Crime, law and justice
விழுப்புரம், கடலுார் நுகர்வோர் கோர்ட் அரசு மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தல்
விழுப்புரம்: விழுப்புரம், கடலுார் நுகர்வோர் நீதிமன்றங்களை மூடும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சுப்ரமணியன், முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதம்: தமிழகத்தில் செயல்பட்டு வரும் 32 நுகர்வோர் நீதிமன்றங்களை, 14ஆக குறைக்கும் முயற்சி, நுகர்வோர் உரிமையை பறிக்கும் செயல்.
தற்போது, கடலுார், விழுப்புரம் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களை, திருவண்ணாமலைக்கு மாற்றும் நடவடிக்கையை அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும். இதனால், சாதாரண மக்களுக்கான நுகர்வோர் ஆணைய செயல்பாடு குறையும்.
தொழில் நிறுவனம், வங்கி, மின்துறை, காப்பீடு நிறுவனங்களின், சேவை குறைபாடு வாய்ப்பும் அதிகரிக்கும். நுகர்வோர்களும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்படுவர்.
கடலுார், விழுப்புரம் நுகர்வோர் கோர்ட்டுகளுக்கு சொந்த கட்டடம் கட்டவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடலுார் நுகர்வோர் கோர்ட்டும், விழுப்புரம் நுகர்வோர் கோர்ட்டும் தொடர்ந்து, அந்தந்த ஊரிலேயே தொடரவும், விரைவாக புதிய கட்டடம் கட்டி செயல்பட வேண்டும்.
திருவண்ணாமலைக்கு மாற்றினால் மேலும் வழக்கும், பணிச்சுமையும் ஏற்பட்டு, நீதி கிடைக்க தாமதமாகும். மாதாந்திரம் தாக்கல் செய்யப்படும் வழக்குகளும் குறையும். இதனால், நுகர்வோர் நீதிமன்றங்களை ஒருங்கிணைக்கும் திட்டத்தை அரசு மறுபரீசிலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.