மாணவர்களின் சிந்தனை திறனை துாண்டும் ‘பட்டம் இதழ்’ சி.இ.ஓ., கார்த்திகா பேச்சு

கள்ளக்குறிச்சி: மாணவர்களின் சிந்தனை திறனை துாண்டும் வகையிலான செய்திகள், பொது அறிவு சார்ந்த தகவல்களை ‘பட்டம் இதழ்’ சுவாரசியாகவும், சிறப்பாகவும் வழங்குகிறது என சி.இ.ஓ., கார்த்திகா பேசினார்.
தியாகதுருகம் மவுண்ட்பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ‘தினமலர்’ நாளிதழ் சார்பில் நடந்த ‘பட்டம் இதழ்’ வினாடி – வினா போட்டியில் சி.இ.ஓ., கார்த்திகா பேசியதாவது: பட்டம் இதழ் மாணவர்களுக்காகவே உருவாக்கப்பட்டு வாரந்தோறும் 5 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. மாணவர்களின் சிந்தனை திறனை துாண்டும் வகையிலான செய்திகளையும், பொது அறிவு சார்ந்த தகவல்களையும் மிக சுவாரசியமாக, சிறப்பாக ‘பட்டம் இதழ்’ மூலமாக வழங்கப்படுகிறது. பொது அறிவு செய்திகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற பல்வேறு செய்திகளை மாணவர்கள் ஆர்வமுடன் வாசிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே ‘பட்டம் இதழ்’ தயாரிக்கப்படுகிறது.
இதை படிக்கும் மாணவர்கள் எவ்வளவு புரிந்து கொண்டார்கள் என்பதை வினாடி – வினா போட்டி மூலமாக தெரிந்து கொண்டு பரிசுகள் வழங்கப்படுகிறது. புத்தகம் மட்டுமே வாழ்க்கை அல்ல, அதிக வாசிப்பு இருக்கும் மாணவர்களுக்கு புத்தகம் சுமையாக தெரியாது. அதிக வாசிப்பு திறன் உள்ள மாணவர்களுக்கு கற்றல் என்பது மிக இனிமையானது. தினமும் புதுமையான விஷயங்களை மாணவர்களாகிய நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
புதிதாக ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் குழந்தைகளிடம் அதிகமாக உள்ளது. படிப்பதை அன்றாட வாழ்வுடன் தொடர்பு படுத்திக்கொள்ளுங்கள். இது போன்ற வாய்ப்புகளை பயன்படுத்தி மாணவர்கள் பிரகாசிக்க வேண்டும், இதற்கு ஆசிரியர்கள் சிறப்பாக வழிகாட்ட வேண்டும். மாணவர்களின் படைப்பாற்றலை மேன்மேலும் ஊக்குவிக்கும் வகையில் சிறப்பான நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தும் ‘தினமலர்’ நிறுவனத்திற்கு பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு சி.இ.ஓ., கார்த்திகா பேசினார்.