தமிழகம் – ஆந்திர நெடுஞ்சாலையில் போலீஸ் சோதனைச்சாவடி அவசியம்
கும்மிடிப்பூண்டி, செப். 8– கும்மிடிப்பூண்டி அருகே, ஆந்திராவை இணைக்கும் நெடுஞ்சாலையில், போலீஸ்

கும்மிடிப்பூண்டி அருகே, ஆந்திராவை இணைக்கும் நெடுஞ்சாலையில், போலீஸ் சோதனைச்சாவடி அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஆந்திர எல்லையோர பகுதியில், கும்மிடிப்பூண்டி அமைந்துள்ளது. ஆந்திராவுடன் தமிழகத்தை இணைக்கும் சென்னை – கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், ஆரம்பாக்கம் பகுதியில் போலீஸ் சோதனைச்சாவடி உள்ளது.
அதேபோல், ஆந்திர மாநிலத்தை இணைக்கும் கவரைப்பேட்டை – சத்தியவேடு சாலையில், பொம்மாஜிகுளம் பகுதியிலும் சோதனைச்சாவடி உள்ளது.
ஆனால், கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் கிராமத்தில் இருந்து மாநெல்லுார், பல்லவாடா, கண்ணம்பாக்கம் வழியாக, ஆந்திர மாநிலம் ஆரூர், தடா நோக்கி செல்லும் நெடுஞ்சாலையில், சோதனைச்சாவடி அமைக்கப்படவில்லை.
எப்போதாவது தகவல் கிடைத்தால் மட்டுமே, அந்த சாலையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், அந்த சாலை வழியாக அரிசி, கஞ்சா, மணல் கடத்தல்கள் நடப்பதாக கூறப்படுகிறது. அந்த சாலையில், கண்ணம்பாக்கம் கிராமத்தில் போலீஸ் சோதனைச்சாவடி அமைத்து, 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீசார் கண்காணித்தால், இரு மாநிலங்களுக்கு இடையேயான கடத்தல் சம்பவங்களை முற்றிலும் தடுக்க முடியும்.
அதற்கு, திருவள்ளூர் மாவட்ட காவல் துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.