Religion
புரட்டாசியில் அவசியம் தரிசிக்கவேண்டிய 5 பெருமாள்கள்!

புண்ணிய புரட்டாசியில் பெருமாள் கோயில்களை தரிசிப்பது மிகவும் விசேஷம். நாம் எண்ணிய காரியங்கள் எண்ணியபடி ஈடேற பெருமாள் தரிசனம் அருள்புரியும். அவ்வகையில் தமிழகத்தின் மிக அற்புதமான 5 பெருமாள் கோயில்களின் மகிமைகள் உங்களுக்காக!
நான்கு திவ்யதேசங்களை தரிசித்த புண்ணியம் கிடைக்கும்!
தலச்சிறப்பு: தேன்கனிக்கோட்டை - வேட்டையாடும் கோலத்தில் பெருமாள் எழுந்தருளியிருக்கும் தலம். அத்ரிமுனிவரின் சாபத்துக்கு ஆளான தேவகண்டன் என்ற யக்ஷன் புலியாக மாறினான். பிற்காலத்தில் கண்வ மகரிஷியின் தவத்துக்கும் இடையூறுகள் செய்தான். கண்வ மகரிஷி திருப்பதி பெருமாளைச் சரணடைந்தார்.
திருப்பதி பெருமாள் வேடவனாக கோலம் பூண்டு, கண்வர் இருக்கும் வனப்பகுதிக்கு வந்தார். அவரின் `டேங்கிணி’ என்ற கதாயுதத்தால் தலையில் அடிவாங்கி வீழ்ந்தது புலி; யக்ஷன் விமோசனம் பெற்றான். அவன் வேண்டிக் கொண்டபடி அங்கேயே கோயில் கொண்டார் பெருமாள். அந்த இடம் `டேங்கிணிபுரம்’ என்று பெயர்பெற்றது. அதுவே பிற்காலத்தில் தேன்கனிக்கோட்டை ஆனது என்பார்கள். பெருமாள், கண்வருக்கும் அருள்பாலித்தார். இன்றைக்கும் அவர் நம் பாவங்களை வேட்டையாடி மோட்சகதி அருள்வதாக ஐதிகம்.
வழிபாட்டுச் சிறப்பு: இங்கே பாஞ்சராத்ர ஆகம முறைப்படி தினப்பூஜைகள் நடைபெறுகின்றன. பெருமாளுக்குரிய திவ்ய தேசங்கள் நூற்றியெட்டில்... திருப்பதி திருமலை, திருவரங்கம், காஞ்சி, மேல்கோட்டை என்னும் திருநாராயணபுரம் ஆகிய 4 தலங்களின் சம்பிரதாயம் சங்கமித்த தலம் இது.
இங்கு மூலவரான பெருமாள் திருமலையிலிருந்து எழுந்தருளியவர். அதன் காரணமாக வேங்கடேச பெருமாளுக்கு உரிய சில வைபவங்கள் நடைபெறுகின்றன. ஆகமம், திருவரங்கத்தில் உள்ள முறைப்படி கடைப்பிடிக்கப்படுகிறது. அதனால்தான் பகல் பத்து, இராப் பத்து போன்ற உற்சவங்கள் பாஞ்சராத்ர ஆகமப்படி நடை பெறுகின்றன. காஞ்சி வரதர் கோயிலிருந்து உற்சவரை எழுந்தருளியச் செய்ததால், காஞ்சியில் நடைபெறக்கூடிய கருடசேவை போன்ற விசேஷ உற்சவங்களும் இங்கே நடைபெறு கின்றன.
திருநாராயணபுரத்திலிருந்து ஆயிஸ்வாமிகள் இந்தத் தலத்துக்கு எழுந்தருளியபடியால் திருநாராயணபுரம் சம்பிரதாயம் கடைப் பிடிக்கப் படுகிறது. அந்த வகையில் தேன்கனிக்கோட்டை தலத்துக்கு வந்து பெருமாளைச் சேவித்தால், நான்கு திவ்ய தேசங்களையும் சேவித்த பலன் கிடைக்கும் என்பது ஐதிகம்!
எப்படிச் செல்வது?: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து சுமார் 27 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது, தேன்கனிக்கோட்டை. ஓசூரில் தங்கும் வசதிகள் உள்ளன. அங்கிருந்து பேருந்து வசதி உள்ளது.
