Politics
தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் பதவி 110 ஆக உயர்வு : திட்டத்தை உடனே நிறைவேற்றக்கோரும் தொண்டர்கள்!

தி.மு.க.வில் மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கை 77லிருந்து 110ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளராகும் ஒருவர் அதிகபட்சமாக 3 முறை மட்டுமே பொறுப்பு வகிக்க முடியும். மற்ற அனைத்து பதவிகளுக்கும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த செயற்குழு கூட்டத்தில் 9 அதிரடி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதுபோன்ற திட்டங்கள் எந்த கட்சியிலும் நிறைவேற்றப்படவில்லை. மா.செ. பதவி 3 முறை மட்டுமே, மற்ற பிற கட்சி பதவிகள் 2 வருடம் என நிர்ணயித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் கட்சியில் இளைஞர்களும் பிற இளைஞர்களும் தங்களுக்கும் எப்போதாவது தி.மு.க.வில் பொறுப்பு கிடைக்கும். ஆளுமைத் திறனும் வரும். என்று தீர்மானமான முடிவில் இருக்கிறார்களாம். இதனால் கட்சியில் இளைஞர்கள் புதியவர்கள் சேர வாய்ப்புள்ளது. இதுபோன்ற தீர்மானம் வேறு எந்தக் கட்சியிலும் நிறைவேற்றப்படவில்லை, கொண்டு வரப்படவுமில்லை. தி.மு.க.வின் தலைமை இத்தீர்மானத்தை நிறைவேற்றினால் தி.மு.க. புத்துணர்ச்சி பெறும். கட்சியில் இணைந்தவர்கள் பரபரப்பாகவே செயல்படுவார்கள். கட்சி துடிப்புடன் இருக்கும். முந்தைய திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் போனதால் அதைப்போன்று பிறரின் அழுத்தங்கள் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்த தீர்மானத்தையும் நிறைவேற்றாமல் இருக்கக்கூடாது என்கிறார்கள் தி.மு.க.வினர். மேலும் இத்திட்டங்கள் எந்த வழியிலாவது நிறைவேறும் என்று ஏக கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள் கட்சித் தொண்டர்கள்.
தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் ஆக. 22ன்டில் நடந்தது. மு.க. ஸ்டாலின் தலைமை வகிக்க பொது செ. துரைமுருகன் முன்னிலை வகித்தார். பொருளாளர் டி.ஆர். பாலு, முதன்மை செ. கே.என்.நேரு, துணைச் செ.க்கள் கனிமொழி, பொன்முடி, ஐ.பெரியசாமி, திருச்சி சிவா, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், ஆர்.எஸ்.பாரதி, தி.மு.க.வின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் மா.செ.க்கள், செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் கட்சியில் ஆக்கப்பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பவள விழா கண்டு நூற்றாண்டை நோக்கி நடைபோடும் நம்முடைய தி.மு.க. புத்தெழுச்சியை பெற அடுத்த கட்ட பயணத்தில் வெற்றிகளை அடைய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினால் அமைக்கப்பட்ட தி.மு.க. மறுசீரமைப்பு குழுவானது பல்வேறு பரிந்துரைகளை தலைமை கழகத்திற்கு வழங்கியது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை கழக நிர்வாகிகளோடு கலந்து ஆலோசித்து அடுத்து மேற்கொள்ளப்படவேண்டிய திட்டங்களை தலைமை செயற்குழுவில் தீர்மானமாக முன்மொழிய இந்தக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. தமிழையும் தமிழ் நாட்டையும் காக்க பேரறிஞர் அண்ணாவால் இயக்கப்பட்ட மாபெரும் இயக்கம் தி.மு.க. தமிழகத் தலைவர் கலைஞரால் 5ஆண்டு காலம் கட்டமைக்கப்பட்டது. கொள்கைதான் உயிர். அமைப்புதான் உடல் என்பதை மனதில் வைத்தே இயக்கமும் தொண்டர்களும் இயங்கி வருகிறோம்.
