மோசடி! - கைவரிசை காட்டிய சதுரங்க வேட்டை கும்பல்!

"எனக்கு அமைச்சர் நெருக்கம். உங்க பையனுக்கு அரசு வேலை வாங்கித் தருகிறேன்''” என்று கூறி, பல லட்சம் வசூல்செய்துவிட்டு, போலி பணிநியமன ஆணையை வழங்க, ஏமாந்த நபர் போலீசில் புகார்கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்று நக்கீரனின் கதவைத் தட்டினார்.
செங்கல்பட்டு மாவட்டம், ஜமீன்பல்லாவரம், ஆர்.கே.வி. நகரைச் சேர்ந்த ஜெயசீலன் என்கிற சிவகுமார் நம்மைத் தொடர்புகொண்டு பேசினார். "நான் திருச்சி இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தில் பணியாற்றியவன். கடந்த 2016 ஆம் ஆண்டு பணியிட மாற்றமாக சென்னை வந்தேன். அங்கு பணியாற்றியபோது எனக்கு மேரி, அவரது கணவர் சாகுல் ஆகியோர் பழக்கமாகினர். கடந்த 2020-ஆம் ஆண்டு பணி ஓய்வுபெற்று பல்லாவரத்தில் குடும்பத்துடன் வாழ்ந்துவருகிறேன். மகன் பி.எஸ்சி. விஷுவல் கம்யூனிகேஷன் படித்த நிலையில், சாகுல் என்னிடம், அவர்களுக்குத் தெரிந்த சேலத்தைச் சேர்ந்த தயாநிதி, அரக்கோணத்தை சேர்ந்த சதீஷ் ஆகியோர் அமைச்சர்கள், உயரதிகாரிகள் மூலம் அரசு வேலை வாங்கித்தருகிறார்கள். எனது மகனுக்கும் தமிழக அரசின் வேலை வாங்கிக்கொடுப்பார்கள் என்று அறிமுகம் செய்துவைத்தார்.
அவர்களிடம் பேசியபொழுது, உங்கள் மகனுக்கு மட்டுமல்ல, அமைச்சர்களின் தனி கோட்டா மூலம் உங்களுக்குத் தெரிந்தவர் களுக்குக்கூட அரசு வேலை வாங்கித்தரலாம் என்று, கையில் வைத்திருந்த சில பணிநியமன ஆணைகளை என்னிடம் காட்டி நம்பவைத்தனர். அமைச்சர்கள் தங்கும் மயிலாப்பூர் அருகேயுள்ள அரசு பங்களாவுக்கு அழைத்துச்சென்றனர். அமைச்சர்களை சந்தித்துப் பேசியதாகவும், தற்போது டிகிரி முடித்த வர்களை வெவ்வேறு துறைக்கு அமைச்சர் கோட்டாவின் மூலம் தேர்வுசெய்கிறார்கள். உங்கள் உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களை அறிமுகம் செய்துவையுங்கள். குறைந்த பணத்தில் அரசு வேலை வாங்கித் தருகிறேன் என்று கூறினார்கள்.
இவர்களை நம்பி நானும் என் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் சிலரிடம் இதைப் பற்றி எடுத்துக்கூறி 7 பேருக்கு வேலைக்காக 23 லட்சம் ரெடிசெய்து, சென்னை மவுண்ட்ரோடு அண்ணா சாலைக்கு அருகி லுள்ள ஸ்டார் லாட்ஜில் வைத்து, கடந்த 2025, மே 6-ஆம் தேதி ரொக்கமாக ரூபாய் 12,50,000ஐ சதீஷ், தயாநிதி ஆகியோரிடம் கொடுத்தேன். மீதித்தொகையான 10,50,000-ஐ அக்கவுண்ட் ட்ரான்ஸ்பர் செய்துள் ளேன். ஆனால் பணத்தைப் பெற்றுக்கொண்டு யாருக்கும் வேலை வாங்கித்தராமல் ஏமாற்றிக்கொண்டே வந்தனர்.
