Economy, business and finance
₹50 ஆயிரம் முதலீடு... கைக்கு வந்தது நஷ்டம்... விழுப்புரம் வெண்டை விவசாயிகளுக்கு அடி மேல் அடி

500 ஏக்கருக்கும் அதிகமான வெண்டை பயிர்கள் எல் நினோ விளைவால் ஏற்பட்ட கடும் கோடை வெயில் மற்றும் பூச்சித் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்டத்தில் பிடாகம், வேலியம்பாக்கம், அத்தியூர், திருக்கை உள்ளிட்ட பகுதிகளில் வழக்கமாக 500 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் சாகுபடி செய்யப்படும் வெண்டை பயிர்கள், தற்போது எல் நினோ விளைவால் ஏற்பட்ட கடும் கோடை வெயில் மற்றும் பூச்சித் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் வெண்டை வயல்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
பருவநிலை மாற்றத்தின் அச்சுறுத்தலான 'எல் நினோ'வின் விளைவாக, வழக்கத்தை விட அதிகரித்துள்ள கோடை வெயில், இப்பகுதியில் வெண்டை சாகுபடியை வெகுவாகப் பாதித்துள்ளது. கடந்த ஆண்டு ஏக்கருக்கு ₹50,000 வரை முதலீடு செய்து லாபம் ஈட்டிய விவசாயிகள், இந்த ஆண்டு நோய்த் தாக்குதலால் கடும் நஷ்டத்தைச் சந்திப்பதாக சிவ கிருஷ்ணன் என்ற விவசாயி தெரிவித்துள்ளார்.
தற்போது வெண்டை பயிர்களில் செம்பேன், சாறு உறிஞ்சும் பூச்சி, தத்துப் பூச்சி, மாவுப் பூச்சி மற்றும் வெள்ளை ஈ ஆகியவற்றின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் செடிகளின் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி, வளர்ச்சி குன்றி, மொட்டு, பூ மற்றும் பிஞ்சுகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளது. விவசாயிகள் அளித்த தகவலின் பேரில், தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் வெங்கடேசன் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். வெயிலின் தாக்கத்தைச் சமாளித்து மகசூலை உயர்த்த சில வழிமுறைகளை விவசாயிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
தோட்டக்கலைத் துறை பரிந்துரைத்த வழிமுறைகளில் சீரான நீர் பாசனம், மண்ணின் ஈரப்பதத்தைத் தக்கவைக்க நிலப் போர்வை (Mulching) பயன்படுத்துதல், வெள்ளை ஈ மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த மஞ்சள் ஒட்டும் பொறிகளை அமைத்தல், மற்றும் பயிரின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உயிரியல் உரங்களை மட்டுமே பயன்படுத்துதல் ஆகியவை அடங்கும். இந்த தொழில்நுட்ப முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் வெயிலின் தாக்கத்தை எதிர்கொண்டு, வெண்டை சாகுபடியில் மீண்டும் நல்ல மகசூலும் லாபமும் பெற முடியும் எனத் தோட்டக்கலைத் துறை தெரிவித்துள்ளது.