இத்தகைய கழகத்தை இன்னும் வலிமை பொருந்தியதாக மாற்றிட கழகத் தலைவர் இப்போது சிறப்பான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார். இதன் தொடர்ச்சியாக 15 முறை கட்சி அமைப்பு ரீதியாக தேர்தல் நடத்தி நிர்வாகிகளை தேர்ந்தெடுத்துள்ளோம். இதன் தொடர்ச்சியாக 16வது கழக அமைப்பு தேர்தலை நடத்தி நிர்வாக மாற்றங்கள் மேற்கொள்ளப்பட பின்வரும் தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் முன்வைக்கப்படுகிறது. இந்தத் தீர்மானமானது இயக்கத்தை வலிமையாக்கும். தொண்டர்களை உற்சாகமடைய வைக்கும். கிளை கழகங்கள் தான் நமது கட்சியின் வலுவான கட்டமைப்புக்கு ஆணிவேர். கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகிகள் கிளைக் கழகச் செயலாளர்கள் கழகத்தின் நிர்வாகிகள் கட்டமைப்பில் புது ரத்தம் பாய்ச்சிட இளம் தலைமுறையினருக்கு வாய்ப்புகளை வழங்கிட கி.க. செ.க்கான அதிக பட்ச வயது 45 என்றும் கி.க.செ.வாக தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் இரண்டுமுறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும் என்று தீர்மானிக்கப்படுகிறது.
தற்போது மாநகரங்கள் நகரங்களின் கட்டமைப்புகளும் இதே முறையில் தான் நியமிக்கப்படவிருக்கிறது. இதுகுறித்து நாம் தி.மு.க.வின் உடன்பிறப்புகளிடம் பேசிய போது கட்சித் தலைமை சிறப்பான காரியத்தையும் நடைமுறையையும் மேற்கொண்டிருக்கிறது. அந்த தீர்மானத்தை நிறைவேற்றும் பட்சத்தில் புதிய புதிய இளைஞர்கள் கட்சியின் நிர்வாகம் பொருட்டு வருவர். ஆளுமைகளும் பெருகும். நமக்கும் என்றைக்காவது சுழர்ச்சி முறையில் பொறுப்பு கிடைக்கும் என்ற தீர்மானத்தில் கட்சி பணிகளை முன்னெடுத்து செய்வார்கள் என்பதுதான் தீர்க்கமான திட்டம் என்கிறார்கள்.
நாம் இதுகுறித்து தி.மு.க.வின் சீனியர்களில் ஒருவரான நெல்லை மாவட்ட பொருளாளர் அருண்குமாரிடம் பேசியபோது, அமைப்புகள் மாற்றம் செய்வது நல்ல திட்டம். எல்லோராலும் வரவேற்க தக்கது. இந்த திட்டமுறையால் பலருக்கு வாய்ப்பு கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. அதோடு தலைமை தவறுதலாக நடப்பதையும் கண்டறிந்து தயங்காமல் களைகளை எடுக்க பாடுபடவேண்டும். இதனால் மூத்தவர்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. அவர்களும் புதிய பொறுப்பாளர்களை கவனித்து கொள்வார்கள். எரிகிறவன் கையில்தான் பந்தை கொடுக்க வேண்டும் என்ற நிலை தற்போது வந்துள்ளது. இந்தத் திட்டத்தால் நல்ல மாற்றம் இருக்கும். தலைவர் அவர்கள் இதனை நடைமுறைபடுத்தும் முயற்சிகளை தாமதப்படுத்தாமல் மேற்கொள்ள வேண்டும் என்றார் ஆணித்தரமாக.
