரிவித்தார்.
பிரதமர் மோடியுடனான முந்தைய சந்திப்புகளை நினைவுகூர்ந்த இலங்கை அதிபர் திசநாயகே, 'இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு எதிரான எந்த செயலுக்கும் எங்கள் நாட்டின் நிலப்பரப்பை ஒருபோதும் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்' என, மீண்டும் உறுதியளித்தார்.
தொடர்ந்து இந்திய ராணுவத்தால் கட்டப்பட்ட மூன்று 'பெய்லி' எனப்படும் இரும்பு பாலங்களை ராஜ்நாத் சிங்கும், அதிபர் திசநாயகேவும், 'வீடியோ கான்பிரன்ஸ்' வாயிலாக திறந்து வைத்தனர்.
அதன்பின், இலங்கை விமானப்படையில் உள்ள, 'எல்-70' ரக துப்பாக்கிகளை மேம்படுத்துவது மற்றும் இரு நாடுகளின் தேசிய மாணவர் படை, தேசிய ராணுவ கல்லுாரிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
இலங்கை அதிபருடன் பேசும் போது அமைச்சர் ராஜ்நாத் சிங், 'அண்டை நாடு என்ற முறையில், நெருக்கடி காலங்களில் உதவுவதை இந்தியா உதவியாக கருதவில்லை; பொறுப்பாகவே கருதுகிறது. எதிர்காலத்திலும் தொடர்ந்து உதவும்' என, தெரிவித்தார்.