Economy, business and finance
தொகுப்பாளினி குறித்து அவதுாறு பிரபல வார இதழ் நிருபர் கைது

ஆதம்பாக்கம்: 'யூடியூப்' தொகுப்பாளினி குறித்து அவதுாறு வீடியோ வெளியிட்ட புகாரில், வார இதழ் ஒன்றின் நிருபர் தாமோதரன் பிரகாஷ், 58, என்பவர், ஆதம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 38 வயது பெண், 'யூ-டியூப்' சேனல் ஒன்றில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.
இவர், ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் செப்.,15 அன்று புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், 'கடந்த ஜனவரி மாதம் யூடியூப் சேனல் ஒன்றில், என் புகைப்படத்தைப் பயன்படுத்தி, தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், எச்.ஐ.வி., தொற்றால் நான் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவதுாறான மற்றும் தவறான தகவல்களை பரப்பும் வகையில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. பெண்மைக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் செயல்பட்டுள்ளதால், மேற்படி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.
விசாரித்த ஆதம்பாக்கம் போலீசார், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, அவதுாறு தகவல் வெளியிட்டதாக பிரபல வார இதழ் ஒன்றின் நிருபரான தாமோதரன் பிரகாஷை, செப்.,16ல் கைது செய்தனர்.