Politics
காசி யாத்திரை! பயணமும்,புனிதமும்...

பிந்து மாதவர் கோவில் உத்தரப் பிரதேசத்தின் புனித நகரமான காசியில், பஞ்சகங்கா காட் அருகே அமைந்துள்ள மிகப் பழமையான வைணவத் திருத்தலமாகும். இது காசியிலுள்ள "பஞ்ச மாதவ" விஷ்ணு தலங்களில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. எனவே காசி யாத்திரை செய்பவர்கள் பிந்து மாதவரை வழிபாடு செய்வது வழக்கம்.
புராணக் கதையின்படி, அக்னிபிந்து முனிவர் பஞ்சகங்கா காட் பகுதியில் கடுமையான தவம் செய்தார். அவரது பக்தியால் மகிழ்ந்த மகாவிஷ்ணு அங்கு நிரந்தரமாகத் தங்குவதாக அருள் வழங்கினார். அதனால் "அக்னிபிந்து'' என்ற பெயருடன் "மாதவ'' இணைந்து "பிந்து மாதவ்'' என்ற பெயர் ஏற்பட்டதாகக் கூறப் படுகிறது.
காசியில் இருந்த பழைய பிந்து மாதவ் கோவில் வட இந்தியாவின் மிகப் பிரம்மாண்டமான விஷ்ணு ஆலயங்களில் ஒன்றாக இருந்தது. முகலாய ஆட்சிக் காலத்தில் அந்தக் கோவில் இடிக்கப்பட்டதாக வரலாற்று ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. பின்னர் பக்தர்களாலும் மராத்திய அரசர்களாலும் தற்போதைய கோவில் மறுபடி கட்டப்பட்டது.
காசி யாத்திரை, காசி விஸ்வநாதர் தரிசனத்துடன் பிந்து மாதவ் பெருமாள் தரிசனமும் செய்தால் பூரணமடையும் என்று நம்பப்படுகிறது. இங்கு வழிபட்டால் மன அமைதி, செல்வ வளம் மற்றும் மோட்சம் கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.
கார்த்திகை மாதத்தில் நடைபெறும் தீபதானம் மற்றும் சிறப்பு பூஜைகள் மிகவும் பிரசித்தமானவை. அதிகாலைமுதல் இரவுவரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.
காசியின் கூட்ட நெரிசலுக்கு மத்தியில் அமைதியான ஆன்மிக அனுபவத்தை தரும் கோவிலாக பிந்து மாதவ் ஆலயம் அறியப்படுகிறது. பக்தர்கள் இங்கு ஆழ்ந்த மன அமைதியை உணரலாம். ஆனால் காசிக்கு செல்பவர்கள் நடக்கவும் படிகளில் ஏறவும் முன்கூட்டியே உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்தல் அவசியம்.
"காசியில் சிவனை தரிசிப்பது ஞானம் என்றால், பிந்து மாதவனை தரிசிப்பது அந்த ஞானத்தின் பரிபூரண அனுபவம்.''
அடுத்து காசியிலுள்ள ராம்நகர் கோட்டை பார்க்க வேண்டிய இடம். கோட்டையில் வியாச காசி கோவில் உள்ளது. அதன் சிறப்பு என்னவென்றால், அங்கு உள்ள லிங்கங்கள் நேரடியாக வேத வியாசர் அவர்களுடன் தொடர்புபடுத்தப்படுகின்றன.
புராண மரபின்படி, காசியில் இருந்து வெளியேறிய பிறகு வியாசர் கங்கையின் கிழக்குக் கரையில் (இன்றைய ராம்நகர்) தங்கி தவம் செய்து சிவனை வழிபட்டதாக நம்பப்படுகிறது. அந்த இடமே பின்னர் "வியாச காசி'' என்று அழைக்கப் பட்டது.
ராம்நகர் கோட்டைக்குள் உள்ள வியாசர் கோவிலில் காணப்படும் லிங்கங்கள் சாதாரண சிவலிங்கம் அல்ல. மரபின்படி அங்கு மூன்று லிங்கங்கள் உள்ளன:
வியாசரை குறிக்கும் லிங்கம் அவரது மகனான சுகதேவர் அவர்களை குறிக்கும் லிங்கம் காசி விஸ்வநாதர் கோவில் அவர்களை குறிக்கும் சிவலிங்கம் இவை செம்புக் கவசத்தால் மூடப்பட்டுள்ளது.
