அரசு பங்களாவை காலி செய்யாத மாஜி அமைச்சர் மஹாதேவப்பா

பெங்களூரு: அரசு பங்களாவுக்காக போக்குவரத்து துறை அமைச்சர் பைரதி சுரேஷ், முன்னாள் அமைச்சர் மஹாதேவப்பா இடையே இழுபறி ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் சித்தராமையா அரசில் சமூக நலத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் மஹாதேவப்பா. இவருக்கு பெங்களூரின் பிரபலமான கிரெசன்ட் சாலையில் உள்ள 2ம் எண் கொண்ட அரசு பங்களா வழங்கப்பட்டிருந்தது.
சித்தராமையா, முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பின், சிவகுமார் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இதில் மஹாதேவப்பாவுக்கு இடம் கிடைக்கவில்லை.
90 நாள் அவகாசம் சிவகுமார் அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகிக்கும் பைரதி சுரேஷுக்கு, கிரெசன்ட் சாலையில் உள்ள 2ம் எண் கொண்ட பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது.
அந்த பங்களாவில் வசிக்கும் முன்னாள் அமைச்சர் மஹாதேவப்பா, இதுவரை காலி செய்யவில்லை. விதிமுறைகளின்படி அவர், அந்த பங்களாவை காலி செய்ய இன்னும் 90 நாட்கள் கால அவகாசம் உள்ளது.
ஆனால், பங்களாவை காலி செய்யும்படி மஹாதேவப்பாவுக்கு அமைச்சர் பைரதி சுரேஷ் நெருக்கடி கொடுக்கிறார். மஹாதேவப்பாவின் ஊழியர்களையும் மிரட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மஹாதேவப்பா வசிக்கும் நிலையில் பைரதி சுரேஷ் அந்த பங்களாவை புதுப்பிக்கும்படி உத்தரவிட்டுள்ளதால், அதிகாரிகள் பணியை துவக்கியுள்ளனர். மீட்டிங் ஹாலை இடித்துள்ளனர். பெயின்டிங் பணியும் நடக்கிறது. இது மஹாதேவப்பாவுக்கு எரிச்சலை அளித்துள்ளது.
விரைவில் காலி இது குறித்து அவர் கூறியதாவது:
தற்போது நான் வசிக்கும் இல்லம், அமைச்சர் பைரதி சுரேஷுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே காலி செய்யும்படி என்னிடம் கூறியுள்ளார். அவருக்கு தொந்தரவாக இருப்பதால் இல்லத்தை விரைவில் காலி செய்யும்படி வலியுறுத்த கூடும். இதில் தவறு ஏதும் இல்லை.
மூத்தவர், இளையவர் என்ற கேள்விக்கே இடம் இல்லை. அவர், தற்போது அமைச்சராக இருக்கிறார். அவரது அன்றாட பணிகளுக்கு, இடையூறாக இருக்க கூடாது என்பது, என் எண்ணமாகும்.
இதற்கு முன், நான் அமைச்சராக இருந்ததால், அந்த இல்லத்தை அரசு எனக்கு வழங்கியது. அன்று முதல் நான் இங்கு வசிக்கிறேன். இப்போது நான் அமைச்சர் இல்லை.
எனவே, இல்லத்தை விரைந்து காலி செய்து கொடுப்பதுதான் தர்மம். பெங்களூரில் எனக்கு சொந்த வீடு இல்லை; வாடகை வீடு தேடுகிறேன். தகுதியான வீடு கிடைத்ததும். அரசு பங்களாவை காலி செய்து விடுவேன்.
சட்டசபையிலும் கூட, பைரதி சுரேஷ் என்னிடம் இல்லம் தனக்கு வேண்டும் என, கேட்டார். அப்போதும் நான் அவரிடம், வீடு தேடுகிறேன். கிடைத்தவுடன் காலி செய்வதாக கூறினேன். இவ்விஷயத்தில், யாரையும் நான் குறை கூறமாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.