Politics
“கழிவு நீரால் தண்ணீர் விஷமாகுது... ஊரே காலியாகுது!”

டி.என்.பி.எல் ஆலையால் கதறும் 15-க்கும் மேற்பட்ட கிராமங்கள்!
“தண்ணியைக் குடிச்சா நோய் வருது... வயல்ல விட்டா பயிர் கருகுது... மாட்டுக்குக் குடுத்தா மாடே செத்துப்போகுது!” - இப்படிக் கதறுகிறார்கள் கரூர், திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த கிராம மக்கள். ஒருகாலத்தில் தங்கள் வாழ்வாதாரமாக இருந்த நிலமும், நீரும், கால்நடைகளும் பாழாகி பலியாகிவருவதாகக் கூறி அதிரவைக்கிறார்கள்.
இதற்கெல்லாம் காரணம், மணப்பாறைக்கு அருகே மொண்டிப்பட்டியில் இயங்கிவரும் டி.என்.பி.எல் காகித ஆலையின் கழிவுநீர்தான் என்கிறார்கள் பாதிக்கப்பட்ட மக்கள். “நிலத்தடி நீரே விஷமாகிடுச்சு... ஊரையே காலி பண்ண வேண்டியதுதான்!” என அவர்கள் வைக்கும் புகார்களின் பின்னணி என்ன... உண்மையிலேயே ஆலையின் கழிவுநீரால் இந்தப் பகுதிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றனவா... அந்தக் கிராமங்களுக்குள் நேரில் சென்றோம்.
கரூர் மாவட்டத்திலுள்ள பெரியவீட்டுக்காரன் பட்டியைச் சேர்ந்த முனியப்பன், “இந்த ஆலையை அரசாங்கம் கொண்டுவர்றப்போ, ‘எல்லாருக்கும் வேலை கிடைக்கும்’னு ஆசைவார்த்தை சொன்னதால, ஆலையை வெக்க ஒத்துக்கிட்டோம். ஆனா, ஆலைக் கழிவுநீர் நிலத்தடி தண்ணியில கலந்ததால, மூணு வருஷமா விவசாயம் பாதிச்சிருக்கு. மக்களுக்கும் கால்நடைகளுக்கும் பல பிரச்னைகள் வந்துச்சு. டாக்டருங்ககூட, ‘ஊருத் தண்ணி நல்லா இல்லை, பயன்படுத்தாதீங்க’ன்னு சொல்லிட்டாங்க. ஆனா, வேற தண்ணி இல்லாததால தெரு பைப்புத் தண்ணியைத்தான் பயன்படுத்துறோம். இதனால ஆறு மாசமா பலவிதமான உடம்பு உபாதைகள். ரத்தத்துல உப்பு அதிகமாயிடுச்சு, கிட்னி பிரச்னை, கர்ப்பப் பிரச்னை, வயிற்று நோய்னு ஊரே ரொம்பக் கஷ்டப்படுது” என்றார் ஆதங்கத்துடன்.
அடுத்துப் பேசிய சுதா என்ற பெண்மணி, “கொஞ்ச நேரம் பாத்திரத்துல தண்ணியை வெச்சிருந்தாலே, மேல வெள்ளையா எண்ணெய்ப்படலம் மாதிரி மிதக்குது. இதுல குளிக்கிறதால ரெண்டு கையிலயும் பயங்கரமா அரிப்பு வந்து, தழும்பாயிடுச்சு. மருந்து போட்டாலும் ராத்திரியெல்லாம் அரிப்பு தாங்க முடியலை. ஆஸ்பத்திரிக்குப் போனா, ‘தண்ணியை மாத்துங்க’ன்னு சொல்றாங்க. வேற தண்ணிக்கு நாங்க எங்க போறது?” என்று வேதனையோடு கேட்டார்.
சதீஷ்குமார் என்பவர் பேசுகையில், “டி.என்.பி.எல் ஆலையில கெமிக்கல் கலந்த கழிவுநீரைச் சுத்திகரிக்காம ஒரு குளத்துல தேக்கி வெக்கிறாங்க. மழை பெய்ஞ்சா, அந்தத் தண்ணீரை வாய்க்கால்ல திறந்துவிடுறாங்க. மறுபடி குளமும் நிறைஞ்சிடுச்சுன்னா, தானாவே ஊர்க் குளம், கிணறுகள்ல கழிவுநீர் கலந்துடுது. இதனால நிலத்தடி நீரே விஷமாகிடுச்சு. காத்து அதிகமா அடிக்கிற நேரத்துல ஆலையோட ராட்சசப் புகைபோக்கிகள்ல இருந்து விஷவாயு மாதிரி ஏதோ வருது. இதனால சுவாசப் பிரச்னையும் இருக்கு.
