ஜெயமோகன் எழுதும் `மேகங்களின் குரல்!’ 19 - பிறந்த மண்ணின் நேசம்!
அதெல்லாம் இல்லை. நான் இங்கே வருவது யாருக்குமே தெரியாது. ஊர்க்காரர்கள் யாரும் என்னைப் பார்த்தால்கூட அடையாளம் கண்டு கொள்ள மாட்டார்கள்

அன்றாடத்திலிருந்து அதீதம்!
நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியிலிருந்து தெற்கே பெரும்பாலான ரயில்களுக்குப் பயணச்சீட்டுகள் கிடைப்பது மிக அரிது. ஆனால், ஒரு ரயிலில் எப்போதுமே பயணச்சீட்டு கிடைக்கும். அது ஜம்மு தாவி எக்ஸ்பிரஸ். ஏனென்றால், அது சென்னைக்குள் நுழையாது. ஜம்முவிலிருந்து கிளம்பி, டெல்லிக்குச் சென்று, ஜோலார்பேட்டை வழியாக மதுரை வரை வரும்.
அந்த ரயிலில் டெல்லியிலும், டெல்லியை ஒட்டிய பிற வடஇந்திய நகரங்களிலும் சாலைகளில் உணவகமோ, கடையோ வைத்திருப்பவர்கள், சிறு தொழில்களை நடத்துபவர்கள் என அடித்தள மக்கள்தான் இருப்பார்கள். ரயில் கிளம்பி சிறிது நேரத்திலேயே அந்தப் பெட்டி ஒரு சிறு கிராமம்போல ஆகிவிடும். பெண்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிப் பழகி, உரையாடிக்கொண்டிருப்பார்கள். ஆண்கள் சீட்டாடுவார்கள். ரயில் நிலையங்களில் இறங்கி, அங்கே ரகசியமாக விற்கப்படும் மதுவை அருந்திவிட்டு வருவார்கள். அரசியல் பேசுவார்கள். ஒவ்வொருவரும் இன்னொருவருக்கு முழுமையாகத் தெரிந்தவராக ஆகிவிடும்போது மதுரை வந்துவிடும். ரயில் நின்றதும் இறங்கும்போது சிலர் கண்ணீர்விட்டு அழுவதையும், கட்டித் தழுவிக்கொள்வதையும் பார்க்க முடியும்.
டெல்லியில் ரயில் கிளம்பியதுமே எவரேனும் ஒருவர் சிறிய ஒலிபெருக்கிக் கருவிகளைக் கட்டி, ஒலிநாடாக்களில் சினிமாப் பாடல்களை ஓடவிடுவார். பாட்டுப் போடுபவர் எம்.ஜி.ஆர் ரசிகரென்றால் எம்.ஜி.ஆர் பாடல்கள் மட்டும்தான் இருக்கும். சிவாஜி ரசிகரென்றால் சிவாஜி பாடல்கள்.
ஏறத்தாழ இரண்டு இரவுகளும், மூன்று பகல்களும் ஆகும் அந்த ரயில் டெல்லியிலிருந்து மதுரைக்கு வந்து சேர. இந்தப் பொழுது முழுக்க நாம் அறியாதவர்களாக இருந்தாலும், நம்மீது பிரியம்கொண்ட ஒரு சுற்றத்துக்குள் இருப்போம். அப்படியொரு பயணத்தில்தான் நான் முத்துவைச் சந்தித்தேன். அவர் அப்போது டெல்லியில் துப்புரவுத் தொழிலாளியாகப் பணியாற்றிக்கொண்டிருந்தார்.
முத்து எம்.ஜி.ஆரின் ரசிகர் அல்ல, வெறியர். அல்லது அதற்கும் மேல். எம்.ஜி.ஆர் படம் போட்ட சட்டை போட்டிருந்தார். கழுத்தில் எம்.ஜி.ஆர் படம்போட்ட ஒரு டாலர் மாலை அணிந்திருந்தார். கைக்கடிகாரத்திலும் எம்.ஜி.ஆர் படத்தை ஒட்டிவிட்டிருந்தார். எம்.ஜி.ஆர் போலவே முடியை நெற்றியில் இழுத்துச் சுருட்டிவிட்டிருந்தார்.
