Arts, culture, entertainment and media
குடிநீர் வினியோகம் இல்லாததால் பி.டி.ஓ., அலுவலகம் முற்றுகை
திருவாலங்காடு: ஜே.எஸ்.ராமாபுரம் கிராமத்தில், சீரான குடிநீர் வினியோகம் செய்யாததை கண்டித்து, அப்பகுதி மக்கள் பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
திருவாலங்காடு ஒன்றியம் பெரியகளக்காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்டது ஜே.எஸ்.ராமாபுரம் கிராமம். 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு, 15 நாட்களாக குடிநீர் வினியோகம் சீராக இல்லை என, மக்கள் குற்றஞ்சாட்டி வந்தனர்.
இந்நிலையில், அதிருப்தியடைந்த 30க்கும் மேற்பட்ட பெண்கள், நேற்று காலை 11:30 மணியளவில், திருவாலங்காடு பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து, ஜே.எஸ்.ராமாபுரம் மக்கள் கூறுகையில், ‘குடிநீர் சரியாக வரவில்லை. ஊராட்சி செயலரிடம் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. விவசாய பணிகளுக்கு சென்று வீட்டிற்கு வந்தால் குடிக்க தண்ணீர் இல்லாமல் சிரமப்படுகிறோம்.
‘எங்கள் பகுதியில் குடிநீர் குழாயை சீரமைத்து, சீரான குடிநீர் வினியோகம் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். இதுகுறித்து, பி.டி.ஓ., அலுவலக அதிகாரி கூறுகையில், ‘இரண்டு நாட்களுக்குள் சீரான குடிநீர் வினியோகம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்’ என்றார்.
