பார்க்க அழகு... ஆபத்து அதிகம்! கடற்கரையில் கரை ஒதுங்கிய ‘ப்ளூ பட்டன்’ ஜெல்லிமீன்கள்

ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி பகுதியில் ‘ப்ளூ பட்டன்’ எனப்படும் ஜெல்லி மீன்கள் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கி வருகின்றன. இவற்றைத் தொடுவதால் உடல்நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் தொட வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி பகுதியில் ‘ப்ளூ பட்டன்’ எனப்படும் ஜெல்லி மீன்கள் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கி வருகின்றன. இதனைப் பார்க்கும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஜெல்லி மீன்களை கைகளால் தொட வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 2,000-க்கும் மேற்பட்ட கடல்வாழ் உயிரினங்கள், தாவரங்கள், பாசிகள், பவளப்பாறைகள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. அவற்றில் ஜெல்லி மீன்களும் முக்கியமான கடல்வாழ் உயிரினங்களாக உள்ளன. பல்வேறு வகையான ஜெல்லி மீன்கள் கடலில் காணப்படுகின்றன. அவை பார்ப்பதற்கு அழகாகவும், மிருதுவான தோற்றத்துடனும் காணப்பட்டாலும், சில வகை ஜெல்லி மீன்களைத் தொடுவதால் உடல்நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
நீல நிறத்தில், சட்டை பட்டன் அளவில் தட்டையாக காணப்படும் ‘ப்ளூ பட்டன்’ ஜெல்லி மீன்கள் தற்போது தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் அதிக அளவில் கரை ஒதுங்கி வருகின்றன. முகுந்தராயன் சத்திரம் முதல் தனுஷ்கோடி வரையிலான சில கிலோமீட்டர் தூரத்தில் ஆங்காங்கே ஆயிரக்கணக்கான ஜெல்லி மீன்கள் இறந்த நிலையில் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கிக் கிடக்கின்றன.
இதையும் வாசிக்க: கடல் அலைகளுக்கு நடுவே துள்ளிக்குதித்த டால்பின்கள்... பாம்பனில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கடல் வெப்பநிலை அதிகரிப்பு, கடல் சூழலில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் கடலில் கலக்கும் ரசாயனக் கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஜெல்லி மீன்கள் அதிகளவில் கரை ஒதுங்கும் நிகழ்வுகள் உலகின் பல்வேறு பகுதிகளில் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. இத்தகைய சூழலியல் மாற்றங்களின் காரணமாக தனுஷ்கோடி கடற்கரையிலும் தற்போது அதிகளவில் ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கி வருவதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தனுஷ்கோடி கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ள ஜெல்லி மீன்கள் நீல நிறத்தில் சட்டை பட்டன் போன்ற வடிவத்தில் காணப்படுகின்றன. கடலில் இருந்து கரைக்கு வந்த சிறிது நேரத்திலேயே இவை இளஞ்சிவப்பு நிறத்திற்கு மாறுவதாகவும் கூறப்படுகிறது. இந்த ஜெல்லி மீன்களைத் தொடுவதால் சிலருக்கு தோல் அரிப்பு, வீக்கம், மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, தனுஷ்கோடி கடற்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கரை ஒதுங்கியுள்ள ஜெல்லி மீன்களைத் தொடாமல் பாதுகாப்பாக இருக்குமாறு மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