“நீங்கள் எம்.ஜி.ஆர் ரசிகரா?” என்று நான் கேட்டதுமே முத்து பரவசம் அடைந்தார்.
“ஆமாம் சார். எம்.ஜி.ஆர்தான் என் வாழ்க்கை. இரவு, பகல் வாத்தியாரை நினைத்துக்கொண்டுதான் இருப்பேன். கண் விழித்ததும் அவரை நினைப்பேன். இரவில் எம்.ஜி.ஆர் பாட்டு கேட்டுக்கொண்டே தூங்கிவிடுவேன். எம்.ஜி.ஆர் படங்களை எங்கேயிருந்தாலும் போய்ப் பார்ப்பேன். முன்னெல்லாம் டெல்லியில் எப்போதாவது சில பழைய தியேட்டர்களில் எம்.ஜி.ஆர் படம் போடுவார்கள். அந்தப் படம் எடுக்கிற வரைக்கும் தியேட்டரிலேயே பார்த்துவிடுவேன். இப்போது டி.வி வந்துவிட்டது. எப்படியாவது பணம் சேர்த்து ஒரு டெக் வாங்கி, வீட்டில் வாத்தியார் படங்களைப் போட்டுப் பார்த்துக்கொண்டேயிருக்கவேண்டும். அதுதான் என் ஆசை.’’
அவருக்கு எம்.ஜி.ஆர் மீது இருந்த பற்று என்பது வாழ்க்கைக்கான ஓர் ஆதாரமான பிடிப்பு என்று எனக்குத் தோன்றியது. பல தருணங்களில் இந்தத் தீவிர ரசிகர்களின் வாழ்க்கையில் இலக்கென்றோ, கனவென்றோ, மகிழ்ச்சி என்றோ, சாதனை என்றோ எதுவும் இருப்பதில்லை. அந்த வகைப் பித்து வழியாக அவர்கள் அனைத்தையும் நிறைவு செய்து கொள்கிறார்கள். ஒரு வகையான தப்பித்தல்தான். ஆனால் எப்படியாவது மனிதர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் சரி என்று அவர்களைப் பார்க்கும்போது தோன்றுகிறது.
நான் அவரிடம் எம்.ஜி.ஆரைப் பற்றிப் பேசத் தொடங்கினேன். எம்.ஜி.ஆரின் படங்களையும் கதைகளையும் முத்து நினைவில் வைத்திருந்தார். ஒவ்வொரு படத்திலும் எம்.ஜி.ஆர் முதல் காட்சியில் எப்படித் தோன்றுவார், சண்டைக் காட்சியில் எப்படி சைகைகளைக் காட்டுவார், கதாநாயகியைக் கொஞ்சும்போது அவருடைய முக பாவனைகள் எப்படி இருக்கும்... அனைத்தையும் அப்படியே அவர் நடித்துக் காட்டினார்.
அவருக்கு எம்.ஜி.ஆரின் தோற்றத்துடன் எந்தச் சம்பந்தமும் இல்லை. மெலிந்த கன்னங்கள், ஒடுங்கிய முகம், நடுத்தர வயதான கரிய மனிதர். ஆனால் அவர் முகத்திலும் உடலிலும் எப்படியோ எம்.ஜி.ஆர் வந்து திகழ்ந்து செல்வது எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை அளித்தது. உள்ளம்தான் உடலில் நிகழ்கிறது என்று சொல்வது எத்தனை உண்மை என்று எண்ணிக் கொண்டேன்.
முத்து மெல்ல மெல்லத்தான் தன் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி என்னிடம் சொன்னார். அவருக்குத் திருமணமாகி மனைவி இருந்தார். ஒரு மகன். அவன் அப்போது பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். அவருடைய மனைவி வடஇந்தியாவைச் சேர்ந்தவள். சற்று குரலைத் தாழ்த்தி, “என்னைப்போல அங்கே துப்புரவு வேலை செய்யும் பெண்தான்” என்று சொன்னார்.
“நீங்களும் துப்புரவு வேலை செய்பவரா?” என்று நான் கேட்டேன்.
“இல்லை, நாங்கள் இங்கே துப்புரவு வேலையெல்லாம் செய்வதில்லை. ஆனால் அதற்குச் சமமான சாதியைச் சேர்ந்தவர்கள்” என்றார். அதன் பிறகு அதைப் பற்றி அதிகம் பேச அவர் விரும்பவில்லை. மீண்டும் எம்.ஜி.ஆர் பற்றிய பேச்சு திரும்பியது.
