வழி தெரியாததால் விழி பிதுங்கும் விவசாயிகள்! தேவை ஒரு வாழை ஆராய்ச்சி மையம்
மேட்டுப்பாளையம்: ‘மேட்டுப்பாளையம் தாலுகாவில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை பயிர் செய்வதால், வாழையிலிருந்து மதிப்புக் கூட்டிய பொருட்களை உற்பத்தி செய்யவும், விவசாயிகளுக்கு தொழில்நுட்ப வழிகளை தெரிவிக்கவும், வாழை ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும்’ என, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் தாலுகாவில் காரமடை, சிறுமுகை ஆகிய பகுதிகளிலும், அன்னுார், வீரபாண்டி, பவானிசாகர் ஆகிய பகுதிகளிலும் வாழை பிரதான விவசாயம். வாழைத்தார்கள், அதிகளவில் கேரளா, மும்பைக்கும் அனுப்பப்படுகின்றன. விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, வாழை ஆராய்ச்சி மையம், மேட்டுப்பாளையம் பகுதியில் அமைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
காரமடை அரங்கநாதர் உழவர்கள் உற்பத்தியாளர்கள் நிறுவன தலைவர் முத்துசாமி கூறியதாவது:
வாழை கன்று நடவு செய்து, 10 அல்லது 11 மாதங்களில், விவசாயிகள் அறுவடை செய்கின்றனர். எவ்வித மதிப்பு கூட்டாமல், வெறும் வாழைத்தாராக விற்பனை செய்கின்றனர். மதிப்பு கூட்டியும், பல்வேறு வகையான பொருட்களை உற்பத்தி செய்யவும், புதிய தொழில் நுட்பங்களை விவசாயிகள் தெரிந்து கொள்ள, அதற்கான தொழில்நுட்ப வல்லுநர்கள் வேண்டும்.
திருச்சி மாவட்டம், குளித்தலை, தொட்டியம், முசிறி ஆகிய பகுதிகளில், பூவன், ரஸ்தாலி ரகங்கள், பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிர் செய்யப்படுகின்றன. இப்பகுதியில் வாழை ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. மையம் சார்பில், வாழை தார், பழங்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்வது, வாழைக்காயிலிருந்து என்னென்ன பொருட்கள் உற்பத்தி செய்யலாம் என்பது குறித்து, விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கின்றனர்.
மேட்டுப்பாளையம் தாலுகாவில் நேந்திரன் வாழை அதிகளவில் பயிர் செய்யப்படுகிறது. வியாபாரிகள், வாழைக்காயை, மதிப்பு கூட்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். வாழை நாரில் அலங்கார பொருட்கள், நுால் உற்பத்தி செய்யும் பணிகளில் பலர் ஈடுபடுகின்றனர். தண்டிலிருந்து சாறு எடுத்து அதை விற்பனை செய்கின்றனர். வாழைப்பழத்தை மதிப்பு கூட்டி விற்பனை செய்கின்றனர். வாழையில், 50 வகையான மதிப்புக் கூட்டிய பொருள்கள் விற்பனை செய்வதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறு செய்தால் விவசாயிகளுக்கு, கூடுதல் வருவாய் கிடைக்கும்.
எனவே, மேட்டுப்பாளையம் பகுதியில் வாழை ஆராய்ச்சி நிலையம் அமைக்க, அரசு முன்வர வேண்டும். இதனால், மேட்டுப்பாளையம் தாலுகா மட்டும் அல்லாமல் பவானிசாகர், சத்தியமங்கலம், வீரபாண்டி, பெரியநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் பயன் பெறுவர்.
இவ்வாறு, அவர் கூறினார்.
தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் நந்தினி கூறுகையில், ‘காரமடை வட்டாரத்தில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில், வாழை பயிர் செய்கின்றனர். இயற்கை சீற்றம் பாதிப்பு இல்லாமல், நல்லபடியாக விளைந்தால், எதிர்பார்த்த வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. வாழை விவசாயம் குறித்து, விவசாயிகளுக்கு தேவையான வழி முறைகளை வழங்கி வருகிறோம்,’’ என்றார்.