குடிநீர் தொட்டி காட்சிப்பொருளாக இருக்கு! அதிகாரிகள் அலட்சியத்தால் அதிருப்தி
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, ஜமீன் கோட்டாம்பட்டியில் குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டுமென அப்பகுதி மக்கள், தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பினர்.
பொள்ளாச்சி அருகே, ஜமீன் கோட்டாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சக்தி நகர், அருட்செல்வபுரம், அப்துல்கலாம் நகர், பட்டத்தரசி நகர், யூனியன் நகர், யூனியன் விஸ்தரிப்பு, பிளாட்டினம் நகர், பவளம் நகர் உள்ளிட்ட பகுதிகளில், 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. ஆனால், கடந்த, 10 ஆண்டுகளாக குடிநீர் வசதியில்லை.
இப்பகுதியில், குடிநீர் தொட்டி கட்டப்பட்டு காட்சிப்பொருளாக மாறியது. இச்சூழலில், குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள், தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பினர்.
அனைத்து நல சங்க ஒருங்கிணைப்பாளர் அருண்பிரசாத் கூறியதாவது:
குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்க பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. அரசுக்கு வரி செலுத்துகிறோம். ஆனால், ஏன் இப்பகுதி புறக்கணிக்கப்படுகிறது என தெரியவில்லை.
பொள்ளாச்சி பகுதிகளுக்கு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தும் போது, எங்களது பகுதிக்கு மட்டும் ஏன் வினியோகம் செய்யப்படுவதில்லை என தெரியவில்லை. இது குறித்து அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்தியும் பிரச்னைக்கு தீர்வு கிடைக்காதது வேதனையாக உள்ளது.
குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தி முதல்வர் விஜய்க்கு கடிதம் அனுப்பி உள்ளோம். முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் விரைவில், மனித சங்கிலி நடத்தி கவன ஈர்ப்பு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு, கூறினார்.