இரவாகியது. ஒவ்வொருவரும் படுக்கைகளை விரித்துப் படுத்துக் கொண்டார்கள். விளக்குகள் அணைக்கப்பட்டன.அது கோடைக் காலமானதால் இரவிலும் கடுமையான வெப்பம் இருந்தது. நான் வெளியே சென்று கதவருகே நின்றுகொண்டேன். முத்து வந்து என்னருகே நின்றார். எனக்கு ஒரு பீடியை நீட்டினார், நான் அதை மறுத்தேன். அவர் பற்றவைத்துக் கொண்டார்.
அவர் என்னைப் பற்றி விசாரித்தார். நான் அப்போது படிப்பை முடிக்காமல் வீட்டைவிட்டுக் கிளம்பி எங்கே, என்ன செய்கிறேன் என்றில்லாமல் சுற்றிக் கொண்டிருந்தேன். ஆனால் வேலைக்காக, ஒரு நேர்காணலுக்காக டெல்லிக்குச் சென்றதாக மட்டும் சொன்னேன். அது அவருக்கு மகிழ்ச்சியளித்தது.
“டெல்லி நல்ல ஊர். நமது ஊரைச் சேர்ந்த நேர்மையானவர்கள் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்” என்றார்.
“நீங்களும் வேலை தேடித்தான் அங்கே சென்றீர்களா?” என்று நான் கேட்டேன்.
அவர் பீடியை ஆழ்ந்து இழுத்தபடி, வெளியே பறந்து பின்னால் சென்று கொண்டிருந்த மின்கம்பங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். பீடியை இழுக்கும்போது அவருடைய கன்னங்கள் குழிந்து எழுவதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். கழுத்தின் குரல்வளை ஏறி, இறங்கியது. பீடியை அணைத்து வெளியே வீசிவிட்டு, புகையை ஒரு கமறலுடன் ஊதினார். பிறகு என்னிடம், “நான் ஊரைவிட்டு ஓடிப்போனேன்” என்று சொன்னார்.
நான், `ஏன்?’ என்று கேட்டுக்கொள்ளவில்லை. விரும்பினால் சொல்லட்டும் என்று இருந்து விட்டேன்.
“ஊரில் ஒரு சண்டை” என்றார்.
“என்ன சண்டை?’’
“நான் சண்டை போடவில்லை. என் அண்ணாதான் சண்டை போட்டான்.”
“எதற்காக?”
“ஒரு சாலை அருகில் காப்புச் சுவரில் அண்ணா அமர்ந்திருந்தான். அப்போது அந்த வழியாக ஊரின் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த பண்ணையார் ஒருவன் நடந்து சென்றான். அண்ணா கொஞ்சம் புத்தகமெல்லாம் படிப்பவன். அவன் செய்தித்தாளைப் படித்துக் கொண்டிருந்தமையால் பண்ணையார் வந்ததை கவனிக்கவில்லை. பண்ணையார் என் அண்ணனை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டுச் சென்றான்.” - முத்து தொடர்ந்து சொன்னார்.
“சிறிது நேரத்தில் பண்ணையாரின் இரண்டு அடியாட்கள் வந்து என் அண்ணாவை இழுத்து அவர் வீட்டுக்குக் கொண்டு சென்றார்கள். தன்னைப் பார்த்துவிட்டு வேண்டுமென்றே கால்மேல் கால் போட்டு அமர்ந்திருந்ததாக அந்தப் பண்ணையார் குற்றம்சாட்டினான். என் அண்ணாவை வசைபாடி, முகத்தில் காறி உமிழ்ந்து, செருப்பை எடுத்து சரமாரியாக அடித்தான். அதன் பிறகு அண்ணனை வெளியே கொண்டு தள்ளிவிட்டான்.”
“இதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. அடி வாங்கிய அண்ணா அப்படியே கிளம்பி வெளியே ஓடிவிட்டான். அன்று இரவில் எங்கிருந்தோ ஒரு வெட்டுக் கத்தியைத் தேடி எடுத்துக்கொண்டு திரும்பி வந்து, பண்ணையாரின் வீட்டின் அருகே வைக்கோல் போருக்குப் பின்னால் ஒளிந்திருந்தான்.