இந்தத் தலம் வியாசர் மகாபாரதம் மற்றும் வேதங்களின் தொகுப்புப் பணிகளை மேற்கொண்ட புனித இடமாக உள்ளூர் மரபில் போற்றப்படுகிறது. காசியில் பார்க்கவேண்டிய கோவில்களின் வரிசை பட்டியல் மிக நீளமானது. சாட்சி விநாயகர் (சாக்ஷி விநாயகர்) என்பது காசியில் மிகவும் முக்கியமான விநாயகர் திருத்தலங்களில் ஒன்றாகும்.
சாட்சி விநாயகர் காசிக்கு வரும் பக்தர்கள் செய்த புண்ணியங்கள், வழிபாடுகள் மற்றும் யாத்திரைகளுக்கு சாட்சியாக இருப்பவர் என்பதால் "சாட்சி விநாயகர்'' என்று அழைக்கப்படுகிறார்.
காசி யாத்திரை செய்யும் பக்தர்கள் முதலில் விஸ்வநாதரை தரிசிப்பதற்கு முன்போ அல்லது பின்போ சாட்சி விநாயகரை தரிசிப்பது வழக்கம்.
பக்தர் காசியில் செய்த தர்மங்கள், பூஜைகள், தானங்கள் அனைத்தையும் விநாயகர் பதிவு செய்து சாட்சியாக நிற்பார் என்பது நம்பிக்கை. யாத்திரை நிறைவு பெற்றதற்கான சாட்சியாகவும் இவர் கருதப்படுகிறார்.
"காசி யாத்திரை பலனை முழுமையாகப் பெறவும், வாழ்க்கையில் செய்த நற்செயல்களுக்கு தெய்வீக சாட்சியாக அருள்புரியவும்'' சாட்சி விநாயகரை வழிபடுகின்றனர்.
காசியிலுள்ள துண்டி விநாயகர், சாட்சி விநாயகர், அவிமுக்த விநாயகர் ஆகிய மூன்று விநாயகர் தரிசனங்களும் மிகவும் சிறப்புடையவை என்று காசி மரபு கூறுகிறது.
காசி விஸ்வநாதர் கோவில், அன்னபூரணி கோவில், விசாலாட்சி கோவில், வாராகி கோவில், பிந்து மாதவர் கோவில், நேபாளி கோவில், சங்கட் மோட்சன் அனுமன். துண்டி விநாயகர், சாட்சி விநாயகர், சிக்ரா நந்தவனம், படா மோட்சன், சீதா மந்திர், காளி மந்திர், சோகி அம்மன் கோவில், துர்கா கோவில் என்று நிறைய கோவில்கள் உள்ளன. இறுதியாக கால பைரவரை பார்த்து வணங்கி விட்டால் அன்று இரவு காசியில் தங்கக்கூடாது என்பது ஐதீகம்.
காசி விஸ்வநாதர் தரிசனம் முடித்து கயா புத்த கயா அலகாபாத் திரிவேணி சங்கமம் அயோத்தி சென்றுவருவது வழக்கம். திரிவேணி சங்கமதில் நீராட வேண்டுமெனில் அலகாபாத் என்னும் பிரயாகையில் கங்கை யமுனை சரஸ்வதி மூன்றும் சங்கமிக்கும் இடத்தில் நதிகளுக்கு பூஜை செய்ய படகில் செல்ல வேண்டும். குகன் வம்சத்தவர் படகோட்டிகளாக இருப்பதாக சொல்கிறார்கள்.
சரஸ்வதி பற்றி விளக்கம் சொல்கையில் பெண்கள் மூன்று கால் பிரித்து சடை போடும்போது பின்னல் எப்படி இரண்டு கால் மட்டும் கண்ணுக்கு தெரிகிறதோ அதுபோலத்தான் இதுவும் என்று கூறி ஆச்சரியப் பட வைக்கிறார்கள்.
சீகல் பறவைகள் நதி எங்கும் பரந்து திரிகின்றன. அவை வருடத்தில் நான்கு மாதங்கள் இங்கு இருக்கும் . ஜோடி பறவைகள் இங்கு வந்து தங்கி இனப் பெருக்கம் செய்யும் என்பதை அவை தேன் நிலவு கொண்டாடுவதாக படகோட்டிகள் ரசிக்கும்படி நமக்கு விளக்கும் படகோட்டிகள் குகன் வம்சத்தவர் என்று சொன்னால் நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லைதானே.
