Crime, law and justice
கிரைம் செய்திகள்
செயின் பறிக்க முயன்றவருக்கு தர்ம அடி சூலூர் அடுத்த பாப்பம்பட்டியை சேர்ந்தவர் மனோஜ், 35. மளிகை கடை நடத்தி வருகிறார். அதே ஊரை சேர்ந்த கூலி தொழிலாளி மணிகண்டன், 43 நேற்று மதியம் கடைக்கு வந்துள்ளார். பல ஆண்டுகளாக பழக்கம் என்பதால் இருவரும் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது, திடீரென மணிகண்டன், மனோஜ் அணிந்திருந்த செயினை பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது. அவர் கூச்சல் போடவே அக்கம் பக்கத்தினர் திரண்டு, மணிகண்டனை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். தகவல் அறிந்து சூலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காயமடைந்த மணிகண்டனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மனோஜ் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.
குட்காவுடன் பெண் கைது குன்னத்தூர் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து எஸ்.ஐ. அழகேசன் தலைமையில், போலீசார், நேற்று மதியம் சோதனை நடத்தினர். இதில் 16 கிலோ குட்காவுடன் ஈஸ்வரி முருகேசன், 46. என்பவர் பிடிபட்டார். அவரிடம் இருந்து குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. ஈஸ்வரி முருகேசன் மீது வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி மீட்பு கோவை மாவட்டம் சூலூரை சேர்ந்தவர் ராஜலட்சுமி, 77. இவர் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் உள்ள வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு நேற்று மதியம் வந்தார். சாமி தரிசனம் செய்துவிட்டு, கோவிலின் அருகே உள்ள பவானி ஆற்று பாலத்தின் அடியில், தற்கொலை செய்வதற்காக தண்ணீரில் இறங்கினார். மூதாட்டி தண்ணீரில் மூழ்குவதை, அப்பகுதியில் ரோந்து பணியில் இருந்த லைப் காட்ஸ் போலீஸ் குழுவினர் பார்த்தனர். உடனடியாக ஆற்றில் குதித்து, மூதாட்டியை மீட்டு, முதலுதவி அளித்தனர். பின், அந்த மூதாட்டியின் மகன் ஆனந்தகுமார் என்பவரை போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். மூதாட்டி பத்திரமாக மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு போலீசார் மூதாட்டிக்கு அறிவுரை கூறி, அவரது மகனுடன் அனுப்பி வைத்தனர்.
நீலம்பூரில் இரவு பணிக்கு நடந்து சென்ற காவலாளி மயங்கி விழுந்து இறந்தார்.
திருநெல்வேலி மாவட்டம் மேலகரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன், 42. நீலம்பூர் பகுதியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, வேலைக்கு செல்வதற்காக, நீலம்பூரில் உள்ள தனியார் லாட்ஜ் வழியாக நடந்து சென்றார். அப்போது, திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, ஆம்புலன்ஸில் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து நீலம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.