பண்ணையார் வீட்டில் கழிப்பறையெல்லாம் கிடையாது. ஒன்றுக்கு இருப்பதற்கு வெளியே மரத்தடிக்குத்தான் வர வேண்டும். அது அண்ணாவுக்குத் தெரியும். பண்ணையார் வந்ததும் பாய்ந்து அவரை வெட்டிவிட்டான். மூன்று முறை வெட்டுவதற்குள் ஓசை கேட்டு அடியாட்கள் ஓடிவந்தனர். அண்ணா தப்பியோடிவிட்டான்.
அடுத்த நாள் காலையில் அண்ணாவின் உடலை ஊருக்கு வெளியே இருந்த பழைய கிணற்றில் கண்டடைந்தார்கள். அண்ணா ஓடிச் சென்று அதில் விழுந்து தற்கொலை செய்து விட்டான்.
பண்ணையார் பிழைத்துக்கொண்டான். ஆனால் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவர்கள் திரண்டு வந்து எங்கள் குடியிருப்புப் பகுதியைத் தாக்கினார்கள்.கண்ணில் பட்டவர்களை யெல்லாம் அடித்தார்கள். பத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்குத் தீ வைத்தார்கள். எங்கள் வீடும் எரிந்து சாம்பலானது. அவர்கள் தாக்கத் தொடங்கியதுமே நான் ஓடித் தப்பிவிட்டேன். வயலுக்குத் தண்ணீர் போகும் காய்ந்துபோன மடைக்குள் புகுந்து ஒளிந்துகொண்டேன்.
``அம்மாவையும் அப்பாவையும் அவர்கள் இழுத்துச் சென்றார்கள். பண்ணையார் வீட்டு முன்னால் வைத்து அத்தனை பேரும் கூடி மாறி மாறி அடித்தார்கள். இருவருமே மயங்கி விழுந்தார்கள். ஊர்க்காரர்கள் இருவரையும் தூக்கிச் சென்று அரசு மருத்துவமனையில் சேர்த்தார்கள். இரண்டு நாள்களுக்குள் அவர்கள் இருவருமே இறந்துபோய்விட்டார்கள்.” - முத்து சொன்னார்.
“இருவருமா?”
“ஆமாம்.”
“போலீஸ் வழக்கு என்று பார்க்கவில்லையா?”
“ஐயா, எங்கள் ஊரில் சாதி வன்முறை நடக்காத நாளே கிடையாது. ஒரு நிகழ்ச்சிகூட போலீஸில் பதிவு ஆவதில்லை.”
அது எனக்குத் தெரியும். எண்பதுகளின் இறுதியில் தமிழ்நாட்டில் தலித் கட்சிகள் தலையெடுத்த பிறகுதான் சாதி வன்முறைகளை போலீஸ் வழக்குகளாகப் பதிவுசெய்யத் தொடங்கியது. அதற்கு முன்பு சமாதானத்தை உருவாக்குவது என்ற பெயரில் அடித்தவர்களையும் அடிபட்டவர்களையும் அமைதியாகப் போகும்படி அதிகாரிகள் சொல்வார்கள். சில வாரங்களுக்குப் பிறகு வன்முறை மீண்டும் நிகழும்.
நான் ஒன்றும் சொல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.
“நான் ஊருக்குச் செல்லவில்லை. பக்கத்து ஊருக்குச் சென்று ஒளிந்து கொண்டிருந்தேன். என்னைப் பிடித்தால் அடித்துக் கொன்றுவிடுவார்கள் என்று எனக்குத் தெரியும். என் மொத்தக் குடும்பமும் போய்விட்டது. ஊரில் தொடர்பே எதுவும் இல்லை. அப்பாவையும் அம்மாவையும் அரசு மருத்துவமனையிலிருந்து அப்படியே பொது மயானத்துக்குக் கொண்டு போய்விட்டார்கள்.” - முத்து தொடர்ந்தார்.
