Religion
செல்லியம்மன், துலுக்காணத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
அச்சிறுபாக்கம், செப். 18– - உத்தமநல்லுார் செல்லியம்மன், ஆப்பூர் துலுக்காணத்தம்மன் கோவில்களில்
உத்தமநல்லுார் செல்லியம்மன், ஆப்பூர் துலுக்காணத்தம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம் விமரிசையாக நேற்று நடந்தது.
உத்தமநல்லுார் கிராமத்தில் பழமை வாய்ந்த செல்லியம்மன், தண்டு மாரியம்மன், பொன்னியம்மன் கோவில்கள் உள்ளன. இக்கோவிலில், சில ஆண்டுகளாக திருப்பணி மேற்கொண்டனர். திருப்பணிகள் முடிந்ததை அடுத்து, கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள், கடந்த 16ம் தேதி தொடங்கின.
தொடர்ந்து, கணபதி பூஜை, விக்னேஸ்வர பூஜை, நவக்கிரக பூஜை, கோ பூஜை நடந்தன. நேற்று காலை 9:00 மணிக்கு செல்லியம்மன் கோவில் கோபுர விமானத்திற்கும், 9:15 மணிக்கு மூலவருக்கும் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
பின், 9:30 மணிக்கு தண்டு மாரியம்மன் கோவில் கோபுர கலசத்திற்கும், பொன்னியம்மன் கோபுர காலத்திற்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில், உத்தமநல்லுார் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் வசிக்கும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.
சிங்கபெருமாள் கோவில் சிங்கபெருமாள் கோவில் அடுத்த ஆப்பூர் கிராமத்தில் பழமையான துலுக்காணத்தம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் யாகசாலை பூஜை, கோ பூஜை உள்ளிட்டவையும், நேற்று காலை கணபதி ஹோமம் உள்ளிட்டவை நடந்தது.
இதையடுத்து, கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. இதில் ஆப்பூர், சேந்தமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.