இதனால கரூர் மாவட்டத்துல பெரியவீட்டுக்காரன்பட்டி, தாதம்பட்டி, ஆணைக் கவுண்டன்பட்டி, பில்லூர், கரிச்சாம்பட்டி, முத்தக்கவுண்டன் பட்டி, செவக்காட்டுப்பட்டி, பூவாய்ப்பட்டி, பாலசமுத்திரப்பட்டி உள்ளிட்ட ஊர்களும், திருச்சி மாவட்டத்துல பெரியப்பட்டி, வடக்குசேர்பட்டி, தெற்குசேர்பட்டி, மொண்டிப்பட்டி உள்ளிட்ட ஊர்களும் பாதிக்கப்பட்டிருக்கு. இந்த விஷத் தண்ணீரைக் குடிச்சதால, கடந்த ஒரு வாரத்துல மட்டும் மூணு பேருக்கு பக்கவாதம் வந்திருக்கு.
பில்லூரைச் சேர்ந்த விஷ்ணு உயிரிழந்துட்டாரு. ஆணைக்கவுண்டன்பட்டியைச் சேர்ந்த 26 வயசு மோகனுக்கும் பக்கவாதம் வந்திருக்கு. ஒரு வயசுகூட ஆகாத குழந்தைகளுக்குக்கூட உடம்புல உப்பு அதிகமா இருக்கு. இதையெல்லாம் ஆலை நிர்வாகத்துக்கும், அதிகாரிகளுக்கும் பலமுறை சொல்லியும் எந்த நடவடிக்கையும் இல்லை” என்றார் விரக்தியாக!
ஜானகி என்பவர் பேசியபோது, “எங்களுக்குக் கொஞ்சம் நிலமும், பால்மாடுகளும் இருக்கு. அதுல வர்ற வருமானத்துலதான் குடும்பத்தை ஓட்டுறோம். ஆனா, கடந்த மூணு வருஷமா விவசாயமும் பாதிக்கப்பட்டிருக்கு. இந்த வருஷம் நெல் போட்டோம், கருகிப்போச்சு. புடலங்காய் விதை போட்டோம், முளைக்கவே இல்லை. மாட்டுத் தீவனத்துக்காக சோளம் விதைச்சு ஒரு வாரமாச்சு, முளை விடலை. ஆலையோட கழிவுநீர் பிரச்னையால விவசாயம் போச்சு; ஆடு, மாடு, கன்றுகளும் இறக்குற நிலை வந்துடுச்சு. எங்க உசுரையாவது காப்பாத்திக்க அரசு, எங்க ஊர்களுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்துல குடிநீர் குடுக்க ஏற்பாடு செய்யணும். இல்லன்னா, இதே நிலை நீடிச்சா ஊரையே காலி பண்ணிட்டுப் போகவேண்டியதுதான்” என்றார் விரக்தியாக.
இந்த விவகாரம் குறித்து, மொண்டிப்பட்டி டி.என்.பி.எல் ஆலையை உள்ளடக்கிய மணப்பாறை தொகுதியின் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் கதிரவனிடம் பேசினோம். நாம் சொன்ன தகவல்களைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டவர், “நான் நேரில் சென்று ஆய்வுசெய்கிறேன். பாதிப்புகள் இருப்பது உண்மை என்றால், அதைக் களைவதற்கான அத்தனை முயற்சிகளையும் எடுக்கிறேன்” என்றார்.
அதைத் தொடர்ந்து, மொண்டிப்பட்டி டி.என்.பி.எல் ஆலையின் முதன்மை பொது மேலாளர் (Chief General Manager) பானு பிரசாத்திடம் பேசினோம். “முறையாகக் கழிவுநீரை சுத்திகரிக்கிறோம். இருந்தாலும், ஏதாவது பிரச்னை இருக்கிறதா என்று எல்லா பக்கமும் உடனே சோதனை செய்கிறேன்” என்றார்.
மக்கள் ஊரைக் காலிசெய்துவிட்டுப் போவதற்குள் செய்தால் நல்லது!