திடீரென என்னிடம் அவர்கள் பேசுவதைத் தவிர்த்தனர். அவர்கள் வழங்கிய பணி நியமன ஆணை போலியானது என்பது தெரியவந்தது. இந்நிலையில் அந்த மோசடிக்காரர்களை ஒருவழியாக தேடிப்பிடித்தேன். கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் முதல் வாரம் பணத்தைக் கொடுப்பதாக, சென்னை ஸ்டான்லி லாட்ஜில் வைத்து பத்திரத்தில் எழுதிக்கொடுத்தனர். பின்னர் சிறுகச் சிறுக 6,50,000 கொடுத்தார்கள். மீதித் தொகையைக் கொடுக்காமல் ஏமாற்றிவந்தனர். அவர்களை தொடர்புகொண்டு பணத்தைக் கேட்டபோது மிரட்ட ஆரம்பித்தனர். நான் சென்னை திருவல்லிக்கேணி சிந்தாதிரிப் பேட்டை காவல் நிலையத்தில் கடந்த 2023, அக்டோபர் 4-ஆம் தேதி புகார் கொடுத்தேன். அதன்மீது எந்த நடவடிக்கையும் இல்லை.
இந்நிலையில் குரு என்கிற சிவராம கிருஷ்ணன், என்னை அணுகி உதவிசெய்வதாக காரல்மார்க்ஸ் என்ற வழக்கறிஞர் மூலம் எனது பணத்தைப் பெற்றுத்தருவதாக கூறி கடந்த 2024, டிசம்பர் 16-ஆம் தேதி, 3 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டார். பின்னர் அவரும் தலைமறைவானார். காவல் நிலையத்தில் புகார் கொடுத்தபோது அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் தயாநிதி மற்றும் அவனின் கூட்டாளிகள், மோசடி வழக்கில் கடந்த 2024 அக்டோபர் மாதம் கைதாகி சிறைக்கு போனதை, செய்தித்தாள் மூலம் தெரிந்துகொண்டேன். மேலும் தயாநிதி ஆவடி காவல் நிலையத்தில் குற்ற எண் 62/2024 கைதுசெய்யப்பட்டு பிணையில் வெளியேவந்ததும் தெரியவந்தது. சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட டி-1 திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகாரளித்தும் வழக்கு பதிவுசெய்யாததால், நீதிமன்றம் மூலம் ஆர்டர் பெற்று எஃப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது. இதுவரை போலீசார் நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுத்தி வருகின்றனர். விஜய் ஆட்சி பொறுப்பேற்றதும் சட்டம் ஒழுங்கு சீராக்கப்படும் என்று கூறினார்கள். அவர் வென்று முதல்வராகியும் காவல் நிலையத்தில் வழக்கமான நிலையே தொடர்கின்றது'' என்றார். சிவகுமார் சொன்ன மூவரையும் நாம் தொடர்புகொண்டோம். அவர்கள் செல்போனை எடுக்கவில்லை.
இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான காவல் நிலைய உதவி ஆய்வாளர் சீனிவாசனைத் தொடர்புகொண்டோம். "சார் தற்போது சட்டசபை நடந்துவருவதால் இந்த வழக்கை விசாரிக்க திருவல்லிக்கேணி துணை ஆணையர் உத்தரவிடவில்லை. அவர்களை பிடிக்க தனியார் வாகனத்தில் தனிப்படையாக செல்லவேண்டும். அதற்கு போதிய போலீசார் இல்லை''’என்று கூறினார். தற்போதுதானே சட்டசபை கூட்டம் நடைபெறுகின்றது. அதற்கு முன்பு ஆறு மாதங்களாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்கு அவர் பதிலளிக்கவில்லை. ஆட்சிகள் மாறலாம், காவல் நிலையத்தில் காட்சிகள் மாறாதுபோலிருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)