திருச்சியில் மாணவர்களுடன் கலந்துரையாடிய ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்

திருச்சி: நேற்று முன்தினம் திருச்சி வந்த வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் குருதேவ், கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருதேவ் தமிழகம் வந்துள்ளார். கடந்த 15ம் தேதி திருச்சியில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் மற்றும் திருவெள்ளறை பெருமாள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
முன்னதாக திருச்சி, புலிவளம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டு இருந்த ஹெலிபேடில் அவர் பயணித்த ஹெலிகாப்டர் இறங்கியது. இதனையறிந்த அக்கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருதேவை பார்க்க ஒன்று கூடினர். அவர்களிடம் நலம் விசாரித்த ஸ்ரீஸ்ரீரவிசங்கர் குருதேவ் அவர்களுடன் கலந்துரையாடினார். மாணவர்கள் எழுப்பிய ஒரு சில கேள்விகளுக்கு எந்தவித தயக்கமும் இன்றி பதிலளித்தார்.
தொடர்ந்து அவர்களிடம் என்ன படிக்கின்றீர்கள் என விசாரித்த அவர், சமூக வலைதளம் வாயிலாக தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிப்பதாகவும், மாணவர்கள் அனைவரும் மலர்ந்த முகத்துடனும் ' ஸ்டைல்' ஆகவும், ' ஜாலி' ஆகவும் இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
தற்போது அவசரமாக செல்ல உள்ளதால், அடுத்த முறை வரும்போது மாணவர்களுடன் மீண்டும் கலந்துரையாடுவேன் எனத் தெரிவித்தார்.