Crime, law and justice
கோவில் முன் ஈ.வெ.ரா., சிலை தஞ்சாவூரில் கலெக்டர் ஆய்வு

தஞ்சாவூர்: கோவிலுக்கு சொந்தமான இடத்தில், ஈ.வெ.ரா., சிலை உள்ள பகுதியை, தஞ்சாவூர் கலெக்டர் ரேவதி நேற்று ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், கண்டியூர் பிரம்மசிரகண்டீஸ்வரர் கோவில் முன் பகுதியில், கோவிலுக்கு சொந்தமான இடத்தில், அறநிலையத்துறை அனுமதியின்றி, சட்டவிரோதமாக நிறுவப்பட்டுள்ள ஈ.வெ.ரா., சிலை, கம்யூனிஸ்ட் கொடிக்கம்பத்தை அகற்ற, ஹிந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர் ராம ரவிக்குமார், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
இம்மனுவை, நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு விசாரித்தது.
இதில், கோவில் தரப்பு வழக்கறிஞர் சந்திரசேகர், 'மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடத்தில், 30 ஆண்டுகளுக்கு முன் ஈ.வெ.ரா., சிலை நிறுவப்பட்டது.
சாலை விரிவாக்கத்தின் போது, கோவில் நிலத்திற்குள் சிலை மாற்றப்பட்டது.
சிலையை வேறு இடத்திற்கு மாற்ற, கலெக்டருக்கு அறநிலையத்துறை இணை கமிஷனர் பரிந்துரைத்துள்ளார்' என்றார்.
இதையடுத்து, கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் சிலை அமைந்துள்ளதா என, கலெக்டர் நேரடியாக சென்று ஆய்வு செய்து, செப்., 9ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், கலெக்டர் ரேவதி, கோவில் முன், ஈ.வெ.ரா., சிலை அமைந்துள்ள பகுதியை நேற்று ஆய்வு செய்து, வருவாய் துறை அதிகாரிகளிடம் விளக்கம் பெற்றார்.