Arts, culture, entertainment and media
குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் தண்டையார்பேட்டையில் போராட்டம்

தண்டையார்பேட்டை:குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் தண்டையார்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புழல் பகுதியில் புதைக்கப்பட்ட குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை, சரி செய்யும் பணி தொடர்ந்து நடக்கிறது. இப்பணியால், குடிநீர் விநியோகம் பல பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளது.
தண்டையார்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட, 40வது வார்டு மாதா கோவில் சந்தில், 800க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, 2,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்ட நிலையில், இப்பகுதியில், சில தினங்களாக தண்ணீர் லாரியும் வராததால், குடியிருப்பு வாசிகள் சிரமத்துக்கு ஆளாகினர். நேற்று காலை 8:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை தண்ணீர் லாரிக்காக காத்திருந்தனர். லாரி வராததால், 30க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சேனியம்மன் கோவில் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடிநீர் கேட்டு அதிகாரியிடம் மொபைல் போனில், பேசியபோது, லாரி அனுப்புவதாக கூறிய நிலையில், லாரி வரவில்லை. தண்ணீர் இல்லாததால் பெண்கள், வேலைக்கு செல்வோர், மாணவ - மாணவியர், பள்ளி, கல்லுாரிக்கு செல்ல முடியாமல் சிரமம் அடைந்தனர்.
குடிநீர் குழாய் பழுதானதால், லாரியில் தண்ணீர் விநியோகம் செய்யப்படும் என, அறிவித்தனர். ஆனால், மூன்று நாட்களாக குழாயில் தண்ணீரும் வரவில்லை. இரு நாட்களாக லாரியும் வரவில்லை. இது குறித்து அதிகாரியிடம் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தண்ணீர் இல்லாமல் கழிப்பறை கூட செல்ல முடியாமல் நிலை உள்ளது. தினமும் காலை 6:00 முதல் 7:00 மணி வரை தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. காலை 8:00 மணி வரை நீடித்தால் வசதியாக இருக்கும். - சுதா, 39, தண்டையார்பேட்டை.
