Politics
பண்டிகையிலும் அரசியலா?

'திருவிழா, பண்டிகைகள் எல்லாம் இப்போது அரசியல் களங்களாக மாறி விட்டன...' என வருத்தப் படுகின்றனர், மேற்கு வங்க மாநில மக்கள்.
மேற்கு வங்கத்தில், முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தில், முதல் முறையாக இப்போது தான் பா.ஜ., ஆட்சி அமைத்துள்ளது. இதனால், பா.ஜ.,வில் சுவேந்து அதிகாரியின், 'மவுசு' அதிகரித்துள்ளது.
மேற்கு வங்கத்தில், ஆண்டுதோறும் நடக்கும் தசரா துர்கா பூஜை மிகவும் பிரசித்தம். மாநிலம் முழுதும் துர்கா தேவி சிலைகளை வைத்து, 10 நாட்கள் பூஜை செய்து, பின் நீர்நிலைகளில் கரைப்பர். இதற்காக, மாநிலம் முழுதும் ஆங்காங்கே பந்தல்கள் அமைக்கப்படுவது வழக்கம்.
நடப்பாண்டு, மேற்கு வங்கத்தின் ஜாதவ்பூரில் பந்தல் அமைக்கப்பட உள்ள இடத்தில், முதல்வர் சுவேந்து அதிகாரியின் சாதனைகளை விளக்கும் விதமாக, புகைப்படங்கள் மற்றும் ஆவணப் படங்களை காட்சிப்படுத்த விழாக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
சுவேந்து அதிகாரி, தொடக்கத்தில் திரிணமுல் காங்கிரசில் இருந்தது, அவர் நடத்திய நந்திகிராம் போராட்டம், பின்னர் பா.ஜ.,வில் இணைந்தது முதல், முதல்வரானது வரை, அவரது அரசியல் பயணம் பற்றிய புகைப்படங்கள், இந்த பந்தலில் இடம்பெற உள்ளன; இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
எதிர்க்கட்சியான திரிணமுல் காங்கிரசாரோ, 'பண்டிகை நடக்கும் இடத்தில், முதல்வரின் பெருமை பேசும் நிகழ்ச்சிகளை ஏன் நடத்த வேண்டும்; இதில் எதற்கு அரசியல்...?' என கொந்தளிக்கின்றனர்.