சுத்திகரிப்பு நிலையம் தொடர்பான கலந்தாய்வில் சரமாரி கேள்வி! பொதுமக்கள், விவசாயிகளுக்கு பாதிப்பு வரக்கூடாது

பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன் பாளையம் அருகே கழிவுநீர் மற்றும் மனித கழிவு சுத்திகரிப்பு நிலையம் தொடர்பான கலந்தாய்வு கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்று சரமாரி கேள்வி எழுப்பினர்.
கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு குடியிருப்புகள், நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பள்ளங்களில் வழிந்தோடி, முக்கிய நீர் ஆதாரங்களில் கலக்கிறது.
இதனால் கொசுக்கள் பெருகி, சுற்றுப்புற சூழல் பாதிக்கிறது. மேலும், கழிவுநீர் தேக்கத்தால், நிலத்தடி நீர் பாதிக்கிறது. பிரச்சனைக்கு தீர்வு காண நகராட்சிகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த திட்டம் சத்தியமங்கலத்தில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. மனித கழிவு மற்றும் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து வெளியேற்றுவதால், நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே கழிவு நீர் சேர்வது முழுமையாக தடுக்கப்படும். நகராட்சி முழுவதும் ஆரோக்கியமான சூழல் உருவாகும்.
இதுகுறித்து மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் தானு மூர்த்தி, மண்டல நிர்வாக இன்ஜினியர் ரகுநாத், கூடலூர் நகராட்சி தலைவர் அறிவரசு, ஆணையாளர் கோபிநாத், நகராட்சி இன்ஜினியர் சோமசுந்தரம் ஆகியோர் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.
இதில், அதிகாரிகள் பேசுகையில், 'கூடலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் கழிவு நீர் அதிகமாக சேகரமாகும் இடங்களில் கழிவுநீர் தொட்டிகள் அமைத்து, அங்கிருந்து குழாய்கள் வாயிலாக கழிவு நீர், சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, தூய்மைப்படுத்தி தூய்மையான நீராக வெளியேற்றப்படும். இதற்காக மத்திய, மாநில அரசுகள், 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது. இதற்காக, 4 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் பொதுமக்களும், விவசாயிகளும் அதிகம் பயன் பெறுவர்' என்றனர்.
தொடர்ந்து நடந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் பல்வேறு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சியினர், தன்னார்வலர்கள் பல்வேறு கேள்விகள் எழுப்பினர்.
பெரும்பாலான பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், தாங்கள் சுத்திகரிப்பு நிலைய திட்டத்தை எதிர்க்கவில்லை. ஆனால், விவசாயம் அதிகம் உள்ள, 10வது வார்டில் இத்திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்றனர்.
இத்திட்டத்தை செயல்படுத்தும் போது கழிவு நீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு விவசாய நிலங்கள் அல்லது குடியிருப்புகள் பாதிக்கப்பட்டால், மாற்று வழி என்ன, மலையடிவாரப் பகுதிகளில் அமைக்கப்படும் இந்த கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தால் ஏற்படும் துர்நாற்றம் மற்றும் பிற சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு என்ன தீர்வு.
திட்டம் பாதுகாப்பானது என்பதற்கான தொழில் நுட்ப ஆவணங்களை நகராட்சி நிர்வாகம் வழங்க வேண்டும். இத்திட்டத்தால் விவசாய நிலம், நிலத்தடி நீர், மண்வளம், பொதுமக்களின் வாழ்வாதாரம் ஆகியவை பாதிக்க கூடாது' என்றனர்.
கூடலூர் நகராட்சி நிர்வாக அலுவலகத்தில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.