சாலையோர வியாபாரிகளுக்கு கடன் 15ம் தேதி சிறப்பு முகாம் துவக்கம்
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், ‘பி.எம். ஸ்வாநிதி’ திட்டத்தின் கீழ் வட்டியில்லா கடனுதவி வழங்கப்பட உள்ளது.
இதற்கான சிறப்பு முகாம் வரும் 15, 16, 17 மற்றும் 22, 23, 24-ம் தேதிகளில் காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை, பங்களா ஸ்டாப் பாரதியார் வணிக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார மையம் மற்றும் வாலிபாளையம் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் நடக்கிறது.
முதல் கடனாக ரூ.15 ஆயிரம், இரண்டாவது கடனாக ரூ.25 ஆயிரம், மூன்றாவது கடனாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். மூன்றாவது கடனுக்கு தகுதியானவர்களுக்கு ரூ.30 ஆயிரம் வரம்பில் கிரெடிட் கார்டும் வழங்கப்படும். கடன் தவணையை உரிய காலத்தில் செலுத்துவோருக்கு வட்டி சலுகை வழங்கப்படும்.
தகுதியுள்ள வியாபாரிகள் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல்போன், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களுடன் முகாமில் பங்கேற்கலாம். சாலையோர வியாபாரிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் அமித் தெரிவித்துள்ளார்.