Crime, law and justice
ரயில் மோதி முதியவர் பலி
அரியலுார் மாவட்டம், செந்துறை அடுத்த ஆர்.எஸ்.மாத்துாரைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 81; இவர் நேற்று காலை அப்பகுதியில் உள்ள ரயில் பாதையைக் கடந்தார். அப்போது சென்னை நோக்கிச் சென்ற பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் பன்னீர்செல்வம் சம்பவ இடத்திலேயே இறந்தார். விருத்தாசலம் ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கடலுார், முதுநகர் அடுத்த சுத்துக்குளம் பகுதியில் மதுவிலக்கு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் தனதுவ வீட்டில் மது பாட்டில் பதுக்கி விற்ற அண்ணாதுரை, 55; என்பவர் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்து, 30 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
காட்டுமன்னார்கோவில் அடுத்த உத்திரசோலையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் சிவக்குமார் மகன் மோகன்ராஜ், 24; கூலித் தொழிலாளி. இவரது வீட்டில் நிறுத்தியிருந்த அவர் பைக் கடந்த மாதம் காணாமல் போனது. இதுகுறித்த புகாரின் பேரில், காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்ததில், அரியலுார், கருடதெருவைச் சேர்ந்த செந்தில் பிரபாகரன் மகன் கிேஷார் 20; பைக் திருடியது தெரியவந்தது. உடன் அவரை கைது செய்து பைக்கை பறிமுதல் செய்தனர்.
சிதம்பரம், வல்லம்படுகையில் 'ராமதாஸ் பயர் ஒர்க்ஸ்' என்ற கடையின் உரிமை ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், அங்கு அனுமதியின்றி வாணவெடி மற்றும் நாட்டு வெடிகள் தயாரித்து விற்பனை செய்வதாக அண்ணாமலை நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் கவிதா சம்பவ இடத்திற்கு சென்று குறிஞ்சிப்பாடி அடுத்த பூவாணிக்குப்பம் சீனிவாசன் மகன் ரங்கராஜன், 29; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து, வெடிபொருட்களை பறிமுதல் செய்தனர்.
கடலுார், வண்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் முரளி மகன் அஜய், 24; இவர் மீது, கடலுார் முதுநகர் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது. இவ்வழக்கின் சாட்சியான பெண் ஒருவருக்கு திருப்பாதிரிப்புலியூர் சந்தோஷ்குமார், 35; இவரது நண்பர் ஹரிஹரன் ஆகியோர் உதவியாக உள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த அஜய், இவரது நண்பர்கள் வண்டிப்பாளையம் தினேஷ், 35; நேதாஜி, குணா, 34; ஆகியோர் சந்தோஷ்குமாரை தாக்கி, மிரட்டல் விடுத்தனர். திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து அஜய், தினேஷ், குணா ஆகியோரை கைது செய்து, நேதாஜியை தேடி வருகின்றனர்.