பள்ளி அளவில் கூடைப்பந்து லேடி சிவசாமி ‘சாம்பியன்’
சென்னை: சென்னை பள்ளிகள் அளவிலான கூடைப்பந்து போட்டியில், லேடி சிவசாமி ‘ஏ’ அணி, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.
லேடி சிவசாமி பள்ளி சார்பில், சென்னை பள்ளிகள் அளவிலான கூடைப்பந்து போட்டி, மயிலாப்பூர் பள்ளி வளாகத்தில் நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
போட்டியில், சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளின் அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 16 மாணவியர் அணிகள் மோதின.
ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக நடந்த ‘நாக் அவுட்’ சுற்றுகளில், திறமையை வெளிப்படுத்திய லேடி சிவசாமி பள்ளி, கோபாலபுரம் டி.ஏ.வி., செயின்ட் கேவின்ஸ் மற்றும் செங்கை அரசு பள்ளி அணிகள், ‘லீக்’ சுற்றுக்கு முன்னேறின.
இறுதிக்கட்ட லீக் போட்டியில், லேடி சிவசாமி ‘ஏ’ அணியும், ராயபுரம் செயின்ட் கேவின்ஸ் அணியும் மோதின.
இதில் புள்ளிகளை குவித்தபடி ஆதிக்கம் செலுத்திய லேடி சிவசாமி அணி, இறுதியில் 58 – 22 என்ற புள்ளிக்கணக்கில் அபார வெற்றி பெற்றது.
தொடர்ந்து நடந்த அனைத்து லீக் ஆட்டங்களின் முடிவிலும், அதிக வெற்றிகளுடன் முதலிடத்தை பிடித்த லேடி சிவசாமி ‘ஏ’ அணி, சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றது.
செங்கல்பட்டு அரசு பள்ளி இரண்டாவது இடத்தையும், செயின்ட் கேவின்ஸ் பள்ளி மூன்றாவது இடத்தையும், கோபாலபுரம் டி.ஏ.வி., பள்ளி நான்காவது இடத்தையும் பிடித்தன.
வெற்றி பெற்றவர்களுக்கு லேடி சிவாமி பள்ளி செயலர் ஸ்ரீதர், தலைமை ஆசிரியர் ஜானகி, பயிற்சியாளர் சம்பத் உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கினர்.