“நான் ஒளிந்திருந்த ஊரிலிருந்து கிளம்பி, கால்போன போக்கில் நடந்து, பஸ் பிடித்து மதுரைக்கு வந்தேன். அங்கிருந்து இதே ஜம்மு தாவி எக்ஸ்பிரஸ்ஸில் ஏறி டெல்லிக்கு வந்து இறங்கினேன். என் கையில் பணம் இல்லை. டிக்கெட்டும் எடுக்கவில்லை. பொதுப் பெட்டியில்தான் சென்றேன்.”
“அநாதையாக டெல்லிக்கு வந்து சேர்ந்தேன். ரயில் நிலையத்தில் இரண்டு உணவகங்களில் துப்புரவுப் பணி கிடைத்தது. பிறகு டெல்லி கார்ப்பரேஷன் ஊழியராக ஆனேன். என்னுடன் வேலை செய்த வால்மீகி சாதிக்காரரின் மகளைத் திருமணம் செய்து கொண்டேன். டெல்லி கார்ப்பரேஷன் அளித்த ஒரு சிறிய வீடு இருக்கிறது. மகன் படித்துக்கொண்டிருக்கிறான்.” - முத்து சொன்னார்.
நான், “இங்கே சொந்தக்காரர்கள் இருக்கிறார்களா?” என்று கேட்டேன்.
“இருக்கிறார்கள். ஆனால் எந்தத் தொடர்பும் இல்லை.”
“அடிக்கடி ஊருக்குச் செல்வீர்களா?”
“இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வருவேன்.”
“இப்போது இங்கே என்ன விசேஷம்... ஏதாவது திருமணம் நிகழ்கிறதா... சாமி கும்பிடுவதா?”
“அதெல்லாம் இல்லை. நான் இங்கே வருவது யாருக்குமே தெரியாது. ஊர்க்காரர்கள் யாரும் என்னைப் பார்த்தால்கூட அடையாளம் கண்டு கொள்ள மாட்டார்கள். விவசாயம் பொய்த்து ஊர் நிறைய மாறிவிட்டது. தெரிந்த பெரும்பாலானவர்கள் ஊரைவிட்டுப் போய்விட்டார்கள். பாதி ஊர் காலியாகக் கிடக்கிறது. நான் ஓர் ஆட்டோ வைத்துக்கொண்டு ஊர் வழியாகச் சுற்றி வருவேன். ஆங்காங்கே சிறிது நேரம் உட்கார்ந்திருப்பேன். அடுத்த ரயிலில் திரும்ப ஊருக்குச் சென்று விடுவேன்.”
“யாரிடமும் பேச மாட்டீர்களா?”
“இல்லை. யாருக்குமே என்னைத் தெரியாது. நான் அறிமுகப்படுத்திக்கொள்வதும் இல்லை. எனக்கு இன்னும் பயம் இருக்கிறது. ஆகவே, யாருமே என்னைத் தெரியாமல் இருப்பதுதான் நல்லது என்று நினைக்கிறேன்.”
“பிறகு எதற்காக அந்த ஊருக்கு வருகிறீர்கள்?” என்று கேட்டேன். “அங்கே ஒரு நல்ல நினைவுகூட இல்லையே?”
அவர் புன்னகைத்து, “மண் என்னை விடுவதில்லை சார்” என்றார். துயரா, மகிழ்ச்சியா என்று தெரியாத புன்னகையுடன் “இந்த உடம்பு அந்த மண்தானே?” என்றார்.
முண்டக உபநிடதத்தின் இரண்டாம் பகுதியின் முதல் அதிகாரத்தின் நான்காவது பாடல். ‘வானமே தலை; சூரியனும் சந்திரனும்தான் கண்கள்; திசைகளோ செவிகள்; வேதங்களே வாக்கு; காற்று மூச்சு; பிரபஞ்சம் இதயம். பாதங்களிலிருந்து எழுந்தது மண். மண்ணே அனைத்திலும் உள்ளும் புறமும் ஆக உள்ளது.’
‘ப்ருதிவீ ஹ்யேஷ ஸர்வபூதாந்தராத்மா’ என்பது வேதாந்த மரபின் தியான மந்திரங்களில் ஒன்று. அனைத்து பருப்பொருள்களும், அவற்றின் உள்ளுறையும் மண்ணே. சாமானியனின் வாழ்விலிருந்து எழுந்து என் முன் நின்றிருந்தது எங்கோ, எவரோ உணர்ந்த அடிப்படை உண்மை.
