சாலையோர வியாபாரிகளே! வங்கி கடன் பெற அழைப்பு
உடுமலை: உடுமலை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், சாலையோரம் வியாபாரம் செய்வோர், சைக்கிள் , தள்ளுவண்டி வியாபாரிகள் மற்றும் கூடைகளில் சுமந்து வீதி, வீதியாக விற்பனை செய்வோருக்கு, மத்திய அரசின் பி.எம்., ஸ்வாநிதி திட்டத்தின் கீழ், வங்கி கடன் பெறுவதற்கான சிறப்பு முகாம், நகராட்சி அலுவலகத்தில் நடந்து வருகிறது.
வரும், 30ம் தேதி வரை நடக்கும் முகாமில், வியாபாரிகளுக்கு முதல் தவணையாக, ரூ.15 ஆயிரம், 2ம் தவணையாக, ரூ.25 ஆயிரம் மற்றும் மூன்றாம் தவணையாக, ரூ.50 ஆயிரம் வரை வங்கிகள் வாயிலாக பிணையில்லா கடன் வழங்கப்படுகிறது.
எனவே, ஆதார் அட்டை நகல், வங்கிக்கணக்கு புத்தகம், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் ஆகியவற்றுடன் நேரில் வந்து விண்ணப்பிக்கலாம்.
இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து கடன் பெறுபவர்களுக்கு மட்டுமே, அடையாள அட்டை, வணிக பயன்பாட்டிற்கான கடன் அட்டை மற்றும் பிற நலத்திட்ட உதவிகள் கிடைக்கும்.
எனவே, சாலையோர வியாபாரிகள் இம்முகாமை பயன்படுத்திக்கொள்ளுமாறு, நகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.