மூலவர்: ஶ்ரீகதிர் நரசிங்க பெருமாள்.
தலச் சிறப்பு: பழைமை வாய்ந்த திருக்கோயில் இது. இந்தப் பகுதியை ஆட்சி செய்த நாயக்க மன்னர்கள் பலரும் தினமும் ஆலயத்துக்கு வந்து கதிர் நரசிங்க பெருமாளை வழிபடுவது வழக்கமாம். கருவறையிலேயே சிவபெருமானும் லிங்க வடிவில் அருள்வது இக்கோயிலின் சிறப்பம் சம். ஆம்... ஹரியும் சிவனும் ஒரே கருவறையில் அருள்பாலிக் கின்றனர்.
கோயில் கருவறையை பிராகாரமாக வலம் வருவதற்காக, குகை போன்ற திருவண்ணாழி பிராகாரம் அமைந்துள்ளது.
வழிபாட்டுச் சிறப்பு: கதிர் நரசிங்க பெருமாளுக்கு, மாதந்தோறும் சுவாதி நட்சத்திர நாளில் திருமஞ்சனம் செய்து, பானகம், வடை மற்றும் பருப்பு கொண்டு நைவேத்தியம் செய்து வழிபட்டால், நினைத்தது நிறைவேறும்; நம் கவலையெல்லாம் தீரும். கமலவல்லித் தாயாருக்கு நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் திருமணப் பாக்கியம் கைகூடும்.
மூலவருக்கு எதிரே கருடாழ்வார்; இடப் புறத்தில் வீர மகா ஆஞ்சநேயர். அக்னி மூலையில் ஆஞ்சநேயர் இருப்பது விசேஷம் என்கின்றனர். இதனால் கடன் தொல்லை, புத்திர பாக்கியம், தீராத நோய் என எந்தக் குறையாக இருந்தாலும், ஆஞ்சநேயருக்கு வடை மாலை அல்லது வெற்றிலை மாலை சாத்தி வழிபட... பலன் கிட்டும் என்கின்றனர் பக்தர்கள்.
இங்கே... ஶ்ரீலட்சுமி, ஶ்ரீஹயக்கிரீவர், சக்கரத்தாழ்வார், பைரவர் ஆகியோருக் கும் சந்நிதிகள் உள்ளன. தேய்பிறை அஷ்டமி நாளில், பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
எப்படிச் செல்வது?: திண்டுக்கல் - பழநி செல்லும் சாலையில், திண்டுக்கல்லில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ள ரெட்டியார் சத்திரத்தில் அமைந்திருக்கிறது இந்த ஆலயம். பழநி மற்றும் திண்டுக்கல்லில் இருந்து பேருந்து வசதிகள் உண்டு
தலச் சிறப்பு: சிறு குன்றின் மீது அழகுற அமைந்திருக்கிறது ஆலயம். கருவறையில் இந்தத் தலத்தில் தேவி-பூதேவியுடன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் பெருமாள். இந்தக்கோயிலின் சிற்ப வேலைப்பாடுகளும் கல்வெட்டுகளும் சோழர் கால பாரம்பரியத்தை நினை வூட்டுகின்றன. பத்மாவதித் தாயாருக்கு சில வருடங்களுக்கு முன்புதான் தனிச் சந்நிதி அமைத்துள்ளனர்.
முற்காலத்தில், இந்தப் பகுதி வனமாக-மூலிகைகள் நிறைந்து காணப்பட்டதாம். இடையன் ஒருவன் தனது மாடுகளை இங்கே மேய்ச்சலுக்கு ஓட்டி வருவது வழக்கம். அந்தப் பசுக் கூட்டத்தில் ஒன்று, அனுதினமும் புற்று ஒன்றில் பால் சொரிந்து வந்தது. ஒருநாள் இதைக் கண்டு கோபம் கொண்ட இடையன், கையில் இருந்த கோலால் அந்த மாட்டை அடித்தான். அந்த அடி புற்றின் மீதும் விழுந்தது. அப்போது புற்றிலிருந்து சுயம்பு மூர்த்தமாக எழுந்தருளினா ராம் பெருமாள். இன்றைக்கும் பெருமாளின் வலத் தோளில், இடையன் அடித்ததால் ஏற்பட்ட தழும்பைக் காணலாம்!
