Arts, culture, entertainment and media
பள்ளி துாய்மை பணியாளர்களுக்கு ஊதியம் ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்
கோத்தகிரி: ‘அரசு பள்ளிகளில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும்,’ என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் செல்வி தலைமை வகித்தார். மாவட்ட பொது செயலாளர் ஜெயசீலன், மாவட்ட பொருளாளர் தினகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விபரம்:
மாவட்டத்தில் அரசு தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கான ஊதியம், கடந்து நான்கு ஆண்டுகளாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.
நடப்பாண்டு ஜன., மாதம் முதல் 8 மாதம் ஊதியம் நிலுவையில் உள்ள நிலையில், இரண்டு மாத தொகை மட்டும் கடந்த ஜூலை மாதத்தில் வழங்கப்பட்டது. இதனால், தூய்மை பணியாளர்கள் பணி செய்வதில் சிரமம் உள்ளது. நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இத்தொகை நிறுத்தப்பட்டுள்ளது.
நகராட்சி வாயிலாக, பணியாளர்களும் நியமிக்கப்படுவதில்லை. இதனால், நகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளில் கழிவறை உள்ளிட்ட தூய்மை பணிகள் தடைபட்டு, நோய் தொற்று அபாயம் உள்ளது. பல பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களே தங்கள் ஊதியத்தில் இருந்து, சம்பளம் வழங்கும் நிலை உள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் அனைத்து ஒன்றியங்களிலும், ஊராட்சி, பேரூராட்சி, மற்றும் நகராட்சி என்ற வேறுபாடுகள் இல்லாமல், அனைத்து பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கி, பள்ளி தூய்மை பணி பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.