ரயில் டிக்கெட்; ஸ்டேஷனில் குழப்பம்

திருப்பூர்: திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில், ஆன்லைன் மற்றும் ஆப்லைன் என இரு முறைகளில் டிக்கெட் பெறும் வசதி இருந்தும், தெளிவான அறிவிப்பு இல்லாததால் பயணிகள் குழப்பம் அடைகின்றனர்.
ரயில்வே ஸ்டேஷனில் இதுவரை 'கவுன்டரில்' பணம் செலுத்தி டிக்கெட் பெறும் நடைமுறை இருந்து வந்த நிலையில், தற்போது புதிய விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை வாயிலாக மட்டுமே டிக்கெட் வாங்க முடியும். பணம் செலுத்தி டிக்கெட் பெற விரும்பும் பயணிகள், 'வெண்டிங் மெஷினில்' வாங்கி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று ஆலப்புழா - தன்பாத் ரயிலில் பயணிக்க, 200க்கும் மேற்பட்ட வடமாநில பயணிகள் டிக்கெட் பெற நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பணம் செலுத்தி டிக்கெட் பெற்ற பின் ரயிலில் பயணத்தை தொடர்ந்தனர்.
டிக்கெட் கவுன்டரில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து, கவுன்டரை நெருங்கிய பின் டிஜிட்டல் பரிவர்த்தனையில் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்று சொல்வதால், பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர். அதேபோல், வெண்டிங் மெஷினில், டிஜிட்டல் பரிவர்த்தனையை முறை ஏற்பதில்லை என பயணிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே, டிக்கெட் பெறுவதற்கான இரு வேறு நடைமுறைகள் குறித்து பயணிகளுக்கு தெளிவான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எந்த கவுன்டரில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை, எந்த இடத்தில் பணம் செலுத்தி டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம் என்பதை தெளிவுபடுத்தும் வகையில் அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும்.