இதன் பிறகு, பெருமாளின் சுயம்பு மூர்த்தத்தை இதே இடத்தில் பிரதிஷ்டை செய்து ஆலயம் அமைத்ததாக தல புராணம் கூறுகிறது. தலைக்கு தேய்த்துக் குளிப்பதற்காக அரப்பு அரைக்காயைத் தேடி, திருப்பதியில் இருந்து மூலிகைகள் நிறைந்த இந்த மலைப் பிரதேசத்துக்கு வந்தாராம் பெருமாள். எனவே, இந்தத் தலத்துக்கு ‘சின்னத் திருப்பதி’ என்று பெயர் வந்ததாகச் சொல்கின்றனர்!
வழிபாட்டுச் சிறப்பு: சனிக்கிழமைகளில் இந்தத் தலத்துக்கு வந்து இறைவனை வழிபட்டால், தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும்; பிரசன்ன வேங்கடரமண ஸ்வாமிக்கு பாலபிஷேகம் செய்து பிரார்த்தித்தால், விரைவில் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதிகம்.
எப்படிச் செல்வது?: சேலத்திலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது ஓமலூர். இங்கிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது சின்ன திருப்பதி. சேலம்- பெங்களூரு ரயில் மார்க்கத்தில், காருவள்ளி ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி, சிறிது தூரம் நடந்தால் இந்தப் பெருமாள் கோயிலை அடையலாம்.
வியாபாரம் செழிக்க வரம் தருவார் ஶ்ரீவேதநாராயணர்!
தாயார்: ஶ்ரீவேதவல்லித் தாயார், புவனவல்லித் தாயார்
தலச்சிறப்பு: இந்தத் தலம் முன்னொரு காலத்தில் வேதபுரி என்றும், ராஜேந்திர விண்ணகரம் என்றும் அழைக்கப்பட்டதாகச் சொல்கிறது ஸ்தல புராணம். காவிரிக்கும் கொள்ளிடத்துக்கும் நடுவே திருவரங்கம் திருத்தலம் இருப்பது போல், தாமிரபரணிக்கும் கடனா நதிக்கும் நடுவே அமைந்துள்ளது இந்தக் கோயில்!
சேர, சோழ, பாண்டிய மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்ட பிரமாண்ட ஆலயம்; பிருகு முனிவரும் மார்க்கண்டேய மகரிஷியும் தவமிருந்து திருமாலை வழிபட்டு, அருள் பெற்ற தலம். மூலவரான தேவி- பூதேவி சமேத வேதநாராயண பெருமாள், மூலிகைகளால் செய்யப்பட்ட வர்ணக் கலாப திவ்விய திருமேனியராக, சுதை வடிவில் தரிசனம் தருகிறார். தனிக்கோயிலில் வேதவல்லித் தாயாரும், புவனவல்லித் தாயாரும் காட்சி தருகின்றனர்.
இந்தத் தலத்துக்கு வந்த குலசேகர ஆழ்வார், வேதநாராயணரின் பேரழகில் திளைத்து, இங்கேயே தங்கி சேவையாற்றினார். பிறகு, அவர் இந்தத் தலத்திலேயே பரமபதம் அடைந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம். ஆழ்வார் திருவாராதனை செய்த சீதாபிராட்டி, லட்சுமணன் மற்றும் ராமனின் விக்கிரகத் திருமேனிகளை இன்றைக்கும் இந்தத் தலத்தில் தரிசிக்கலாம். குலசேகர ஆழ்வாருக்குக் கொடிமரத்துடன் கூடிய தனிச்சந்நிதி அமைந்துள்ளது. உற்ஸவரின் திருநாமம்- ராஜகோபால ஸ்வாமி.
வழிபாட்டுச் சிறப்பு: வேதநாராயணரை, புரட்டாசியில் வந்து வணங்கினால், கல்வி- கேள்விகளில் சிறந்து விளங்கலாம். திருமணத் தடை அகலும்; வியாபாரம் சிறக்கும் என்கின்றனர் பக்தர்கள். மூலவர் சந்நிதிக்கு எதிரில் பிள்ளைத் தொண்டுப் பாதை உள்ளது. சிறிய துளை போன்ற இந்தப் பாதையில், குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் நுழைந்து, பெருமாளைப் பிரார்த்தித்தால், விரைவில் பிள்ளை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்!