நெல்லை மாநகர கவுன்சிலரான ரவீந்தரோ, இந்த பைல் பாஸ் பண்ணப்பட்டு செயலுக்கு வருகிறபோது ரெண்டு வருஷம் என்பது தெளிவாகவும் வரவேற்கப்பட வேண்டிய திட்டம். பலருக்கு இந்த முறையில் 100 சதம் வாய்ப்பு நிச்சயம். தங்களுக்கு வாய்ப்பு வருகிற போது கட்சி வேலையை துடிப்பாக கவனிப்பார்கள். இது வரவேற்கப் படவேண்டிய விஷயம்தான். எனக்கும் பதவி கிடைக்கும் என்கிற நம்பிக்கை வந்துள்ளது. இப்ப டவுண் பகுதியில இசக்கி நமச்சிவாயம் என்பவர் 14 வருடங்களாக பகுதிச் செயலாளராக உள்ளார். அவருக்கு 64 வயதாகிறது என்றார்.
தென்காசி நகரின் நகராட்சி சேர்மனாகவும் நகரச் செயலாளராகவும் இருப்பவர் சாதீர். இந்தத் திட்டம் வரவேற்கத் தக்க விஷயம். ஆனால் தலைமை மிகவும் லேட்டாக இத்திட்டத்தைச் செய்கிறது. இதற்கு முன்னரே செய்திருந்திருந்தால் தற்போதைய வளர்ச்சி நிலை நன்றாக இருந்திருக்கும். ஒரு இளைஞர் நியமிக்கப்பட்டால் அவருடன் 50 பேர் உடன் வருவார்கள். கட்சியில் வளர்ச்சியும் இருக்கும். நான் பல வருஷமா பொறுப்பில் இருக்கேன். என்னோட பொறுப்ப மத்தவங்களுக்கு கொடுத்தா நல்ல வாய்ப்பு. வரவேற்க தகுந்தது தானே இந்த விஷயம். இதுபோன்று கட்சி பல நல்ல திட்டங்களை அறிவிப்பதோடு நிறுத்திக்கொண்டு செயல்படுத்தாமல் விட்டது. அதுபோல் இந்தத்திட்டமும் நடைமுறைப்படுத்தப்படாமல் போய்விடக்கூடாது என்றார் ஆணித்தரமாக.
நெல்லையின் தி.மு.க. வழக்கறிஞரான ராஜா முகம்மது, இந்தத் திட்டம் ஆரோக்கியமான போக்குதான். நாம் இந்த இடத்தில் இருந்து வேலை பார்க்க வேண்டும் என்கிற நிலை வந்தவங்களுக்கு அந்த சூழல் இயல்பாகவே போய்விடும். ஒரு ஒன்றியச் செயலாளர் பொறுப்பில் இருப்பவர். இங்கு ஒரு ஆளுமை உருவாக்க முடியாமலே போய்விடுகிறது. இப்படியொரு திட்டத்தால் மத்தவங்களுக்கு நல்ல ஒரு வாய்ப்பு உருவானது. இந்தத் திட்டத்தால் கட்சியில் ஆளுபவர்கள் தொடர்ந்து வருவார்கள். மற்றவர்களும் விருப்பத்தின் பேரில் கட்சியில் வந்து சேர்வார்கள். இது 100 சதவிகிதம் சிறப்பான திட்டம். இதை நிறைவேற்றினால் நல்ல ரிசல்ட் கிடைக்கும். இவர் சொன்னார் அவர் சொன்னார் என்று அழுத்தம் காரணமாக இந்தத் திட்டத்தை முன்புபோல் கிடப்பில் வைத்துவிடக் கூடாது. கொண்டுவந்ததை நிறவேற்றினால் கட்சியின் பல இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். இதுபோன்ற திட்டம் வேறு எந்தக் கட்சியிலும் கொண்டுவரப்படவில்லை. இத்திட்டத்தை செயல்படுத்தினால் தமிழகத்தில் தி.மு.க. நிச்சயம் வலிமை பெறும் என்றார் தீர்க்கமாக. தி.மு.க.வின் இந்த புரட்சிகரமான திட்டம் உடன்பிறப்புகளை உற்சாகத்தில் வைத்திருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)