வழிப்பறி வழக்கில் 3 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
சிவகங்கை: இளையான்குடியில் வழிப்பறி வழக்கில் 3 பேருக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து குற்றவியல் நீதிபதி உத்தரவிட்டார்.
சிவகங்கை மாவட்டம் சாலைக்கிராமம் அருகே தெற்கு சமுத்திரம் பகுதியை சேர்ந்த வட்டாயுதம் மனைவி அன்னமயில் 62. இவர் 2018 ஆக.,7 அன்று மாலை 6:00 மணிக்கு சாலைக்கிராமம் சந்தையில் பொருட்கள் வாங்கிவிட்டு தெற்கு சமுத்திரம் கண்மாய் அருகே நடந்து சென்றார்.
அந்த வழியாக காரில் வந்த இருவர் வழி கேட்பது போல் நடித்து அன்னமயில் அணிந்திருந்த ஏழரை பவுன் தங்க செயினை பறித்துச் சென்றனர்.
அன்ன மயில் சாலைக்கிராமம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து பரமக்குடியை சேர்ந்த சக்திவேல் 45, சென்னை செல்வ குமார் 30, தினேஷ்குமார் 31, ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு இளையான்குடி குற்றவியல் நீதிமன்றம் எண்.1ல் நடந்தது. வழக்கை நீதிபதி மணிவர்மன் விசாரித்தார்.
குற்றம் சாட்டப்பட்ட சக்திவேல், செல்வகுமார், தினேஷ்குமாருக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.