ஆத்துார் அணையை பலவீனப்படுத்தும் முயற்சியை அனுமதிக்க கூடாது: திண்டுக்கல் நீண்டகால வறட்சிக்கு தள்ளப்படும் அபாயம்
திண்டுக்கல்:ஆத்துார் காமராஜர் அணையை பலவீனப்படுத்தும் முயற்சியாக அணைப்பகுதியை ஒட்டி புதிதாக கிணறுகள் வெட்டிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் திண்டுக்கல் மாநகராட்சி நீண்டகால வறட்சிக்கு தள்ளப்படும் அபாயம் உருவாகி உள்ளது.
திண்டுக்கல் மாநகராட்சியின் பிரதான குடிநீர் ஆதாரமாக ஆத்துார் காமராஜர் அணை உள்ளது. 420 ஏக்கர் பரப்பளவு கொண்ட அணையில் 325 ஏக்கர் நீர்பிடிப்பு பகுதியாக உள்ளது. 23.5 அடி கொள்ளளவு கொண்ட அணையில் இருந்து தினசரி 14 முதல் 15 எம்.எல்.டி., நீரை சுத்திகரித்து மாநகராட்சி சப்ளை செய்தது.
இதற்காக அணைக்கு அருகே மாநகராட்சி சார்பில் 7 உறை கிணறுகள், 10 போர்வெல், நீர் உந்து நிலையம் உள்ளன. அணையில் இருந்து 30 கி.மீ., தொலைவில் திண்டுக்கல் உள்ள நிலையில் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ள வழித்தட கிராமங்கள், பேரூராட்சிகளான ஆத்துார், வக்கம்பட்டி, ஆரியநல்லுார், பிள்ளையார் நத்தம், சின்ன பள்ளப்பட்டி, பெரிய பள்ளப்பட்டி, பித்தளைப்பட்டி பகுதிகளுக்கு கூடுதலாக 1 முதல் 5 எம்.எல்.டி., நீரை மாநகராட்சி வழங்கியது.
தேவையின் அடிப்படையில் வைகை, காவிரி கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மூலம் திண்டுக்கல் மாவட்டத்திற்கு நீர் பெறப்பட்டாலும் ஆத்துார் அணையே ஒட்டுமொத்த மாநகராட்சிக்கும் குடிநீர் மூலதனமாக விளங்குகிறது.
பருவமழை இல்லாமல் நீர்மட்டம் சரிந்து ஆத்துார் அணை வறண்டது. வைகையிலும் நீர் இல்லாததால் திண்டுக்கல் மாவட்டத்திற்கு கூட்டுக் குடிநீர் திட்டத்தில் நீர் வழங்க முடியாது என அதிகாரிகள் கை விரித்தனர். தேவையை சமாளிக்க காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் தற்போது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நடக்கிறது.
அதே சமயத்தில் ஆத்துார் அணையை துார்வாரி, நீர்த்தேக்க கொள்ளளவை அதிகரிக்க கட்டமைப்பு செய்யவும், புதிய சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கவும் திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன.
ஆத்துார் தொகுதி சின்னாளப்பட்டி பேரூராட்சியினர் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை தவிர்த்து விட்டு பேரணை, ஆத்துார் அணை மூலம் குடிநீர் பெற்று வந்தனர்.
அணைகள் வறண்ட நிலையில் குடிநீர் தேவைக்காக ஆத்துார் அணையை ஒட்டி புதிதாக இரண்டு கிணறுகள் அமைத்துக் கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என கலெக்டர் துர்காவிடம் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனு தந்தனர்.மனுவை பரிசீலித்த கலெக்டர் புதிதாக 2 கிணறுகள் வெட்டிக்கொள்ள அனுமதி அளித்ததோடு, திட்டத்தை செயல்படுத்த வறட்சி நிதியும் ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார். இதை ஊரக வளர்ச்சி முகமை மூலமாக செயல்படுத்த பேரூராட்சி நிர்வாகம் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
திண்டுக்கல் மாநகராட்சியின் முழுக்கட்டுப்பாட்டில் இருக்கும் ஆத்துார் அணை சுற்றுப்பகுதிக்குள் புதிதாக கிணறு வெட்டுவது அணையின் நீர் பிடிப்பு, கொள்ளளவு தன்மையை மேலும் குறைத்து மாநகராட்சியை நீண்டகால வறட்சியை நோக்கி தள்ளும் அபாயத்தை உண்டாக்கும்.
ஏற்கனவே சட்டவிரோத குடிநீர் திருட்டு, வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு, நீர்வழித்தடம் மடை மாற்றம், ரூ.4 கோடி வரி பாக்கி என பல்வேறு சிக்கலுக்குள் ஆத்துார் காமராஜர் அணை சிக்கித் தவிக்கிறது.
எனவே அணையை பலவீனப்படுத்தும் முயற்சியை அனுமதிக்காமல் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் பேரூராட்சியின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.