அது மட்டுமின்றி மூன்று நதி சங்கமிக்கும் இடத்தில் மூன்று போட்டுகளை நிறுத்தி வைத்து 50 அடி ஆழ நீரில் பயமின்றி குளிக்க மரக்கட்டை பொருத்தி அதில் கயிறு கட்டிவைத்து இருந்த இடத்தில் இரண்டு பேர் உதவிட படகோட்டி நம்மை இறக்கிவிட்டு நன்கு மூழ்கி குளிக்க உதவி செய்கிறார்கள்.
அம்மா பயப்படாதீங்க உங்கள் பிள்ளை மாதிரி நான் என்று சொல்லி நம்மை இறக்கிவிட்டு அருகில் பாதுகாப்பாக நின்று குளித்தபின் இரண்டு கைகளையும் பிடித்து அப்படியே மேலே தூக்கி அமரவைத்து பின் தம்பதி பூஜை செய்ய சொல்கிறார்கள்.
நீர்தான் நமக்கு ஆதாரம். எனவே திரிவேணி சங்கமத்தில் பிள்ளையாரை மஞ்சளில் ஆவாகனம் செய்து பூஜைக்கான சங்கல்பம் செய்து மனைவி கணவருக்கு முதலில் பாத பூஜை செய்ய வேண்டும். பிறகு மனைவி கணவன் மடியில் அமர கணவன் மனைவிக்கு தலை வாரிபின்னல் இடவேண்டும்.
அதன்பின் கணவர் அந்த பின்னல் நுனியில் கத்திரி கொண்டு கத்தரித்து அந்த முடியை மஞ்சள் குங்குமம் அட்சதை மூன்றிலும் சேர்த்து திரட்டி மூன்று நதி சங்கமிக்கும் இடத்தில் விட்டு பூ அட்சதை மஞ்சள் குங்குமம் நீர் இவற்றை நீரில் விட்டு பூஜை செய்ய வேண்டும்.
அதன்பின் மீண்டும் கரைக்கு வந்து அருகிலுள்ள கோவில்களை வணங்கி பின் வேணி மாதவரை வணங்கி வழிபடவேண்டும். வேணி மாதவ் பெருமாள் என்பது மகாவிஷ்ணுவின் மிகவும் புனிதமான வடிவங்களில் ஒன்றாகும். இந்தத் திருத்தலம் உத்தரப் பிரதேச மாநிலத்தின் பிரயாகை நகரில், திரிவேணி சங்கமத்திற்கு அருகிலுள்ள தராகஞ்ச் பகுதியில் அமைந்துள்ளது. இது பிரயாகராஜின் புகழ்பெற்ற துவாதச மாதவ (12 மாதவ) திருத்தலங்களில் முதன்மையானது என்று புராணங்கள் கூறுகின்றன.
மத்ஸ்ய புராணம், பத்ம புராணம் மற்றும் அக்னி புராணம் ஆகியவற்றின்படி, கஜகர்ணன் என்ற அரக்கன் கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகளின் புனித நீர்களை விழுங்கியபோது, மகாவிஷ்ணு சுதர்சன சக்கரத்தால் அவனை அழித்து நதிகளை மீட்டார். அதன் பின்னர் விஷ்ணு பிரயாகத்தில் வேணி மாதவராகத் தங்கியதாகக் கூறப்படுகிறது.
திரிவேணி சங்கமத்தில் நீராடிய பிறகு வேணி மாதவரை தரிசித்தால்தான் யாத்திரை முழுமை பெறும் என்று புராணங்கள் கூறுகின்றன. பிரயாகத்தின் அதிபதி தெய்வமாக வேணி மாதவர் போற்றப்படுகிறார். செல்வம், ஆன்மிக முன்னேற்றம் மற்றும் விஷ்ணு அருள் கிடைக்கும் தலமாகக் கருதப்படுகிறது. தற்போதைய கோவில் பல நூற்றாண்டுகள் பழமையானதாகக் கருதப்படுகிறது.
சைதன்ய மகா பிரபு இத்தலத்தில் பக்திப் பரவசத்தில் கீர்த்தனம் செய்ததாகவும், மீராபாய் இங்கு பக்திப் பாடல்கள் பாடியதாகவும் பாரம்பரியக் குறிப்புகள் கூறுகின்றன.