இங்கே இன்னொரு விசேஷம்... மண்டப விதானத்தில், 12 ராசிகளுக்கு உரிய கட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, இந்தத் தலத்துக்கு வந்து பிரார்த்தித்தால், கிரக தோஷங்கள் யாவும் விலகும் என்கின்றனர் பக்தர்கள்.
எப்படிச் செல்வது?: திருநெல்வேலியில் இருந்து சுமார் 35 கி.மீ. தொலைவில் உள்ளது அம்பாசமுத்திரம். இங்கிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது மன்னார்கோவில்.
திருப்பதி பிரார்த்தனையை இங்கே நிறைவேற்றலாம்!
தலச்சிறப்பு: மார்க்கண்டேய மகரிஷி, தமது தவப்பயனாக பூமிதேவியையே மகளாக வளர்க்கும் பாக்கியம் பெற்றார். பூமி தேவிக்கு உரிய பருவம் வந்ததும், முதியவர் வடிவில் வந்து அவளைப் பெண் கேட்டார் திருமால். முதலில் மறுத்தாலும் வந்திருப்பது பெருமாளே என்பதை அறிந்ததும் முனிவர் மனம் மகிழ்ந்தாராம்.
`தன் பெண்ணுக்குச் சரியாக உப்பு போட்டு கூடச் சமைக்கத் தெரியாதே’ என்று முனிவர் கூறியதால், தனக்கான பதார்த்தங்களில் உப்பு வேண்டாம் என்று அருள்பாலித்தாராம் திருமால். இன்றைக்கும் இந்தத் தலத்தில் திருமாலுக்கு உப்பில்லாத பண்டங்கள் மட்டுமே நைவேத்தியம் செய்யப்படுகின்றன. உப்பில்லாத பண்டங் களை விரும்பி ஏற்பதன் காரணமாகவே இங்கு அருள்புரியும் திருமாலுக்கு ‘உப்பிலி யப்பன்’ என்னும் திருநாமம் அமைந்ததாகக் கூறுவர்.
இங்கு எழுந்தருளியுள்ள உப்பிலியப்பர், கிழக்குத் திசை நோக்கி நின்ற நிலையிலும், பூமாதேவி வடதிசை நோக்கி அமர்ந்த நிலை யிலும் இருக்க, அவருக்கு எதிராக மார்க்கண்டேயர் தென் திசை நோக்கி அமர்ந்து கன்யாதானம் செய்து தருவது போன்ற நிலையில் காட்சி தருகிறார்.
வழிபாட்டுச் சிறப்பு: நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பொய்கை யாழ்வார், பேயாழ்வார் முதலிய ஆழ்வார்களால் பாடப்பெற்ற தலம் இது. குறிப்பாக நம்மாழ்வார் தனது பாடல் ஒன்றில், இந்தத் தலத்தின் திருமாலை ‘வேறு எவருக்கும் ஒப்பு இல்லாதவன்’ என்று போற்றிப் பாடியுள்ளார். இதன் காரணமாக, இத் திருக்கோயில் ஒப்பிலியப்பன் கோயில் என்றும், இங்கு உறையும் திருமால் ஒப்பிலியப்பர் என்றும் அழைக்கப்படுகிறார்.
திருப்பதிக்குச் செல்ல முடியாதவர்கள், அவருக்கு நேர்ந்து கொண்ட காணிக்கை களையோ, பிரார்த்தனைகளையோ இங்கே உப்பிலியப்பருக்கு நிறைவேற்றலாம் எனப் பெரியோர்கள் கூறுவர். இக்கோயில் விமானத்தின் பெயர், ‘சுத்தானந்தம்’. அதாவது, ‘சுத்த ஆனந்தம்’ என்பதாகும். திருப்பதி கோயிலின் விமானம் ‘ஆனந்தம்’ எனப்படுகிறது. அதனால், இத்தலத்தை, ‘தென்திருப்பதி’ என்றும் கூறுவர்!
எப்படிச் செல்வது?: கும்பகோணம் நகரில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது உப்பிலியப்பன் திருக்கோயில். ராகு தலமான திருநாகேஸ்வரம் தலத்துக்கு மிக அருகில் உள்ளது இக்கோயில்.