மகா கும்பமேளா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வேணி மாதவரை தரிசிக்க வருகின்றனர். சமீப ஆண்டுகளில் பிரயாகராஜில் நடைபெற்ற மேம்பாட்டு பணிகளின் ஒரு பகுதியாக துவாதச மாதவ் திருத்தலங்களும் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
"கங்கையில் நீராடுவது உடலைத் தூய்மைப்படுத்தும்; வேணி மாதவனைத் தரிசிப்பது உள்ளத்தைத் தூய்மைப்படுத்தும். வேணி மாதவரின் தனிச்சிறப்பு. துவாதச மாதவர்களில் வேணி மாதவரே பிரதான தெய்வமாகக் கருதப்படுகிறார். பிரயாகத் தலத்தின் காவல் தெய்வமாகவும், திரிவேணி சங்கமத்தின் அதிபதியாகவும் போற்றப் படுகிறார்.''
கயாவில் பித்ருக்களுக்கு திதி கொடுத்து பல்குணி நதியில் நீராடி வணங்க வேண்டும். பிடித்த காய், கனி, இலை இவை மூன்றையும் விட்டுவிட்டு வரவேண்டும். திரிவேணி சங்கமத்தில் கங்கா தீர்த்தம் எடுத்து கொண்டு வரவேண்டும். அதை இராமேஸ்வரம் சென்று அங்கு லிங்கத்துக்கு அபிசேகம் செய்ய வேண்டும். பின் மதுரை மீனாக்ஷியை தரிசிக்க யாத்திரை நிறைவுறும்.
நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் (செட்டியார்கள்) வாரணாசி காசி விஸ்வநாதர் கோவிலுக்கு தினமும் மூன்று வேளை பூசைப் பொருட்களையும், பூக்களையும் தங்களது காசி நகரத்தார் சத்திரம் மூலமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லும் பாரம்பரியமான வழிபாட்டு முறையே "சம்போ'' என அழைக்கப்படுகிறது. நகரத்தார்கள் கி.பி. 1813 முதல் இன்றும் தங்குதடையின்றி இப்பணியைச் செய்து வருகின்றனர்.
காசி விஸ்வநாதருக்குரிய அபிஷேகப் பொருட்கள் மற்றும் பூ மாலைகள், நகரத்தார் சத்திரத்தில் இருந்து மூங்கில் அல்லது வெள்ளி கூடைகளில் வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகின்றன. இந்த ஊர்வலத்தின்போது, பக்தர்கள் "சம்போ சம்போ சங்கர மகாதேவா'' என்று முழக்கமிட்டபடி செல்வதால் இது "சம்போ' என்றே அழைக்கப்படுகிறது. காசிக்குச் செல்லும் பக்தர்கள் தங்கி வழிபட "நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரம்' என்ற பிரத்யேக சத்திரம் அமைக்கப்பட்டு, பல ஆண்டுகளாக தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது. கோவிலுக்கு மிக அருகில் இருப்பதால் முன்கூட்டியே பதிவு செய்துகொண்டு அங்கும் காசிக்கு செல்பவர்கள் தங்கிக் கொள்ளலாம். சம்போவுடன் செல்லும்போது அருகில் இருந்து விசுவநாத அபிஷேகம் பார்க்கலாம். ஆனால் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே அனுமதிப்பார்கள்.
காசிக்கு போன முதல் நாள் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல இருக்கும். தொட்டது எல்லாவற்றுக்கும் காசு கேட்பார்கள். நமக்கு காசி புரிந்ததும் பொறுமையாக நிதானமாக கும்பிட ஆரம்பிக்க தர்ம தரிசனம் செய்தால் நிம்மதியாக இருக்கும்.
காசியில் ஏக முக உருத்திராட்சம் தெருவோரக் கடைகளில் கிடைக்கும். அதில் சூலம் நாகம் சிவலிங்கம் இவையனைத்தும் இயற்கையில் காணப்படும். அதை சரி பார்த்து வாங்க வேண்டும். ருத்திராட்ச மாலை, காசி கயிறு, தீர்த்த சொம்பு காசி பூணூல் காசியிலும், தர்ப்பணம் செய்ய விஷ்ணு பாதம் உள்ள தாமிரத் தட்டு பஞ்ச பாத்திரம் கயாவிலும் வாங்கி வரலாம்.
கடுகெண்ணை சேர்த்த உணவுப் பொருட்களை உண்பதை தவிர்க்கவும். காசியில் லஸ்ஸி அருமையாக இருக்கும். பனாரஸ் பட்டு சாரநாத் செல்லும்போது வாங்கலாம். பேக்டரி அவுட்லெட்களில் விலை குறைவாக கிடைக்கும்.
எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்த மகிழ்வில் காசியைவிட்டு கிளம்புகையில் ஆனந்தமான அந்த கங்கைக் கரையை விட்டுவிட்டு வர மனமின்றி நாம் வேறு வழியின்றி வீடு திரும்புவோம்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)